Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

உண்ணா ஹஜாரே!

நானே கேள்வி... நானே பதில்!

உண்ணா ஹஜாரே!

Published:Updated:
##~##

''அண்ணா ஹஜாரே 'மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று அடிக்கடி அறிவிக்கிறாரே?''

 ''மனிதர் பேசாமல் தன் பெயரை 'உண்ணா ஹஜாரே’ என்று மாற்றிவைத்துக்கொள்ளலாம்.''

- ஷேக் சிந்தா மதார், கடையநல்லூர்.

''ஜெயில் மகள் பிரியா மகாலட்சுமி செய்த தவறு என்ன?''

''அனைவரையும்போல முதல்வரை 'அம்மா’ என்று சொல்லாமல், 'நான் அவருடைய மகள்’ என்று சொல்லிக்கொண்டு இருப்பதுதான்.''

- சிக்ஸ் முகம், விஜயமங்கலம்.

''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்கூட விடை தெரிந்துகொள்ள முடியாத கேள்வி எது?''

''சென்னை நகரப் பேருந்து நடத்துநர்களிடம் உண்மையிலேயே சில்லறை இருக்காதா?''

- மல்லிகை நடராசன், சேலம்.

'' 'காங்கிரஸில் சிலர் தொண்டர் பலம் இருப்பதுபோல் பூச்சாண்டி காட்டுகிறார்கள்’ என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகிறாரே?''

''உண்மைதான். 'சிலர்’ என்ற வார்த்தையை எடுத்துவிட்டுப் படியுங்கள்!''

- ஆர்.நாகராஜன், சென்னை-61.

''அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை மன்மோகன் சிங்கை செயல்படாத பிரதமர் என்று விமர்சனம் செய்த தற்கே அவர் தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லையே?''

''அட! அதைத்தாங்க அவங்களும் சொன்னாங்க!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''டி.வி. மெகா தொடர்களால் எதையாவது சாதிக்க முடியுமா?''

நானே கேள்வி... நானே பதில்!

''அமெரிக்க டி.வி. சேனல் ஒன்றில் 'தி ரூட்ஸ்’ என்ற மெகா தொடர் வந்தது. அதை எழுதியவர் பெயர் அலெக்ஸ் ஹெய்லி. அது நாவலாகவும் அதே பெயரில் வெளிவந்தது (இந்த நாவல் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தமிழில் 'ஏழு தலைமுறைகள்’ என்ற பெயரில் வெளிவந்து உள்ளது).

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்களின் ரிஷிமூலம்பற்றியும் அமெரிக்காவின் வளத்துக்காக அவர்கள் அடிமைகளாகப்பட்ட வேதனைகள், அவமானங்கள், வெள்ளை எஜமானர்களின் குரூர முகங்கள் ஆகியவை அதன் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டன.

அந்தத் தொடர் டி.வி-யில் ஒளிபரப்பான காலகட்டத்தில், அந்த நாட்டு விமான நேரம் மாற்றி அமைக்கப்படும் அளவுக்கு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தின. தெருக்கள் வெறிச்சோடின. தொடர் முடிந்த ஒரு சில தினங்களில் அமெரிக்காவின் மிகப் பெரிய நகர் ஒன்றில் தன்னிச்சையாகக் கூடிய ஒன்றரை லட்சத்துக்கும் மேலான வெள்ளையர்கள் ஒரு சதுக்கத்தில் மண்டியிட்டுத் தங்களது முன்னோர்கள் கறுப்பர் களுக்கு இழைத்த கொடுமைகளுக்காகக் கண்ணீர் விட்டு பிராயச்சித்தம் தேடினர். இந்த மாதிரி ஒரு விளைவை நம் மெகா தொடர்களால் சாதிக்க முடியுமா? சந்தேகம்தான்!''

- நா.நாராயணன், சென்னை-61.

''ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்த பேருந்தில் நடந்த சைக்கோ கொலை பயங்கரம் அல்லவா?''

''காரணமற்ற கொலைகளைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அறிந்தே செய்யப்படும் கொலைகள் அதைவிடக் கொடூரமானவை. கோவையில் நாகஜோதி என்ற பெண்ணுக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் வயிற்றில் எட்டி உதைத்தே கொலை செய்திருக்கிறார்கள் அவரது கணவனும் மாமியாரும்.

பஞ்சாபில் சஞ்சீவ்குமார் என்பவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு அவசர வார்டுக்கு மாற்றப்பட்டு உயிர் காக்க சுவாசக் கருவி பொருத்தப்பட்டு இருந்திருக்கிறது. சுவாசக் கருவிக்கான டெபாசிட் தொகையாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். அதை சஞ்சீவ் குமாரால் கட்ட முடியாததால் நர்ஸ் குழந்தையின் சுவாசக் கருவியை அகற்றிவிட்டார். பிறந்த ஐந்தே நாட்களில் குழந்தை இறந்துவிட்டது. இந்தக் கொலைகளை என்னவென்று சொல்வது!''

- வி.அரசு, திருக்கோவிலூர்.

நானே கேள்வி... நானே பதில்!