Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

எந்திர பவன்... இருட்டு எண்!

பிரீமியம் ஸ்டோரி

'' 'வழக்கு எண் 18/9’ படம் விமர்சனங்களைக் குவித்த அளவுக்கு வசூலைக் குவிக்கவில்லையாமே?''

''யார் சொன்னது? சென்னை மாநகர வசூலிலேயே லாபம் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார் அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி. அது சரி, ஒரு படத்தை மதிப்பிட வசூல் மட்டும்தான் கருவியா என்ன?

நானே கேள்வி... நானே பதில்!
##~##

'வழக்கு எண்’ சென்று சேர வேண்டிய ரசிகர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. அந்தப் படம் பார்த்த பிறகு, கல்லூரியிலும் பள்ளியிலும் படிக்கும் தன்னுடைய இரண்டு மகள்களிடம் அன்றன்றைக்கு நடந்த விஷயங்களைப் பேச தினமும் அரை மணி நேரம் ஒதுக்குகிறார் என் நண்பர் ஒருவர். தியேட்டரோ, திருட்டு டி.வி.டி-யோ... 'வழக்கு எண்’ பதியப்பட வேண்டிய இடத்தில் பதியப்பட்டுவிட்டது.

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உலகப் பிரசித்தம். திருநெல்வேலிக்குச் சென்றால் நெல்லையப்பரைத் தரிசிக்காதவர்கள்கூட அந்த அல்வாவை ருசிக்காமல் இருக்க மாட்டார்கள். சரவண பவனும் உலகப் பிரசித்தம். உலகம் முழுக்கக் கிளைகளும் இருக்கின்றன. இந்தியாவைவிட்டு வெளியே சென்றாலும் எங்கு வேண்டுமானாலும்,  நீங்கள் சரவண பவனில் சாப்பிட முடியும். இரண்டுமே உலகப் பிரசித்தம் என்பதற்காக, இருட்டுக் கடையின் ஒரு நாள் வியாபாரத்தை சரவண பவனின் ஒரு நாள் வியாபாரத்துடன் ஒப்பிட முடியுமா? 'எந்திரன்’ சரவண பவன் என்றால், 'வழக்கு எண்’ இருட்டுக் கடை!''    

- வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை-4.

''கருணைக்கும் பரிதாபத்துக்கும் வித்தியாசம் உண்டா?''

''உண்டு. கருணை ஓடிச்சென்று உதவும். 'ச்சூ!’ கொட்டிவிட்டு போய்க்கிட்டே இருக்கும் பரிதாபம்!''

- என்.ஷாகிதா, சங்ககிரி.

'' 'மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் காரியங்களில் இறங்க மாட்டோம்’ என்று கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?''

''பின்னே! இல்லை என்றால் திகாரில் இட நெருக்கடி ஆகிவிடுமே!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

நானே கேள்வி... நானே பதில்!

''புதிதாக என்ன முயற்சி செய்தாலும் சுற்றி இருப்பவர்கள் எதையாவது ஏறுக்குமாறாகச் சொல்லி மனதை நோகடிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து எப்படி மீள்வது?''

''கீதா போகட்... லண்டன் ஒலிம்பிக்குக்குத் தேர்வான முதல் பெண் ரெஸ்லிங் வீராங்கனை. நாட்டுக்கு குத்துச் சண்டை சாம்பியன்களை வாரி வழங்கிய ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த விளையாட்டில் பயிற்சி எடுக்கவே மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் கீதா. வயிற்றில் இருக்கும் சிசு பெண் என்று தெரிந்தால், உடனே கருக்கலைப்பு செய்துவிடும் கீதாவின் ஊரில், கீதா குத்துச்சண்டைப் பயிற்சிக்குச் செல்லும்போது, 'குத்துச்சண்டைப் பயிற்சி உன் காதுகளை வீங்கச் செய்து உனக்கு காலிஃப்ளவர் காதுகளை உண்டாக்கும். அதன் பிறகு உனக்குக் கல்யாணமே நடக்காது!’ என்று ஊரே கேலி பேசி இருக்கிறது. ஆனால், அது எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை கீதா. இப்போது கீதாவின் பெயரைச் சொல்லித்தான் அவருடைய ஊரான பிவானியை மாநிலத் தலைநகரில் அடையாளம் சொல்கிறார்கள். நோகடிப்பவர்கள், உண்மையில் உங்கள் வேகத்துக்கு எரிபொருள் நிரப்புகிறார்கள்!''  

- மு.சம்சுதீன், திருச்சி-12.

''தி.மு.க - அ.தி.மு.க. ஒற்றுமை என்ன?''

''இரண்டு கட்சிகளுமே தற்போது இருக்கும் தலைமைக்குப் பின் என்னஆகும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? மாற்று என்ன? - இப்படி எழுகின்ற கேள்விகள்தான் ஒற்றுமை. ஓ.கே-வா?''

- எம்.ஹரிஹரன், சென்னை-56.

''நாட்டு நடப்பை அப்படியே சொன்ன சினிமா பாடல் உண்டா?''

''1948-ல் வெளிவந்த 'போஜன்’ என்கிற படத்தில் காளி என்.ரத்தினம் பாடிய பாடல் இது...

'தத்தாரி அரசாளும்
தனிக்காட்டு ராஜ்ஜியத்தில்
கத்தரிக்கோல் மந்திரியாம்
கன்னக்கோல் காவலராம்
கஞ்சிக் கலயத்தில்
கட்டெறும்பு கடிக்குதடா
பஞ்சத்துக்குப் பஞ்சமில்லை
பாவிப்பய ராஜ்ஜியத்தில்!’ ''

- சாய்மீரா, மயிலாடுதுறை.

'' 'தேவர் மகன்’ படத்தை ரீ-மேக் செய்தால்?''

'' 'போங்கடா... போய் எல்லாரும் குடிங்க. புள்ளகுட்டிங்களையும் குடிக்க வைங்க. குடிச்சு... நாசமாப் போங்க’ என்று வசனம் பேச வேண்டி இருக்கும்!''

- இரா.தியாகராஜன், நாகப்பட்டிணம்.

''அரசியலில் தொண்டர், குண்டர் - இருவரின் பங்கு என்ன?''

''இருவரும் ஒன்றுதான். அவர்கள் ஆளும் கட்சியில் இருக்கிறார்களா, எதிர்க் கட்சியில் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்துப் பெயர் மட்டும் மாறும்!''

- எஸ்.விவேக், சென்னை-53.

''மன்மோகன் சிங்கும் ........ம்?''

''நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய பாடலின் முதல் எழுத்து 'உ’ அல்ல... 'ஊ’ நெடில்!''

- புதூர் பாலா, நாமக்கல்.

''சமீபத்தில் படித்ததில் அதிர்ச்சி அடையவைத்த செய்தி எது?''

''தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடியில் ஒரு கோடிப் பேர் குடிக்கிறார்கள். அவர்களில் சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கிறார்கள். அவர்களில் 13 வயது சிறுவர்களும் உண்டு!''

- அ.குணசேகரன், புவனகிரி.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு