Published:Updated:

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3
“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

(ஆனந்த விகடன்: 12.6.05)

'என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே’

- சிவவாக்கியர்

 ருவறையின் இருளைக் கிழிக்கிறது ஒரு மெழுகுவத்திச் சுடர்!

தாயின் தொப்புள்கொடிக்குள் நுழைகிற உணர்வு! தகதகக்கிற தங்க ஜ்வாலை வழிகாட்ட, உள்ளே... மிக உள்ளே... மெள்ள மெள்ள நகர்கிறார் ரஜினி!

தாறுமாறாக நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள் போலத் துருத்தி நிற்கும் கூர் கற்கள்... தலைகீழாய் தவழ்ந்து தவழ்ந்து, சடாரென வளைந்து நிமிரும் வழியே சிரமப்பட்டு உடல் திணித்து, அவர் முன்னேறுகிற காட்சியை யார் பார்த்தாலும், மனதுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்!

'ஒரு பாவமான ஜீவன் போல, இமயமலையில் இந்த இருள் குகைக்குள் இவர் இப்படிக் கிடக்கவேண்டிய அவசியம் என்ன?’

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

''இது... இந்த அனுபவம் உங்க ஆத்மசுத்திக்கு பாபா தர்ற பரிசு. எல்லா அடையாளத்தையும் தொலைச்சிட்டு, ஒரு சாதாரண மனுஷனா சரணாகதி அடையறதுக்குக் கிடைக்கப்போற பரிசு!'' பின்னாலேயே தொடர்கிற ஹரி சொல்லச் சொல்ல, மின்னும் விழிகளுடன் தன்குருவின் மடி தேடி மௌனமாய் நகர்கிறார் ரஜினி. 

மலைப் பயணத்தின் வழியில் ரஜினியே அதை உணர்ந்திருந்தார். ''ரெண்டு சட்டை, ரெண்டு வேஷ்டியோட நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மனசளவில் எல்லாத்தையும் உதறிட்டேன் ஹரி. ஏன்னா... நான் என் வாழ்க்கையில் எதையுமே திட்டமிட்டது இல்லை!

பொத்திவெச்ச உள்ளங்கை மாதிரி இருக்கு வாழ்க்கை. 'கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார்’னு என் கிராஃபை ஒரு கதையாச் சொன்னா யாராவது நம்புவாங்களா? நான் பஸ் கண்டக்டரா இருந்தேன். ரொம்பச் சின்ன வேலை. சின்ன சம்பளம். ஆனால் அப்பவும் நான் சந்தோஷமா இருந்தேன். பெங்களூரிலேயே ஸ்டைலான கண்டக்டர் நான்தான். என் விசிலுக்கே அவ்வளவு ரசிகர்கள் இருப்பாங்க. நான் வர்ற பஸ்ஸுக்காக ரெண்டு பஸ்ஸை மிஸ் பண்ணிட்டுக் காத்திருந்த பாசஞ்சர்ஸ்லாம் உண்டு. இப்போ நினைச்சுப் பார்த்தா, என்னையறியாம அப்பவும் நான் ஒரு என்டர்டெயினராத்தான் இருந்திருக்கேன்!

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

வாழ்க்கை என்னை ரோட்ல திரியவெச்சாலும் மனசுக்குள் மகாராஜாவா இருந்தேன். எதுக்கும் எப்பவும் பெரிசா ஆசைப்பட்டதில்லை. 'கிடைச்சா சந்தோஷம்... கிடைக்கலேன்னா ரொம்ப சந்தோஷம்!’கிறதுதான் நம்ம ஸ்டைல்!

அதே மாதிரி இறைபக்தி! அம்மா முதல்ல அப்பாவைக் காட்டினாங்க. அதுக்கப்புறம் ஆண்டனைத்தான் காட்டினாங்க. நான் கடவுளை என்னிக்குமே மறந்ததில்லை. கடவுள் என்னிக்குமே என்னையும் கைவிட்டதில்லை. என்னோட பிரச்னை என்னன்னா... குடும்பம், தொழில்னு எல்லாம் அமைஞ்ச எனக்கு, 'மாதா, பிதா, குரு, தெய்வம்’னு சொல்வாங்களே, அதில் குரு மட்டும் அமையலை. நல்ல நல்ல வாத்தியார்கள் கிடைச்சாங்க. ஆனா குரு?'' கண்கள் காற்றில் அலைபாய, நடையைத் தொடர்கிறார்.

