Published:Updated:

தலித் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Vikatan Correspondent

புதுடெல்லி, ஜூன் 18,2011

ஊர்ப் பொதுக் குடிநீர்க் குழாயில் தண்ணீர் எடுத்த தலித் சிறுவன், சாதி பெயரைச் சொல்லி, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ##~~##

கோயம்புத்தூர் - கரிக்கிளிபாளையம் ஊரில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக வெளியான பத்திரிகை செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.

கரிக்கிளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுவன் ஏ.வசந்தகுமார் பொதுக் குடிநீர்க் குழாயில் தண்ணீர் எடுத்துள்ளான். அப்போது, வேறொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் தாமோதரன் என்ற நபர் சேர்ந்து அந்தச் சிறுவனைத் தடுத்துள்ளனர்.

அத்துடன், அச்சிறுவனை அவர்கள் சாதிப் பேரைச் சொல்லி இழிவுடன் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். பிறகு, சிறுவன் வசந்தகுமார் தனது ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இந்தச் சம்பவத்துடன், குறிப்பிட்ட அந்த கிராமத்தில் தலித் சமுதாய மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே செல்பேசியில் பேசவும், உள்ளூர் சலூனில் முடி திருத்தம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற தகவலையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது.

கரிக்கிளிப்பாளையத்தில் நிகழும் சம்பவங்கள் உண்மை எனும்பட்சத்தில், 1989-ம் ஆண்டின் 'தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின்'படி இது குற்றமாகும்.

ஆகவே, 'தலித் சிறுவன் சிறுமைப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்னென்னை?

இந்தச் சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டதா?

இதுபோன்று தலித்துகள் சிறுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?'

இந்தக் கேள்விகளுக்கு 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.