Published:Updated:

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

Published:Updated:
எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

(அவள் விகடன்: அக்டோபர்: 15-31)

மனம் விட்டு...

''பேதைப் பருவம் என்றால், இன்ன வயதுக்குள் இருப்பார்கள் என்று சொல்கிறது உலா இலக்கியம்! ஆனால், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை பேதைமை நிறைந்த பெண்ணாய்த்தான் நான் இருக்கிறேன்! இன்னொரு பக்கம் ஒரு பெரிய மனுஷத்தனமும் எனக்குள் முகம் காட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த முரண்பட்ட மனநிலைதான் என்னையும் என் எழுத்தையும் வளர்த்து வந்திருக்கிறது என்று தோன்றுகிறது!

வீட்டில் மூத்தப்பெண் என்பதால், எனக்கு என் தங்கைகளைவிடக் கட்டுப்பாடுகள் அதிகம். கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டு என்று நான் வீடு திரும்ப சற்றுத் தாமதமானாலும் திட்டுவார்கள். வீட்டில் அவர்கள் என்மீது கொண்ட சிறப்பு அக்கறைக்கும், கவலைக்கும் வேறொரு காரணம் இருந்தது! அது... 'எனக்கு உறவிலோ என் இனத்திலோ திருமணம் நடக்காது!’ என்று என் ஜாதகத்தை வைத்து என் தாத்தா குமாரசாமி உடையார் என்னைப் பற்றி சொன்ன ஜோதிடம்தான்!

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அப்பா தா.கு.முருகேசனுக்கு கவிதை, கதை, இலக்கியம் இவற்றில் ஆர்வம் அதிகம். என் கவிதை ஆர்வத்தைத் தூண்டுவிடுவதற்காக பச்சையப்பன் கல்லூரியில் தன் மாணவர்களாக இருந்தவர்கள் எழுதிய படைப்புகளையெல்லாம் எடுத்துவந்து படிக்கத் தருவார். அதுபோலத்தான் அவர் 'வைகறை மேகங்கள்’ என்ற கவிதை நூலையும் என்னிடம் தந்தார்.

அது ஒரு முகூர்த்த நேரம் என்று நினைக்கிறேன். என் கவிஞரை, என் எதிர்காலக் கணவரை நான் அறியாமலிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில், அவரின் முதல் வடிவமாக வந்து என்னை சிலிர்க்க வைத்தது அந்தப் பெட்டகம்! பெயர், வைரமுத்து என்று நவரத்தினங்களை ஞாபகப்படுத்தியது. புத்தகத்தின் பின் அட்டையில் 'இந்தப் புத்தகப் பூமியைப் படைத்தவன்’ என்று வாசகத்துக்கு மேல் கவிஞருடைய சிரித்த முகம். அந்த கவிதையின் சந்தங்களும் அணுகுமுறையும் சொல்லழகும் என்னை அப்படியே கொள்ளை கொண்டன! அந்தச் சிலிர்ப்புக் குறையாத நிலையில் அப்படியே அந்தக் கவிஞருக்கு ஒரு கடிதமும் எழுதினேன்.

சீக்கிரத்திலேயே அவர் முகத்தை பாரதியார் சங்கத்தில் நடந்த ஒரு கவிதைப் போட்டியின்போது நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது! அறிமுகம் செய்து வைக்காமல் பேசும் பழக்கம் எனக்கு இல்லை என்பதாலும், அவருக்கு என்னை யாரென்று அடையாளம் தெரியாததாலும் அன்று நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.

ஆனால், அதற்கடுத்த சில நாட்களிலேயே ஒரு வானொலி நிகழ்ச்சிக்கு வந்தபோது, என் கையெழுத்தை வைத்து என்னை அடையாளம் தெரிந்துகொண்டார் அவர்.

சில நாட்களிலேயே என் தந்தைக்கு உடல்நலமில்லாத ஒரு சந்தர்ப்பத்தில், அவர் என் வீடு தேடி வந்தார். இந்த முறை என் தந்தையே எங்களிருவரையும் முறைப்படி அறிமுகம் செய்து வைத்ததால், நாங்கள் பேசத் தொடங்கினோம். எங்கள் நட்புப் பறவைக்கு பச்சையப்பன் கல்லூரி நூலகத்திலும் வானொலி நிலையத்திலும் ஒவ்வொரு சிறகாய் முளைத்துக் கொண்டிருந்தன.