ங்கே உள்ளே... பைக்குள் தேடித்தேடி எடுத்த ஒரு டார்ச் உயிர் பெறுகிறது. இருள் குகையில் இத்தனை இத்தனை சிரமத்துக்கிடையில் இன்னதென்று தெரியாத ஒன்றைத் தேடி, இடைப்பட்ட வழியில் சிறையாகிக் கிடக்கிறார் ரஜினி.

''குரு ஏன் முக்கியம் தெரியுமா?'' சில விநாடிகளுக்குப் பிறகு வழியில் மலையேறும்போது சிரித்த ரஜினி, ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார். ''ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க. பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக்காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

''என்னப்பா பண்ணலாம்?'னு கேட்டார்.

'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சுட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தான் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப்படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!’ எல்லோரையும் சிரிக்க வைத்து ரசித்த ரஜினி,

''அதானே... நமக்கு என்ன புரியுமோ, அதைச் சொல்லணும். எது புரியணுமோ அதை மட்டும் தான் சொல்லணும். இங்கே நிறைய குருக்கள் சும்மா மிரட்டுவாங்க. வித்தை காட்டுவாங்க, வித்தைகளை வேடிக்கை பார்க்கலாம்... பொழுது போகும். ஆனா, நமக்குத் தேவை வழிகாட்ட ஒரு ஆத்மா. அப்படி எனக்குக் கிடைச்சவர் பாபாஜி!'' என்று நெகிழ்ந்து நின்றார்.

ப்போது மீண்டும் குகைக்குள் செல்வோம். அவஸ்தைகளுடன் நழுவி நழுவி உள்ளே வந்ததும் திகைக்கிறார் ரஜினி. இத்தனை சிறிய பொந்தைக் கடந்து வந்தால், இருபது பேர் அமர்கிற அளவு இடமா? அதுவும் பூமிக்கடியில், இத்தனை ஆழத்தில் இப்படி ஒரு குளிர்ச்சியா? வாய் திறந்தால், சுவாசித்தால் பனிக்காற்று. சுவாசம் திணறவில்லை. உடலில் துளி வியர்வை இல்லை. மனதில் துளி பயம் இல்லை. தாயின் கர்ப்பத்துக்குள் வந்துவிட்ட சிசு போல பாதுகாப்பாக உணர்கிறார் ரஜினி.

ஜினியின் வாழ்வில் பாபா வந்த கதை தெரியுமா? 'படையப்பா’ படம் முடித்து, அடுத்த படம் என்ன செய்வது என யோசனையில் இருந்த நேரத்தில், ரஜினியின் கைக்குத் தற்செயலாகக் கிடைத்தது பாபாவின் படம். அதைப் பார்த்த கணத்தில் ஒரு மின்னல் வெட்டு போல ஏதோ ஒரு ஆனந்த அதிர்ச்சி தாக்க, மயங்கி விழுந்தாராம் ரஜினி. இமயமலையின் அடிவாரங்களில் ரிஷிகேஷ், தயானந்த சரஸ்வதி ஆசிரமம் என அடிக்கடி போய் வந்த அனுபவம் இருந்தாலும், பாபா அப்போது ரஜினிக்குப் புதுசு!

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

பாபாவைப் பற்றிய தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தால், கிடைத்த செய்திகள் ரஜினியை பிரமிப்பில் தள்ளின. பாபாவின் பெயர் என்ன? தெரியாது. பாபாவின் வயதென்ன? தெரியாது. பாபாவின் புகைப்படம் என்ற ஒன்றே கிடையாது. இருப்பது எல்லாம் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே!

ஆயிரமாயிரம் வருடங்களாகக் காட்சி தருகிறார் பாபாஜி... ஒளியாக, குரலாக, உருவமாக! வடக்கு இமயமலையின் செங்குத்தான சிகரப் பாறைகளில் பாபாஜி இன்னும் வாழ்கிறார் என்று நம்பிக்கை. மனிதனின் குறுகிய பார்வை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட நட்சத்திரம் அவர். அந்த அவதாரம் அடைந்துள்ள நிலையை ஊகிக்க முயல்வதுகூட வீண்தான். அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது!

