Published:Updated:

உன் கண்ணில் நீர் வழிந்தால்! - சிறுகதை #MyVikatan

உன் கண்ணில் நீர் வழிந்தால்! - சிறுகதை #MyVikatan
உன் கண்ணில் நீர் வழிந்தால்! - சிறுகதை #MyVikatan

சத்யா தனது அலுவல்களை முடித்துவிட்டு அறையைவிட்டு சற்று காற்றோட்டமாக வெளியே வந்தான். ரயில்நிலைய நடைமேடையில் நடந்தான். நாற்பது வயதை நெருங்கிவிட்டான். ரயில்வே அதிகாரி. பள்ளிக்குச் செல்லும் மகன், தனியார் நிறுவன ஊழியரான மனைவி சரண்யா. இது அவனுடைய குடும்பம்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்! - சிறுகதை #MyVikatan


 

முன்மாலை நேரமென்பதால் பரபரப்பு ஏதுமின்றி கூட்டம் அளவாக இருந்தது. மின்சார ரயிலில் ஏறுவோரும், இறங்குவோரும், காத்திருப்போரும்... அவன் தினமும் காணும் ஒன்றுதான். நடைமேடையில் கல்லூரி மாணவிகள் சிறு குழுக்களாகப் பேசி சிரித்தபடி சென்றார்கள். சிலர் நடைமேடை இருக்கையில் ரயிலுக்காகக் காத்திருந்தார்கள்.

அப்போதுதான் அந்தப் பெண்ணை பார்த்தான் சத்யா.  

நடைமேடை இருக்கையின் மீது அமர்ந்திருந்தாள். கையில் புத்தக அளவில் ஒரு கருமை நிற எலெக்ட்ரானிக் திரையில் தன் விரலால் வேகமாகச் செயலாற்றிக்கொண்டிருந்தாள். சட்டென நிமிர்ந்தாள்..

``அண்ணா.. இந்த ட்ரெயின் எக்மோர் போகுமா?...” 

அங்கு வந்து நின்ற ரயிலைப் பார்த்து கேட்டாள். முகத்தில் தெரியும் வறுமையை தன் சிறு புன்னகையால் மறைக்க முயன்றாள். வயது இருபது அல்லது அதைக் கடந்திருக்கலாம். மாநிறத்தில், அதிகம் பராமரிக்கப்படாத எளிமையான ஓவியம்போல் இருந்தாள். முதுகில் சற்று அழுக்கேறிய பேக், சில தடிமனான புதிய புத்தகங்களை இருக்கையின் மேல் வைத்திருந்தாள்.

``ம்.. போகும்..” 

சத்யா சொன்ன பதிலுக்கு மீண்டும் தனது சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு மறு விநாடி எலெக்ட்ரானிக் திரையில் விரலை ஓடவிட்டாள். அதன்பின் அவள் நிமிரவில்லை. சத்யா அங்கிருந்து நகர்ந்தான். இருப்பினும் அந்த முகம் அவன் மனதிலிருந்து மறையவில்லை. அதன் காரணம் அதிலிருந்த சோகமா, அறியாமையா, வைராக்கியமா, கர்வமா அல்லது இவையெல்லாம் கலந்ததா என அவனுக்குப் புரியவில்லை. நினைவுகளில் ஆழ்ந்தான்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் சத்யபிரகாஷாக அவன் சென்னைக்கு வந்து இறங்கியபின் கண்ட சோதனைகளும் அவற்றை அவன் எதிர்கொண்ட நிகழ்வுகளும் நிழலாடின. பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டு போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி பெற்றது முதல் தள்ளுவண்டி உணவகத்தில் உண்ட உணவுக்குக் காசில்லாமல் தவித்தது வரை. இப்படியாகப் பல இன்னல்களைக் கடந்துதான் இன்று இந்தப் பதவியில் இருக்கிறான்.