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

என்னை அவர்பால் ஈர்த்த விஷயங்களில் முக்கியமானது, கம்பீரமான அந்தக் காந்தக் குரல்! நாங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தபின், அந்தக் குரலை மனசுக்குள் வாங்கிக் கொள்வதில் ஒரு தனி சுகம் எனக்கு!

எங்கள் பெயர் ஒற்றுமை.. கவிதையில் ஆர்வம், ரசனை என்று எல்லாம் ஒன்றாக இருந்ததை நாங்கள் உணரத் தொடங்கியபோதுதான் எங்களுக்குள் அன்பு மலரத் தொடங்கியது. எங்களுக்குள் வயது வேறுபாடுகூடப் பெரிதாக இல்லை. அவரைவிடப் பத்துமாதங்களே நான் சிறியவள்.

நாங்கள் இருவருமே பல இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்கும் வாய்ப்புத் தொடர்ந்து வாய்த்தது... எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும் சிலர் கண்களில் கேள்விக்குறியும் கூடவே எழும்பும்! ஒரு வானொலி நிகழ்ச்சியில் எங்களைப் பற்றித் துருவித் துருவி கேட்டுத் தெரிந்துகொண்ட கவியரசி சௌந்திரா கைலாசம்தான் எங்கள் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் என் கணவர் மூலம் எனக்கொரு புடவையும் பரிசாகத் தந்து வாழ்த்தினார். எங்கள் வாழ்வில் மிக முக்கியமான கட்டங்களில் உதவி தேவைப்பட்டபோதெல்லாம் வந்து உதவியவர் அவர்.

கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட ஒரு பெண் தன் காதலை வீட்டில் சொன்னால் என்ன நடக்கும்...? எதிர்பார்த்தபடியே எங்கள் வீட்டில் அணுகுண்டுகள் வெடித்தன... முக்கியமாய் என் அம்மாவால் இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை...! கவிஞரின் கிராமமும் பொக்ரான் போலானது!

வீட்டில் எனக்கடுத்து தேன்மொழி, முல்லை, தாமரை என்று இன்னும் மூன்று பெண்கள் இருந்தார்கள். பெரியவளே இதுபோல் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்தால், மற்ற பெண்களுக்கெல்லாம் எப்படி கல்யாணமாகும் என்பதே என்னைப் பெற்றவர்களுக்கு கவலை! அவர் கிராமத்திலோ, ''ஊரிலேயே, கல்லூரி போய் படித்த ஒரே பையனுக்கு காரும் கிலோ கணக்கில் நகையுமாய் பெண்கள் காத்திருக்க, யாரையோ போய் எந்த செலவுமில்லாமல் மகன் பண்ணிக் கொள்கிறானே’ என்ற கவலை!

எங்கள் ரிஜிஸ்தர் திருமணம் நடந்தபோது ஆசீர்வாதம் செய்ய உறவுகளில் யார் கையும் நீளவில்லை...

திருவல்லிக்கேணியின் தக்கூடிக்கான் பகதூர் தெருவில் ஒரு சின்ன போர்ஷனில்தான் எங்கள் குடித்தனம் ஆரம்பமாயிற்று... அப்போது இவர் சட்டத்துறையில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தார். ஆரவாரமில்லாத அமைதியான ஆனால், இனிமையான இல்லற வாழ்க்கை!

வீட்டுக்குள் எங்கள் விளையாட்டும்கூட கவிதை சார்ந்தே இருக்கும்... 'வெண்பா’வுக்கான கடைசி அடியை நான் தர, இவர் நிமிஷத்துக்கு ஒரு வெண்பா என்ற கணக்கில் சொல்லுவார். கவிதைகளில் வெண்பா எழுதுவது மட்டும் கொஞ்சம் கடினம்.. அதற்கு கடுமையான இலக்கணம் இருக்கிறது!

முதல் மூன்றாண்டுகளுக்கு வீட்டில் ஒரு மின்விசிறிகூட இல்லை. நானாக விரும்பிச் செய்துகொண்ட திருமணம் என்பதால், என் பிறந்த வீட்டிலிருந்து ஒரு ஸ்பூனைக் கூடக் கொண்டு வரவில்லை.

சிக்கனமான இருந்தாலும், எங்கள் வாழ்க்கையின் வறுமையை ஒரு வேலை வேண்டும் என்றெண்ணித் தான் மீனாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியையாக சேர்ந்தேன்!

அதன் பிறகு, அங்கு நான் பணிபுரிந்த அந்த இருபதாண்டுகளும் இனிமையானவை. கல்லூரியில் சேர்ந்த புதிதில் நல்ல சேலைகளாய் நான்கு மட்டுமே எனக்கு இருந்தன. அதையே திருப்பித் திருப்பி கட்டிக்கொண்டு போவேன்.

