Published:Updated:

தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!

தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!
தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!

ந.ஆஷிகா

படங்கள் : பா.காளிமுத்து

'பொம்பளப் புள்ள பொழுது சாயுறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்’

- தினம்தோறும் வீட்டில் கேட்கும் வசனம்.

'பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் சிக்காமல் இருக்க, இரவில் வெளியில் செல்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும்’

- தினம் தினம் நாட்டில் ஒலிக்கும் அறிவுரை.

ஆனால், 'தூங்கா நகரம்' என்றழைக்கப்படும் மதுரையில், கருமை அடர்ந்திருக்கும் பின்னிரவு வரை ரோட்டோரக் கடைகளில் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்கள்... பெண்களே!

தெப்பக்குளம் ஏரியா... இரவு 10 மணி.

ஆங்காங்கே ஆட்கள் நடமாடிக்கொண்டிருக்க... தன் தள்ளுவண்டிக் கடையில் சுடச்சுட காளான் கிரேவி தயாரித்துக்கொண்டிருந்தார் ராமலட்சுமி. அருகில் சென்று, ''காளான் கிரேவி கொடுங்க'' எனச் சொல்லிவிட்டு, பேச்சுக் கொடுத்தோம்.

''இங்க, 11 வருஷத்துக்கு முன்ன மொதமொதலா கடை ஆரம்பிச்சது நாங்கதான். முன்ன எல்லாம் கூட்டம் ஜேஜேனு வரும். இப்போ குறைஞ்சுடுச்சு. தெப்பக்குளத்தச் சுத்தி 12 பானிபூரி கடை வந்துருச்சே! சாயங்காலம் 5 மணிக்கு வண்டியத் தள்ளிட்டு வந்துருவேன். இதுக்காக  காலையில ஆறு மணியிலிருந்தே தயாராக ஆரம்பிச்சுருவேன். வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சு, புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பின கையோட, காய்கறிகளை சுத்தம் பண்ணி, குருமா, மசாலா, காளான் எல்லாம் செஞ்சுட்டு, பூரி போடுவேன். என் வீட்டுக்காரரு கூடமாட ஒத்தாசையா இருப்பாரு. சாயங்காலமா வண்டியத் தள்ளிக்கிட்டு இங்க வந்தா, விடியுறதுக்கு கொஞ்ச நேரம் முன்னதான் வீடு திரும்ப முடியும்.

தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!

கோயில், கொளம், சொந்தக்காரங்க விசேஷம், கொழந்தைங்களக் கூட்டிக்கிட்டு வெளிய போறதுனு எந்த சந்தோஷமும் கிடையாது. சாயங்காலம் புள்ளைங்க பள்ளிக்கூடம் விட்டு வர்ற நேரத்துக்கு, நாங்க இங்க வந்துடுவோம். அதுக தூங்கிக்கிட்டிருக்கும்போதுதான் வீடு திரும்புவோம். அதுகளோட ஆச தீர பேசிக்கக்கூட முடியாது. லீவு விட்டா, 'வீட்டுல இரும்மா’னு கெஞ்சுங்க. ஆனா, அப்போதானே கடைக்கும் கூட்டம் நெறைய வரும்? பொழப்பு இதுதான்னு ஆகிப்போச்சு... அப்புறம் இதுல என்ன நெற கொற இருக்கோ, அதை ஏத்துக்கத்தானே வேணும்?!

ராத்திரி நேரத்துல கடை வெச்சு நடத்துறதுல இதுவரைக்கும் பெருசா எந்தப் பிரச்னையும் வந்ததில்ல. இந்த ரோட்டுல எப்பவுமே போலீஸ் வண்டி நிக்கும், அதனால தைரியமா இருப்போம்'' சுடச்சுட காளான் கிரேவி தந்தபடியே சொன்னார், ராமலட்சுமி.

விளக்குத்தூண் பகுதி (மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் வழி)... இரவு 11 மணி.

பச்சை மிளகாய்த் தோரணம் கட்டியிருந்த வண்டிக் கடையில், ஆவி பறக்கும் மிளகாய் பஜ்ஜி தயார் செய்து வைத்திருந்த சரஸ்வதி, மும்முரமாக காலிஃப்ளவர் பஜ்ஜி செய்துகொண்டிருந்தார். அந்த நேரத்திலும் ஆட்கள் வந்து பஜ்ஜி வாங்கவும் போகவுமாக இருக்க, கிடைத்த இடைவெளி நிமிடங்களில் நம்மிடம் பேசினார்...

தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!

''20 வருசமா கடை வெச்சுருக்கேன். சின்ன வயசுல இருந்து கஷ்டம். கட்டிக் கொடுத்த இடமும் சரியில்ல. அவரு வேலைக்கே போக மாட்டாரு. அவரை நம்பி இருந்தா... ரெண்டு பொண்ணுங்களையும், பையனையும் வளர்க்க முடியாதுனுதான் கடை போட ஆரம்பிச்சேன். காலையில 4 மணிக்கு எந்திரிச்சா, ராத்திரி ஒரு மணி வரைக்கும் வேலை இருக்கும். நண்டும் சிண்டுமா இருந்த புள்ளங்கள ஆளாக்கிக் காட்டணும்ங்கிற தவிப்பும், இன்னொருத்தன் வாசல்ல போய் உதவினு நிக்கக்கூடாதுங்கிற வைராக்கியமும்தான் களைப்பு பாக்காம உழைக்க வெச்சுது. இதோ இப்போ பையன் வளர்ந்து வேலைக்குப் போறான், ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்துட்டேன். கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போயிருக்கோம்'' என்றவர்,

