Published:Updated:

செய்திச் சுருக்கம்: ஜூன் 18,2011

Vikatan Correspondent

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வருவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ##~~##

முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், லோக்பால் மசோதா, தெலுங்கானா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதனிடையே, லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர் இடம் பெறுவதை மத்திய அரசு எதிர்க்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

*
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை விரைவில் வெளியிடவுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ஒருவர் தனது சொத்து விவரங்களை பொதுமக்கள் முன்பு பகிரங்கமாக வெளியிடுவது இதுவே முதல்முறை.

*
சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தன் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்களை மகிழ்விப்பது தான் தனது லட்சியம் என்றும், கூடிய விரைவில், ராணா படத்தில் தாம் தோன்றவுள்ளதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

*
தமிழகத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, நெல், கரும்பு, பருத்தி, பயிறு வகைகள் மற்றும் எண்ணை வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்து, விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

*
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

*
கோயம்புத்தூர் அருகேயுள்ள கரிக்கிளிபாளையம் என்ற ஊரில், பொதுக் குடிநீர்க் குழாயில் தண்ணீர் எடுத்த தலித் சிறுவன், சாதி பெயரைச் சொல்லி, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

*
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை,கிராம் ஒன்றுக்கு 2,115 ரூபாயாக இருந்தது.

*
இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கிங்ஸ்டனில் திங்கட்கிழமை தொடங்குகிறது.

*
மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் தன்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக இந்திய வீரர் திராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.