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

''மாணவிகளுக்கு முன்னால் நின்று பாடம் நடத்தும் ஆசிரியைக்கு ஓரளவுக்காவது நல்ல ஆடைகள் வேண்டாமா... நூல்சேலைகளையாவது இன்னும் கொஞ்சம் வாங்கிக் கொள்'' என்று தனியே கூப்பிட்டுச் சொன்னார், ஆங்கிலத்துறையைச் சேர்ந்த ராஜேசுவரி என்ற தோழி! பிரேமா, கலாவதி என்று கல்லூரியில் எனக்கு தோழிகள் எக்கச்சக்கம்... என் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து என் சோதனைகளையும், சாதனைகளையும் அங்குலம் அங்குலமாக அறிந்தவர்கள் அவர்கள்! நான் வாயும் வயிறுமாயிருந்த போது வாய்க்கு ருசியாக விரும்பியதைச் செய்துவந்து கொடுத்தவர்கள்! சமீபத்தில் என் கல்லூரி வேலையை நானே துறக்க நேர்ந்தபோது, வழியனுப்பு விழாவில் அவர்களோடு நானும் கலங்கிப்போனேன்.

கல்லூரிப் பணியை குடும்பச் சூழ்நிலை காரணமாகவே நான் துறந்தேன். இதில் என் தோழிகளுக்கும் கல்லூரி முதல்வர் லட்சுமிக்கும் மிக வருத்தம். இரண்டாண்டுகளாகச் சிந்தித்து என் கணவரோடும் பிள்ளைகளோடும் ஆலோசித்தபின், நிதானமாக எடுத்த நல்ல முடிவு இது! மூவாயிரம் மாணவிகளுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்வதை விடவும் மூன்று கோடிக்கும் மேலானவர்கள் அறிந்துபோற்றும் என் கணவருக்குப்பின் நின்று பணியாற்றுவது எனக்கு நியாயமானதாகவே தோன்றியது!

'நீ உன்னை ரொம்பவும் தாழ்த்திக்கொண்டு உன் கணவரை பெருமைப்படுத்துகிறாய்!’ என்றும் என் தோழிகள் சொல்வதுண்டு. அதேபோல நான் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதற்குக் காரணம் என் கணவர்தான் என்றுகூடப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் நான் ஒரேயொரு பதிலைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

விளையாட்டு வீரர்களான இரண்டு நண்பர்களுக்குள்ளே ஒருவர் மற்றவரைவிட அதிக லட்சிய வெறியுடனும் அதற்கேற்ற திறமையுடனும் இருக்கும்போது, அந்த இன்னொரு நண்பர் தன் சாதாரண திறமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நண்பனின் முன்னேற்றத்துக்காக கை கொடுப்பதில்லையா? அப்படித்தான் இதுவும்! தவிர நாங்கள் நண்பர்கள் மட்டும் இல்லையே!

இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என்னிடமிருந்து ஒரு படைப்பு வந்தால், அதை முதுகில் தட்டியோ அல்லது தலையில் குட்டியோ பாராட்டும் முதல் ரசிகர் என் நண்பரான கணவர்தான்! இதில் எந்த வார்த்தையும் கூடுதலோ குறைவோ கிடையாது. நல்ல கவிதை என்றால், சமயத்தில் கண்ணீர் விட்டு அழக்கூட செய்வார். என்னுடைய 'தெரசா!’ கவிதையும் விஞ்ஞானம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதையும் அவரை நெகிழ வைத்தவை.

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

என்னை சினிமாவுக்குக்கூட சிலர் பாட்டெழுதக் கூப்பிட்டார்கள். எனக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாததால்தான் நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில் கணவரோடு போட்டியிடக் கூடாதென்றுதான் நான் அந்த வாய்ப்புகளை நிராகரித்தேன் என்று அதற்கும் சிலர் கருத்து சொன்னார்கள். அப்படி நான் எழுதியிருந்தால், அதை முதலில் பாராட்டியிருப்பவர் அவராகத்தான் இருப்பார்.

மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பது சிலருக்கே சுலபம். அவரளவுக்கு அதில் எனக்கு திறமையும் இல்லை என்பதே உண்மை!

சொல்லப்போனால், இவர் சினிமாவுக்குப் போனதிலேயே எனக்கு விருப்பமில்லை.

