Published:Updated:

ஸ்பைடர் மேன் உடையில் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை வேட்பாளர்!

Vikatan Correspondent
ஸ்பைடர் மேன் உடையில் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை வேட்பாளர்!
ஸ்பைடர் மேன் உடையில் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை வேட்பாளர்!
ஸ்பைடர் மேன் உடையில் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை வேட்பாளர்!

மும்பை: தெற்கு மும்பை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஸ்பைடர் மேன் உடையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

தெற்கு மும்பையில் வசித்து வருபவர் கவுரவ் சர்மா. இவர் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் நன்கு பயிற்சி பெற்றவர். அந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு உடல் திறன் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

31 வயதாகும் கவுரவ் சர்மா, இந்திப் படங்களில் கதாநாயகர்களுக்காக டூப் போட்டு சுவர்களில் ஏறும் காட்சிகளில் நடித்து வருகிறார். மேலும், அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் சுவர் வழியாக 90 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்தவர். இவ்வாறு சாதனைகள் செய்யும்போது அவர் 'ஸ்பைடர் மேன்' உடை அணிந்து கொள்வார். இதனால் இவரை 'இந்தியன் ஸ்பைடர் மேன்' என்று அழைக்கின்றனர்.

இந்நிலையில், கவுரவ் சர்மா, நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் இவருக்கு ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் ஸ்பைடர் மேன் உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் சுற்றி வருகிறார். மேலும், வீடுகளுக்கு செல்லும் அவர் வாசல் வழியே செல்லாமல், சுவர் வழியாக ஏறி, ஜன்னல் வழியாக உள்ளே இருப்பவர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

ஸ்பைடர் மேன் உடையில் சென்று இவர் வாக்கு சேகரிக்கும் விதத்தை, சிறுவர் மற்றும் பெரியோர்களும் ஆச்சரியமுடன் பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து கவுரவ் சர்மா கூறுகையில், ''இந்த தொகுதியில் இதுவரை வெற்றி பெற்ற அரசியல் கட்சியினர் எந்த நன்மையும் செய்யவில்லை. எனவே, தற்போது மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த தொகுதிகளில் ஏராளமான குடிசைப் பகுதி உள்ளது. இங்கு நவீன கழிப்பிட வசதி இல்லை. இவைகளை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

எனக்கு ஜன்னல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் வாசல் வழியாக செல்லாமல் ஜன்னல் வழியாக ஓட்டு கேட்டு வருகிறேன். இதனால் வாக்காளர்களிடமும் நல்ல ஆதரவு கிடைத்து உள்ளது. நான் வெற்றி பெற்ற பின்பும், உங்கள் பிரச்னையை தீர்க்க வீடு வீடாக வருவேன் என்று சொல்லி ஓட்டு கேட்கிறேன்'' என்றார்.