சிரஞ்சீவித்தன்மை பெற்ற இந்த குரு இருபத்தைந்து வயது இளைஞர் போல ஓவியத்தில் தோற்றமளிக்கிறார். எழிலும் வலுவும் கொண்ட தேகம். கருமையும் சாந்தமும், கருணையும் மிதக்கும் விழிகள். தாமிர நிறக் கேசம். பாபாஜி தான் விரும்பும்போது மட்டுமே, மற்றவர்கள் அவரைக் காண்பதோ அடையாளம் காண்பதோ சாத்தியம். ராமர், கிருஷ்ணர், புத்தர், பதஞ்சலி போல பாபாஜி ஒரு மகா அவதாரம்!

ஆதிசங்கரருக்கு யோக தீட்சை அளித்தவர் பாபா. ஏசு கிறிஸ்துவுடன் என்றும் தொடர்புள்ளவர் பாபா. கிரியா யோகத்தைப் பரப்புவதே அவரது சித்தம் என அவர் பற்றிய ஒவ்வொரு செய்தியும், தகவலும், கதையும் நம் உணர்வை உலுக்கும் அதிசயம்.

ங்கே குகைக்குள் தியானத்தில் அமர்கிறார் ரஜினி. எத்தனை பேருக்குக் கிட்டும் இந்த பாக்கியம்? தாயின் கருவறையில் மீண்டும் குடியிருக்கும் பாக்கியம்!

யாரும் தரிசிக்கிற முடிகிற பாபாஜியின் பெரிய குகைக்கும் இந்தச் சின்னக் குகைக்கும் அந்தக் காலத்தில் ஒரு வழி இருந்ததாம். பெரிய குகை ஒரு கோயில் என்றால், இந்தச் சின்னக் குகைதான் அதன் கர்ப்பக்கிரகம்! பிறகு அந்த வழி அடைக்கப்பட்டுவிட, இரண்டுக்கும் இப்போது தொடர்பில்லை.

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

இதுதான் மகா அவதார் பாபாஜியின் அருள் குகை. நுரையீரல் நிறைக்கிற காற்று ஒரு புது சக்தி தருகிறது. தியானத்தில் திளைக்கிறார் ரஜினி. நிமிடங்கள் நழுவ நழுவ, ஓசையற்ற... உணர்வற்ற... பிரக்ஞையற்ற மௌனத்தில் கரைகிறார். வார்த்தைகளற்ற உலகமாக இருக்கிறது!

ழியில் ஒரு சாலையோரக் கடையில் சாப்பிட அமர்ந்தபோது, பேச்சு பொழுதுபோக்கு பற்றித் திரும்பியது. ''மூணு வருஷத்துக்கு ஒரு படம் பண்றீங்க, மத்தபடி உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு தலைவரே?'' என்று கேட்டார் ஹரி.

''டிராவல்தான்! மனசு சொல்ற பாதையிலெல்லாம் போயிட்டே இருப்பேன். இல்லே, வீட்டிலேயே மாசக் கணக்கில்கூட அமைதியா இருப்பேன். தினம் ஒரு மணிநேரம் யோகா. அப்புறம் மெடிடேஷன்!

முக்கியமா புஸ்தகம் வாசிப்பேன். கீதா... பகவத் கீதா ரொம்பப் பிடிக்கும். எப்போ படிச்சாலும் புதுசு புதுசா விஷயம் சொல்ற புஸ்தகம். அப்புறம் ஹிஸ்டரி! எனக்கு மனிதர்களின் வரலாறு பிடிக்கும். ஏன்னா... ஒரு தேசத்தோட வரலாறு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒரு தனி மனுஷனோட வரலாறும் முக்கியம். நீ சாதாரண மனுஷனா இருந்தா உனக்குச் சரித்திரம் இல்லை. ஆனா நீயே மகாத்மா காந்தியா இருந்தா... உன் வரலாறும் உன் தேசத்தின் வரலாறும் வேற வேற இல்லேனு சொல்வாங்க... கரெக்ட்!

லீ க்வான் யூன்னு ஒரு மனுஷன் நினைச்சார்... சும்மா மீன் பிடிக்கிற ஒரு குட்டித் தீவான சிங்கப்பூரை, உலகத்தின் நம்பர் ஒரு சூப்பர் மார்க்கெட்டா மாத்திக் காட்டினார். எங்கேயோ தென் ஆப்பிரிக்காவில் டிரெயினில் இருந்து காந்தியை ஒரு வெள்ளைக்காரன் பிடிச்சு வெளியே தள்ளினான். தன்னை மதிக்காத வெள்ளையனுக்கு தன் தேசத்தையே மதிக்கக் கத்துக் கொடுத்தார்.

மண்டேலா, நம்ம மாதிரி ஒரு மனுஷன்.. கறுப்புத் தோலு. ப்ளாக் வொயிட்னு நடந்த நிற வேற்றுமைக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவன். அவரை ஜெயில்ல தூக்கிப் போட்டாங்க... இருபத்தஞ்சு வருஷம்... ஒரு இருட்டு ரூம்ல உக்காந்துகிட்டு ஒரு தேசத்தையே மாத்தின மனுஷன்... அதுதானே தவம்... அப்போ அவர்தானே ரிஷி!

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 3

'செல்லாத காசுக்குள்ளேயும் செப்பு இருக்கும்’னு சொல்வாங்க. சும்மா ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது கண்ணா! அது கறுப்புத் தோலாவும் இருக்கலாம். கண்டக்டராவும்  இருக்கலாம். கஷ்டம்தான், அடிதான், அவமானம்தான் ஒரு மனுஷனை உருவாக்கும். நாளை நடப்பதை யாரறிவார்!'' சிறு புன்னகை வழிய புதிராகப் பேசினார் ரஜினி!

ரு மணிநேரம் பரவசம் பொங்க ஒரு பாறை போல துளி சலனம் சஞ்சலம் இல்லாது அமர்ந்திருந்த ரஜினி, கண் விழிக்கிறபோது ஒரு குழந்தை போல இருக்கிறார். மனசு உற்சாகத்தில் துள்ளுகிறது. ஷார்ப்பான சின்னக் கண்களில் கோடிக் கோடி நட்சத்திரங்கள் கும்மியடிக்கின்றன!

குகைக்கு வெளியே புது மனிதனாக வெளியே வருகிறார் ரஜினி. கற்கள் தாறுமாறாகக் கீற, கிழிசல் சட்டையுடன் மேலே வருகிற ரஜினி, அப்படியே அங்கேயே மண்ணில் சரிகிறார். மனசு மௌனத்தில் சஞ்சரிக்கிறது.

''எப்படி ஃபீல் பண்றீங்க தலைவரே?'' ஆர்வமாக ஹரி கேட்கிறார்.

''நான் வேற உலகத்தில் இருந்தேன் ஹரி. என்னோட அம்பத்தஞ்சு வருஷ வாழ்க்கை, முப்பது வருஷ சினிமாவில் நான் பார்க்காத சந்தோஷத்தை பாபாஜி குடுத்துட்டார். என் மனசு நிறைஞ்சுபோச்சு. நான் மறுபிறவி எடுத்துட்டேன். பாபாஜியின் ஆசிர்வாதம் எனக்குக் கிடைச்சிருச்சு ஹரி. அது எனக்கும் பாபாவுக்கும் இடையில் நடந்த விஷயம். அதை வெளியே சொல்ல மாட்டேன். எனக்குள்ள புது சக்தி, புது ரத்தம் ஊறின மாதிரி இருக்கு ஹரி. இதுதான் இதைத்தான் நான் தேடி அலைஞ்சேன். தாங்க் யூ பாபா!'' கண்கள் கசிய ரஜினி சரிய, மிக அருகே ஒரு உறுமல் கேட்டது, அது ஒரு புலியின் உறுமல்!

அந்தப் பக்கமிருந்த மலைவாசி அலரினான்... ''சாப், டைகர் சாப்!''

கூடவே, பயத்தில் ஒரு நாய் கதறலாய்க் குரைக்கும் ஓசை!

- காந்தம் இழுக்கும்