''உன் கணவர் சினிமாவுக்கு போகிறார்... ஜாக்கிரதையாக இரு!’ என்று தோழிகள் எச்சரிக்கை செய்த விஷயத்தை நான் பெரிசாய் எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், வேறு கவலைகள் இருந்தது எனக்கு.

சினிமா ஒரு கற்பனை உலகம். அங்கே இருப்பது தனிக்கலாசாரம்... அங்கே நாம் எதிர்ப்பார்க்கும் நிம்மதி இருக்காது என்று எனக்குத் தோன்றியது.. தவிர, இவர் தேவையில்லாதவர்களுக்குத் தலைவணங்காத ஒரு மனிதர்.. தன் கௌரவத்துக்கு பங்கம் வரக்கூடாதென்று நினைப்பவர். இத்தனை நாளும் கவிதை மேடைகள், மொழி பெயர்ப்புத்துறை என்று அறிவுக்கு வேலை இருந்த இடங்களில் இருந்த இவர், அந்த ஜிகினா உலகின் பரபரப்புக்கு எப்படி அனுசரித்துப்போவார் என்று கவலை எனக்கு.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே சினிமா பாடல்களில் அவர் காட்டிய அந்த ஆர்வம்... அந்தப் பாடல்களில் தனி முத்திரை பதிக்க வேண்டுமென்று அவருக்குள் தீயாய் இருந்த லட்சியம் எல்லாம் பார்த்தபோது, அவர் இந்தத் துறையில் இறங்குவதை என்னால் மறுக்க முடியவில்லை...!

வார்த்தைகளின் வலிமையால் வேகமாய் போனது இவர் வளர்ச்சி.. அது பொறுக்காமல் சில போட்டிகளும் பொறாமைகளும் எங்களை பொசுக்கவும் ஆரம்பித்தன. நான் எதிர்பார்த்த சூழல்தான் என்றாலும் தாங்க முடியவில்லை.

எனக்குள் நான்... - பொன்மணி வைரமுத்து

இடையில் ஒரு மூன்று வருடங்கள் அவர் மனசை அடித்துப்போட்டுத் தொய்ந்துவிடச் செய்தது சூழல்! டியூனுக்காக காஸெட்டைக் கொடுத்துவிட்டு மறுநாள் வந்து வேண்டாமென்று அதை பிடுங்கிக் கொண்டுபோய் விடுவார்கள். இதுபோன்ற சிறுமைகளைத் தாங்கமுடியாமல் அவர் துவண்டபோது, இந்த முறை நான் உறுதியுடன் சொன்னேன்: 'நிமிர்ந்து காட்டுவோம் வாருங்கள்!’

உண்மையில் திரைப்படத்துறையில் அதுக்கப்புறம் வந்த காலம்தான், அவர் தாகத்தை நிறைவு செய்யுமளவில் இருந்தது. திரைப்படப் பாட்டுகளிலேயே நல்ல நல்ல கவிதைகள் வரமுடியும் என்பதற்கேற்ப சரியான சிச்சுவேஷன்களும் தற்போது அமைய ஆரம்பித்திருக்கின்றன..!

எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகமுண்டு. கஷ்டங்கள் வரும்போது நான் செய்வது பிரார்த்தனைதான்!

அவருக்குப் பெரிதாய் கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் எனக்காக கோயிலுக்கு வந்து வெளியே நின்று காத்துக் கொண்டிருப்பார்.

நூற்றாண்டுகள் கடந்த பழைய கோயில்களுக்குப் போவது எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

பாசி படர்ந்த சுவர்களும், மொழுமொழுவென்று உயர்ந்த தூண்டுகளும் நீ... ஈஈள - பிராகாரங்களுமாக இருக்கும் இந்தக் கோயில்களில் ஒரு மயக்கும் தெய்வவாசனை இருக்கிறது. என் தந்தை தமிழோடு தத்துவமும் படித்தவர். ஒரு தாத்தா சமய வாதங்கள் புரிந்தவர், இன்னொரு தாத்தா ஜோசியர். இவையெல்லாம் இப்போது என்னுள் ரசவாதம் புரிந்து என்னை இன்னொரு பொன்மணியாய் மாற்றி வருகிறது.

ஒரு நாள்.. என் கடமைகளையெல்லாம் முடித்த என் வாழ்வின் அந்திப் பொழுதில், நான் பதின்மூன்றாவது ஆழ்வாராகவோ, அறுபத்து நான்காவது நாயன்மாராகவோ ஆகி விடுவேன் என்று தோன்றுகிறது..!''

- சந்திப்பு: லோகநாயகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism