Published:Updated:

”இன்னும் மீன் மாட்டலை!”

”இன்னும் மீன் மாட்டலை!”

”இன்னும் மீன் மாட்டலை!”

மிழர்கள் திருவிழாக்களில்தான் எவ்வளவு ஆராவாரம். மகிழ்ச்சி. அதுவும் கிராமங்களில் நடத்தப்படும் நரி பிடிக்கும் விழா, பூப்பறிக்கும் நோன்பு போன்ற விழாக்கள் சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டுச்செல்பவை. அதைப் போன்ற ஒரு விழாதான் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடக்கும் மீன்பிடித் திருவிழா. 

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஏரியில் இறங்கிக் கையில் இருக்கும் சிறிய துண்டு, வேட்டி, சேலைகளை விரித்து மீனைப் பிடிக்க முயற்சிக்க அல்லோலகல் லோலப்படுகிறது ஏரி. ஆத்தூர் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன் சுமார் 25 ஆண்டுகளாக இந்த விழாவில்  கலந்துகொண்டு மீன்பிடித்துவருகிறார். விழாவைப் பற்றி அவரிடம் பேசினேன்.

##~##

''இந்த மீன்பிடித் திருவிழா, எனக்கு நினைவு தெரிஞ்சு பல வருஷமா நடக்குது. இது பாரம்பரிய விழா. நாலு தலைமுறைகளா இந்த விழா நடக்கிறதா ஊர்ப் பெரியவங்க சொல்றாங்க. மீன்பிடித் திருவிழாவுக்கு ஒரு வாரம் முன்னாடியே தேதி, கிழமையைத் தண்டோரா போட்டுச் சொல்லிடுவாங்க. அதைக் கேட்டதும் சின்னவங்க முதல் பெரியவங்க வரை எல்லோரும் குஷி ஆகிடுவோம். அன் னைக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் எங்கே யும் போக மாட்டோம். லீவுதான்.  

கிடைக்கிற துணியை எடுத்துக்கிட்டு எட்டுப் பட்டி கிராம மக்களும் அதிகாலையிலேயே ஏரிக்கரை ஓரமாத் தயாராக காத்துக்கிட்டு இருப்போம். கருப்பண்ணசாமி அருள் வாக்குச் சொல்லாம யாரும் தண்ணிக்குள்ள காலை வைக்கக் கூடாது. பூசாரி, கருப்பண்ணசாமிக்குப் பூஜை போட்டு, அருள் வாக்குச் சொல்லிக் கொடியை ஆட்டுவார். அம்புட்டுதான். மொத்த ஜனமும் போட்டி போட்டு ஏரிக்குள்ள இறங்கு வாங்க. அந்த வேகத்துக்கு ஏரியில இருக்கிற  தண்ணி வெளியே பாய்ஞ்சிடும். கொஞ்சமாத் தான் தண்ணி இருக்கும்கிறதால ஒரு மீன்கூட தப்பிக்க முடியாது.

ஜிலேபி, கெளுத்தி, கெண்டைன்னு பல வகை மீன்கள் சிக்கும்.  இப்படி ஏரிக்குள்ள ஆயிரக்கணக்கான பேர் மீன் பிடிக்கும்போது வயசுப் பசங்களும், வயசுப் பொண்ணுங்களும் பண்ற அலப்பறை தாங்க முடியாது. குறும்புகாரப் பசங்க கூடை நிறைய மீன் பிடிச்சிட்டு, 'இன் னும் மீன் மாட்டலை... மாட்டலை’னு சொல் லுவாங்க. என் சின்ன வயசுல அதுக்கு அர்த்தம் புரியலை. அப்புறம் விவரம் தெரிஞ்சப்ப நானும் இந்த டயலாக்கைத்தான் சொன்னேன்.

”இன்னும் மீன் மாட்டலை!”

மீன்பிடி திருவிழாங்கிறது கலாசாரத் திருவிழா. இந்த விழாவுல கல்லாநத்தம், அம்மன்பாளையம், துளுக்கனூர், நரிக்குறவர் காலனி, சந்தனகிரி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துக்கிறாங்க. விழாவுல நிறைய மீன் கிடைச்சா அந்த வருஷம் நல்ல மழை பெய்யும். அதே மாதிரி விவசாயமும் தொழிலிலும் செழிப்பா இருக்கும். இது எங்களோட அசைக்க முடியாத நம்பிக்கை. அதே மாதிரி ஏரியில மீன் பிடிக்க யார் டெண்டர் எடுத்து இருந்தாலும்  இந்த விழாவுக்கு மட்டும் எதுவும் சொல்ல மாட்டாங்க. மொத்தத்துல இது அனைத்து சமூகத்தினரும் கொண்டாடுற நல்லிணக்கத் திருவிழா!'' என்றார்.

கிலோக்கணக்கில் மெகா சைஸ் கட்லா மீன்களுடன் கரை ஏறிக்கொண்டு இருந்தார் கல்லாநத்தத்தைச் சேர்ந்த சீனிவாசன். ''நாங்க தீபாவளிக்குத் துணி எடுக்குறோமோ இல் லையோ இந்த விழாவுக்குப் புதுத் துணி எடுத்து, சொந்தக்காரங்களை வரவழைச்சுக் கொண்டாடுவோம். ஒருத்தர் கூட வெறும் கையோட வீடு திரும்ப மாட்டாங்க. ஏன்னா, மீன் கிடைக்காதவங்களுக்கு நிறைய மீன் கிடைச்சவங்க மீனை அன்பளிப்பா கொடுப் பாங்க. விழா அன்னைக்கு ராத்திரியும் மறு நாளும் ஊருக்குள்ள மீன் வாசம் மணக்கும். ஆனா, வீட்டுல சாமி கும்பிட்டு, படையல் போட்ட பின்னாடிதான் மீன் குழம்பைத் தொடுவோம். அன்னைக்கு ஊருக்கு யாரு வந்தாலும் மீன் சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவோம். அப்பதான் அந்த வருஷம் முழுக்க வாழ்க்கை செழிப்பா இருக்கும்'' என்றார் மகிழ்ச்சியுடன்!

”இன்னும் மீன் மாட்டலை!”

- வீ.கே.ரமேஷ்
படங்கள்:ஏ.எம்.சுதாகர் 

அடுத்த கட்டுரைக்கு