''இங்கிருந்து மூணு மைல் தொலவுல வீடு இருக்கு. காலையில பத்தரை மணிக்கு எல்லாம் ஜாமான் ஏத்திக்கிட்டு வண்டிய இங்க தள்ளிட்டு வந்துடுவேன். உளுந்த வடை, ஆமை வடை, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜினு எல்லாம் போடுவேன். நாள் பூரா நின்னுக்கிட்டே இருக்கறதால கால் நரம்பு எல்லாம் வலிக்கும். பக்கத்துல பாத்ரூம்கூட இல்ல. ஒரு கிலோமீட்டர் தூரத்துல ஒரு பொதுக்கழிப்பறை இருக்கு. அவ்வளவு தூரம் கடையை விட்டுட்டுப் போகமுடியாதுனு, நான் போகவே மாட்டேன். இந்தா இப்போ கல்லடைப்பாம். உடம்புக்கு சொகமில்லாம இருக்கு.

பகலோ, நைட்டோ... பொம்பளதானேனு வம்பு பேசுறதுக்கு சில பேர் இருக்கத்தான் செய்றாங்க. அப்போவெல்லாம் கோபப்பட்டு திருப்பிப் பேசவே மாட்டேன். ஆத்திரப்பட்டு சண்டை போடுறதைவிட, பேசுறவன் முன்ன ரெண்டு நிமிஷம் அமைதியா நிக்கறதால நாம் ஒண்ணும் தோத்துப் போக மாட்டோம்'' என்றவாறே, கடையை மூட பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தார் சரஸ்வதி.

தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!

சிம்மக்கல் பழமண்டி... இரவு 12.30 மணி.

கடைகள் அனைத்தும் பெரும்பாலும் அடைக்கப்பட்டு, ஆங்காங்கே ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பசி வயிற்றைக் கிள்ள, ஏதாவது கையேந்திபவன் இருக்கிறதா என்று தேடியவாறே சென்றோம். பிளாட்பாரத்தில் இட்லி அவித்துக்கொண்டிருந்தார், நாகரத்தினம். அந்த நேரத்திலும் சாப்பிடுவதும், பார்சல் வாங்குவதுமாக இருந்தனர்.

''வெளியூர்கள்ல இருந்து வண்டியில வர்ற பழங்கள இங்க இந்த நேரத்துலதான் இறக்குவாங்க. அதனால எந்த நேரமும் கூட்டமிருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னதான் இட்லி கடை போட ஆரம்பிச்சேன். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு அடுத்த வருஷம் காலேஜ் படிக்கப் போறா. பையன் பத்தாவது படிக்கறான். நல்லா இருந்த குடும்பம், என் வீட்டுக்காரர் குடிப்பழக்கத்தால எல்லாம் போச்சு. யாரைக் குத்தம் சொல்ல... தெருவுலயே ரெண்டு டாஸ்மாக் கடை இருக்கு. அவர் வேலைக்குப் போறதுல்ல. அதான் நான் பிளாட்பாரத்துல கடை வைக்க

தூங்கா நகரமும்... தூங்காத பெண்களும்!

வந்துட்டேன். இதுல தெனம் 400 ரூபா லாபம் கிடைக்குது. ரெண்டு, ரெண்டரை மணி வரை வியாபாரம் நடந்துட்டுதான் இருக்கும். என்ன ஒண்ணு... தூங்கம்ங்கிறதே மறந்துபோச்சு'' என்று பார்சலில் அளவாக சட்னி வைத்து கட்டிய நாகரத்தினம்,

''இவுங்கதான், 'என் கடை வாசல்லயே கடை போடு, நான் இருப்பேன்... பயம் ஒண்ணும் இல்ல...’னு சொல்லி என்னை இட்லிக்கடை போடச் சொல்லி ஐடியா கொடுத்தாங்க...'' என்று பக்கத்து கடை சித்ரா தேவியைக் கைகாட்ட... அவரிடமும் பேசினோம்.

''எட்டு வருசமா கடை வெச்சுருக்கோம். இது ஆள் புழக்கமான ஏரியாங்கிறதால, விடிய விடிய கடை திறந்திருக்கும். பகல்ல நான் வீட்டுல வேலை பார்க்கும்போது, அவர் கடையைப் பார்த்துக்குவாரு. நைட்டு ஆள் நடமாட்டம் இருக்கறவரைக்கும் நான் பாத்துப்பேன், ஆள் நடமாட்டம் குறைஞ்சதும் அவரு துணைக்கு இருப்பாரு. நானும் நாகரத்தினமும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கோம். நிச்சயம் நல்லபடியா முன்னேறி பசங்களைப் படிக்க வெச்சு நல்ல நெலமைக்கு கொண்டு வருவோம்!'' என்றார் சித்ராதேவி, டிரைவர் அண்ணன் ஒருவர் கேட்ட கூல்டிரிங்ஸை எடுத்து தந்தபடி.

இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டுக் கிளம்பினோம்!

- அவள் விகடனிலிருந்து...