Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நேர்மை C/O கக்கன் பேரன்!

நானே கேள்வி... நானே பதில்!

நேர்மை C/O கக்கன் பேரன்!

Published:Updated:
நானே கேள்வி... நானே பதில்!

''அம்மாவுக்கும் அன்னைக்கும் என்ன வித்தியாசம்?''

''ஏதோ சொல்ல நினைத்து, அருகில் சென்றவுடன், தொண்டை அடைத்து, எச்சில் விழுங்கினால்... அது அம்மா.

என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும், காதுல விழவே இல்லை என்றால்... அது அன்னை!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''தற்போதைய விளையாட்டு அரசியலில் 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்று எதைச் சொல்லலாம்?''

''நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில், டென்னிஸ் போட்டிக்கு அனுபவம் வாய்ந்த நம்பிக்கை நட்சத்திரம் லியாண்டர் பயஸுடன் அவருக்கு அடுத்தபடி அனுபவம் வாய்ந்த மகேஷ் பூபதி ஜோடி சேர்ந்து விளையாடியிருந்தால், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தையாவது வென்றிருக்கலாம். ஆனால், பூபதி என்ன செய்தார்? 'எனக்கு ரோகன் போபண்ணாதான் வேண்டும். பயஸுடன் சேர மாட்டேன்’ என்று சிறுபிள்ளைத் தனமாக வீண் பிடிவாதம் பிடித்ததால் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இவரின் பிடிவாதத்துக்கு வளைந்து கொடுத்தது டென்னிஸ் சங்கம். இன்று இதே காரணத்தைச் சொல்லி, இந்திய டேவிஸ் கோப்பை அணியில் இருந்து மகேஷ் பூபதியும் ரோகன் போபண்ணாவும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.''

- சின்னராஜா, பெங்களூரு.

''முந்தைய காலங்களில், அரசியல்வாதி களிடம் நேர்மையின் நிழல் தெரிந்தது என்பதை நம்ப முடிகிறதா?''

நானே கேள்வி... நானே பதில்!

''இன்றைய அரசியல்வாதிகளைக் காணும்போது, அது நம்பும்படியாக இல்லை. ஆனால், சமீபத்திய அனுபவம் ஒன்று, அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளச் செய்தது. கடந்த மே 24-ம் தேதி, ஏற்பட்ட விலை ஏற்ற அறிவிப்புக்குப் பிறகு, பதுக்கலால் பெட்ரோலுக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில், கள்ள மார்க்கெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு

நானே கேள்வி... நானே பதில்!

180 வசூலிக்கப்பட்ட நேரம் அது. அந்தச் சமயத்தில், நான் அவசர அலுவலாக சென்னை யில் இருந்து, திருச்சி நோக்கிக் காரில் பயணித்தேன். நெடுஞ்சாலையில் பல பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல் இல்லை என்று கை விரித்தார்கள். ஆனால், கேன்களில் பெட்ரோல் வெளியே போவதைச் பல இடங்களில் காண முடிந்தது. கடைசியாக ஒரு பெட்ரோல் பங்க்கில், கை விரிக்காமல் பெட்ரோல் நிரப்பி, உரிய விலையை வசூலித்தார்கள். 'இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, மற்றவர்கள் கொள்ளை லாபம் பார்க்கும்போது, நீங்கள் மட்டும் எப்படி?’ என்று ஆச்சர்யத்துடன் அதன் ஊழியர்களிடம் கேட்டேன்.

''எல்லாம், எங்க முதலாளியோட நேர்மைதான் காரணம்; அவுங்க தாத்தாவிடம் இருந்து கத்துக்கிட்டார்'' என்றவரிடம், முதலாளி பற்றி விசாரித்தேன். ''காலம் சென்ற, முன்னாள் அமைச்சர் கக்கனின் பேரன்தான் என்னுடைய முதலாளி'' என்றார். 1957 முதல் 1967 வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து, பொதுப் பணித் துறை மற்றும் போலீஸ் துறை அமைச்சராகத் திறம்படச் செயல்பட்ட கக்கன் அவர்கள் நேர்மையின் அடையாளம். தன் பதவிகளைப் பயன்படுத்தி, சொத்து சேர்க்காத அவர், தன் நேர்மையையும் நாணயத்தையும் தன் சந்ததிகளிடம் விட்டுச் சென்றிருப்பதை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.''

- எஸ்.ராமன், சென்னை-17

''புராண காலத்துலகூட 'நச்’ பதில் உண்டா?''

''ஒரு பத்திரிகையில் படித்தது, தங்களுக்கும் தர்றேன்.

துஷ்யந்தன் கேள்வி: 'பெண்ணே... நீ யார்? உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்? உனக்குக் கணவன் இருக்கிறானா? உனக்கு என்ன வேண்டும்? இந்த நாட்டில் யாராவது உனக்குக் கெடுதல் செய்தார்களா? இந்தச் சிறுவன் யார்? இவனுக்கும் உனக்கும் உள்ள உறவு என்ன?’

சகுந்தலை பதில்: 'மகனே... உன் தந்தைக்கு வணக்கம் சொல்!’ ''

- சௌந்தரராஜன், சென்னை-26

''சமீபத்தில் உங்களைப் பாதித்த செய்தி?''

''மனிதம் பேசும் செய்தி அது!

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள சிற்றூரில் கடை நடத்தும் இஸ்லாமிய நண்பர், தன்னிடம் யாசகம் கேட்டு வந்த ஒரு மன நோயாளிக்கு ஒரு வேளை உணவு தந்துப் பசியாற்றினார். அப்படியே அந்தக் கடை அருகிலேயே தங்கிவிட்டார் அந்த மன நோயாளி. வெகு காலம் அங்கேயே தங்கிஇருந்த அவர், கடந்த ரம்ஜான் தினத்தில் சாக்கடைக்குள் விழுந்து உயிர் இழந்தார். விஷயம் தெரிந்து வந்த இஸ்லாமிய நண்பர் பெருநாள் கொண்டாட்டங்களை எல்லாம்  தள்ளிவைத்துவிட்டு, அந்த மன நோயாளியின் இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்து முடித்துவிட்டு... அல்லாவைத் தொழச் சென்றார். நாளிதழ் ஒன்றின் கடைசிப் பக்கத்தில் வெளியான இந்தச் செய்தி, தலைப்புச் செய்திபோல் இன்னமும் மனதுக்குள் தளும்பிக்கொண்டே இருக்கிறது.''

- மகா, சென்னை-50

நானே கேள்வி... நானே பதில்!