பணிமுடிந்து வீட்டுக்கு வந்தும் அந்தப் பெண்ணின் முகமும், அவளின் அந்த  சிரிப்பும் அவனைவிட்டு அகலவில்லை. `அவளுடைய நிலை என்னவாக இருக்கும்?... கண்டிப்பாக நான் இருந்த நிலையைவிடக் கடினமாக இருக்கும். அவளின் தோற்றம், உடுத்தியிருந்த உடை, முதுகில் மாட்டியிருந்த அந்த அழுக்கு பேக் அவற்றையெல்லாம் கடந்து வெளிவந்த அந்த சிறு புன்னகை. அதில் இருந்த தன்னம்பிக்கை, வைராக்கியம் இவையெல்லாம் இன்றைய பெரும்பான்மை யுவதிகளிடம் அவன் காணாத ஒன்று. தனக்கு ஒரு தங்கை இருந்தால் அவள் இப்படிதான் இருந்திருப்பாள் என எண்ணிக்கொண்டான். மனம் ஏனோ கனத்தது.

அவள் கையிலிருந்த அந்த எலெக்ட்ரானிக் திரையில் அவள் செயல்பட்ட வேகம் இவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கண்டிப்பாக அவள் அதை ஒரு பகுதிநேர வேலையாகச் செய்கிறாள். ஆனால், என்ன வேலை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

மறுநாள் அதே நேரம் வரும்வரை அவனுடைய மனம் எதிலும் முழுமையாக ஈடுபடவில்லை. `இன்றும் அந்தப்பெண் அதே இடத்தில் இருப்பாளா?.. எழுந்து வெளியில் வந்தான். நடைமேடையில் நடந்தான். அதன் ஓரத்தில் ஒரு இருக்கையில்.. அவளேதான். அருகில் சென்றான். இவன் வந்ததைக் கவனிக்காமல் நேற்று போலவே இன்றும் இடைவிடாமல் அதே வேலையைச் செய்துகொண்டிருந்தாள். சில விநாடிகள் அருகிலேயே இவன் நிற்பதை அறிந்து சற்று நிமிர்ந்தாள். அதே தோற்றம்.

சத்யா அவளிடம் பேச்சுக்கொடுத்தான். அவளாக எதையும் கூறவில்லை. இவன் கேட்பதற்கு மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில் கொடுத்தாள். தன் நிலையை எடுத்துக்கூறி ஆறுதல் தேட விருப்பமில்லை போலும். அல்லது இந்த நிலையிலிருந்து என்னால் மீண்டுவர முடியும் என்ற கர்வத்தாலும் இருக்கலாம்.

அவள் பேசியதிலிருந்து சத்யா சில விவரங்களைத் தெரிந்துகொண்டான். அவள் பெயர் ஆனந்தி. செஞ்சி அருகே உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவள். சிறு வயதில் தந்தை மறைந்துவிட ஆனந்தியும் அவள் தம்பியும் அவளின் தாயார் உழைப்பில் வளர்ந்து வருகிறார்கள். ஊரிலேயே அரசுக் கல்லூரி ஒன்றில் பட்டம் பெற்ற அவள் இரு மாதங்களுக்கு முன் சென்னை வந்திருக்கிறாள் வேலை தேடி. 

ஆனந்தியின் கல்லூரி தோழியின் அறிமுகத்தில் கிடைத்த ஒரு வேலையைச் செய்து வருகிறாள். பெரிய அளவிலான அகராதி போன்ற புத்தகங்களை தெருத்தெருவாக சென்று விற்க வேண்டும். அவ்வாறு விற்கும் புத்தகங்களுக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் ஒரு சொற்ப வருமானமும் கிடைக்கும். எல்லாம் சேர்த்து மாதத்துக்கு மூன்று முதல் நான்காயிரம் வரும். அது அவளின் தங்கும் விடுதிக்கும் உணவுக்கும் சரியாகப் போய்விடும். ஆனந்தியின் தம்பி ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்று வருவதால் அதற்கான செலவில் மாதம் ஒரு தொகையை அவளிடமிருந்து வீட்டில் எதிர்பார்ப்பார்கள். எனவே, இந்த வேலையோடு சேர்த்து மற்றொரு பகுதிநேர வேலையையும் பார்த்துவந்தாள்.

அது  ‘ஃபார்ம் ஃபில்லிங்’ எனச் சொல்லப்படும் ஒருவகை தகவல் பதிவு சார்ந்தது. அவர்கள் கொடுக்கும் இலக்கை இரவு பகல் பாராமல் ‘டைப்’ செய்து கொடுக்க வேண்டும். மாதம் இரண்டு மூன்று ஆயிரங்கள் கிடைக்கும். அதற்காகத் தினமும் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களில்கூட அந்த வேலையைச் செய்வாள் ஆனந்தி. 

எப்படியாவது போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சி பெற்று அரசுப் பணியில் சேரவேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறாள். அதற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கிவிட்டாள். அடுத்த மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க இருப்பதால், அவளின் இந்த இரு வேலைகளுக்குப் பதிலாக நேரம் குறைவான ஒரே வேலை வேண்டும்.. அதே வருமானத்தோடு. அதற்காக சில இடங்களில் முயன்று வருகிறாள்.

இவ்வாறு விவரங்கள் அனைத்தையும் எவ்வித சோகமும் அனுதாபம் தேடும் தொனியிலும் அவள் தெரிவிக்காமல் மிகவும் இயல்பாக ஒருவித வைராக்கியத்தோடு அவள் கூறியது அவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவளுக்கு ஏதேனும் ஒரு உதவி செய்யாமல் தன் மனது அமைதி அடையாது என்பதை உணர்ந்தபடி வீட்டை அடைந்தான்.

சத்யா சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கவனித்த சரண்யா அதன் காரணத்தை கேட்கவும், அவனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தடுமாறினான். வழக்கமாக வெளியில் நடந்த சம்பவங்களை வீடுவரை கொண்டுவருவதில்லை அவன். ஒருவழியாக தனது மெளனத்தைக் கலைத்து அந்தப் பெண்ணைப் பற்றிக் கூறினான். தான் இவ்வாறான ஒரு பின்புலத்திலிருந்து வரவில்லை என்றாலும் சத்யாவின் இந்த உணர்வுபூர்வ நிகழ்வை நிதானமாகக் கேட்டாள் சரண்யா. அவள் நகரத்தில் ஒரு சராசரி குடும்பத்தில் வளர்ந்தவள். பெரும் சோதனைகளை வாழ்வில் கண்டதில்லை.

அனைத்தையும் கேட்டுமுடித்தவள்,

``என்ன பண்ணலாம் சொல்லுங்க?..” என்றாள். அவன் சில விநாடிகள் மௌனமாக இருந்தான். பின் 

``தெரியல சரு.. பட்.. ஏதாச்சும் பண்ணனும்..''

``ம்..”

``உங்க ஆபீஸ்ல ஜாப் எதும் ட்ரை பண்ண முடியுமா..?”

``இப்போ எதும் ரெக்ரூட் போகல.. எதுக்கும் செக் பண்ணிச் சொல்றேன்..ஓ கே? சரி சாப்பிடலாமா” என்றபடி எழுந்துசென்றாள். அவனால் இப்படி எளிதாக ஆனந்தியின் நிலையைக் கடந்துபோக முடியாது. தன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும் என்ற யோசனையிலேயே இருந்தான். 

உன் கண்ணில் நீர் வழிந்தால்! - சிறுகதை #MyVikatan


 

இரு நாள்கள் கடந்திருந்தது. 
இந்த இரண்டு நாள்களில் அவனால் யாருடனும் அதிகம் பேச முடியவில்லை. அவனது இயல்பைத் தொலைத்திருந்தான். தனது நண்பர் வட்டத்தில் ஏதும் தற்காலிக வேலை இருக்குமா என விசாரித்திருந்தான். அப்படி வேலை எதுவும் இருந்தால் சொல்வதாக சிலர், இவன் கூறியதை சம்பிரதாயமாக ஆமோதித்த சிலர் என எவரும் உறுதியாகக் கூறவில்லை.

சத்யா அவனது அலுவலகத்தில் கூட முயன்று பார்த்தான். எதுவும் நடக்கவில்லை. அரசு அலுவலகம் அல்லவா. ஒருவித சோகத்துடன் நடைமேடையில் நடந்தான். ஆனந்தியின் அருகில் சென்றான். 

``ஆனந்தி..” என்றதும் நிமிர்ந்தாள். 

``சொல்லுங்கண்ணா..”

``என்ன ஞாபகம் இருக்கில்ல?... அன்னிக்கி..”

``இருக்குண்ணா.. சொல்லுங்க”

``உனக்கு ஏதாச்சும் ஜாப் ரெடி பண்ண முடியுமான்னுதான் விசாரிச்சிட்டு இருக்கேன்..”

``ஓ.. தேங்க்ஸ்ண்ணா..”

``நீ வேற டிப்ளமோ கோர்ஸ் ஏதும் பண்ணியிருக்கியாம்மா..?”

``இல்லையேண்ணா..” என ஒருவித இயலாமையை முகத்தில் காட்டினாள்.

``சரி.. நா பாத்து சொல்றேன்.. என்ன?” என்றவுடன் சிறு புன்னகையுடன் சரி என்பதுபோல தலையசைத்தாள் ஆனந்தி. திரும்பி நடக்க எத்தனித்தவன் எதையோ மறந்த தோரணையில் அவளை நோக்கி..

``செலவுக்குக் காசெல்லாம் இருக்கா..?” என சில நூறு ருபாய் நோட்டுகளை நீட்டினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் சட்டென ஒருவித அசௌவுகரியத்துடன் 

``இருக்கு.. இருக்குண்ணா..” என்றாள். அவள் கண்ணில் ஓரத்தில் நீர் ததும்பியது. முகத்தை ஒருபக்கமாக திருப்பிக்கொண்டாள். தான் அவளின் வைராக்கியத்தை உரசிவிட்டதை சட்டென உணர்ந்தவன், 

``சாரி..” எனக் கூறிவிட்டு அவளுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என அங்கிருந்து நடந்தான். 

தூரத்தில் சென்று ஒருகணம் திரும்பினான். அவள் தனது கர்ச்சீப்பால் விழியோரம் துடைத்தாள். சத்யாவின் மனம் கனத்தது. ஏனோ `மயிர்நீப்ப கவரிமான்..’ என்ற வரிகள் நினைவில் வந்தன.  தன் செயலை எண்ணி ஒருவித குழப்பத்தில் இருந்தான். ஏன் அப்படி அவளை சிரமப்படுத்தினோம் என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். எனக்கு ஒரு தங்கையாக இருந்திருந்தால் அப்படிதானே செய்திருப்பேன். ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனே என வருந்தியபடி வீட்டுக்குப் புறப்பட்டான்.. 

சரண்யா தனது அலுவலக தோழியிடம் ஏதோ ஒரு பிரச்னை பற்றி விவாதித்துவிட்டு செல்போனை அணைத்தபடி வந்தாள். சத்யா சம்பிரதாயமாக அவள் பிரச்னையை விசாரித்துவிட்டு சில நிமிட மௌனத்துக்குப்பின் கேட்டான்..

``ஆனந்தி ஜாப் விஷயமா பேசினோமே.. எதும் செட் ஆச்சா..” என்றதும் உடனே பதில் வரவில்லை அவளிடமிருந்து. பின் மெதுவாக

``இன்னும் விசாரிக்கல.. ரெண்டு நாளா ஆபீஸ்ல கொஞ்சம் இஷ்ஷுஸ்..” என முடிக்கவில்லை அவள்.. அதற்குள் அவன்

``இல்ல சரு.. அந்தப் பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறா.. இன்னிக்கிகூட..” 

``உங்களுக்கு வேற வேலையே இல்லையா அங்க?... கவர்மெண்ட் ஆபீஸ் இல்ல..” எனச் சத்தமாகி பின் மெதுவாக

``சாரி..” எனக் கூறிவிட்டு சில விநாடிகள் கழித்து

``எல்லாருக்கும் நெறய ப்ராப்ளம் இருக்கு சத்யா.. அதுவும் பொண்ணுங்களுக்கு...” என முடிப்பதற்குள் சத்யா தொடர்ந்தான்.

``எந்தப் பொண்ணுங்களுக்கு..? இங்க பாட்டன் சம்பாதிச்ச சொத்தில் கண்டபடி செலவு பண்ணிட்டு, சாக்கடை புழுக்கள மாதிரி கண்டத தின்னுட்டு வெக்கமே இல்லாம அதையே பெருமைன்னு பேசிக்கிட்டு சுத்துதுகளே சில ஜென்மங்கள்.. அதுகளை சொல்றியா?.. அதுகளுக்கு ஒரு ரூபா எங்கிருந்து வருதுன்னு தெரியுமா? அதுகளால இந்தப் பூமிக்கு ஏதாச்சும் நன்மை இருக்கா?.. என வெடித்தான்.

சரண்யா ஏதோ சொல்ல வர.. அவன் விடாமல் தொடர்ந்தான்..

``சொல்லு.. அந்த ஜென்மங்களும் ஆனந்தியும் ஒன்னா?..” என அதிர்ந்தான். விடையேதும் கூறமுடியாமல் நெற்றியில் கைவைத்து தலை கவிழ்ந்தாள் சரண்யா. 

``உன்னால ஜாப் ரெடி பண்ண முடியலைன்னா பரவால்ல விடு..” என கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

மறுநாள் மாலை அதே நேரம் ஆனந்தியைச் சென்று பார்த்தான். அவள் தனக்கான வேலை விதிக்கப்பட்டது என்பதைப்போல செய்துகொண்டிருந்தாள். நேற்று நடந்ததை மறந்திருந்தாள். சற்று தூரத்தில் இவன் வருவதைப் பார்த்தவள் நிமிர்ந்து சிறு புன்னகையை உதிர்த்தாள். 

``இந்த டிக்ஷனரி எவ்ளோ?..” என்றான் அவளை பெருமையாகப் பார்த்துக்கொண்டு. அவள் விலையைக் கூறவும் அதை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தான். 

``எங்க ஆஃபீஸ்ல நெறய பேர் வாங்குவாங்க.. எவ்ளோ வேணும்னு நாளைக்கு சொல்றேன்.. என்ன?” என கூறிவிட்டு நடந்தான். 

சில நாள்களுக்குப்பிறகு சத்யாவின் நண்பரின் உதவியால் ஆனந்தி ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்காணலுக்குச் சென்றிருக்கிறாள். அவள் வரும்வரை காத்திருந்தான் சத்யா. 

அதோ அவள் வந்துவிட்டாள்.. தூரத்தில் அந்த மின்சார ரயிலிலிருந்து இறங்குகிறாள். சத்யா அவள் முகத்தைப் பார்த்தான். ஒரு புதுவித மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தாள். இவன் என்ன ஆயிற்று என்பதைப்போல கையால் சைகை செய்ய அவள் வெற்றி என்பதைக் கையை உயர்த்திக் காட்டினாள்.

அருகில் வந்தாள். நன்றியுணர்வில் கண்ணில் மெதுவாக நீர் ததும்பியது. துடைத்துக்கொண்டாள். சத்யா தன் கையால் அவள் தலையில் மெதுவாக இரண்டு தட்டுகள் தட்டிவிட்டுத் திரும்பி நடந்தான் அலுவலகத்தை நோக்கி.

இப்போது அவன் மனம் லேசானது.

கதை : தியாகராஜன்

உன் கண்ணில் நீர் வழிந்தால்! - சிறுகதை #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு