Published:Updated:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9 வது பிளாட்பாரத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

9வது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் 9 வது பிளாட்பாரத்திற்கு வந்தது. பயணிகள் இறங்கியும், ஏறியும்  கொண்டிருந்த நிலையில், அந்த ரயிலின்  எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் 7.25 மணி அளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது.

இதில் ஸ்வாதி என்ற 22 வயது இளம்பெண் பலியானார். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இவர் பெங்களூரிலிருந்து குண்டூர் செல்வதற்காக இந்த ரயிலில் பயணித்துள்ளார்.

14 பேர் காயம்

மேலும் 14 பேர் காயமடைந்ததாகவும், இதில் 11பேர் படுகாயமடைந்ததாகவும், இவர்கள் அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 பேர் கவலைக்கிடம்

மேலும் 3 பேரது தலையில் பலத்த காயமடைந்ததால், அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்

ரயில் பெட்டிகள் சேதம்

இந்த குண்டுவெடிப்பில் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால்   சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையினரது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

குறைந்த சக்தி குண்டு

வெடித்த குண்டுகள் இரண்டும் குறைந்த சக்தி கொண்டதாக இருந்ததால், சேதம் அதிக அளவில் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள்

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் விரைந்து வந்து ரயில் நிலையத்தின் வேறு இடங்களில் ஏதேனும் குண்டு உள்ளதாக என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். அத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெட்டிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்

சீல் வைப்பு

குண்டுவெடிப்பு நிகழ்ந்த 9 வது பிளாட்பாரம் சீல் வைக்கப்பட்டு, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பலி 1; 14 பேர் காயம்

ரயில் சேவை ரத்து

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் கைவரிசையா?

இதனிடையே இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என உடனடியாக தெரியவராத நிலையில், இது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரு நகரை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் வெளியான நிலையில், இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாத கும்பல் அல்லது அவர்களுக்கு ஆதரவாக இங்கிருந்து செயல்படும் கும்பல் இந்த குண்டுவெடிப்பை அரங்கேற்றி இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நிவாரணத்தொகை

இந்நிலையில்  குண்டுவெடிப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் சர்மா, வெடித்த 2 குண்டுகள் குறைந்த சக்தி கொண்டவை என்றும், குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000 மற்றும் இலேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

'10.30 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் புறப்படும்'

இதனிடையே குண்டுவெடிப்பால் சேதமடைந்த  கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மாற்று பெட்டிகள் இணைக்கப்பட்டோ அல்லது முற்றிலும் வேறு ரயிலோ உரிய பாதுகாப்புடன் கவுகாத்திக்கு இயக்கப்படும் என் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தனிப்படை அமைப்பு

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது ரயில்வே போலீஸ் அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தில் ஒருவரிடம் விசாரணை

இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில் பெட்டிகளுக்கு அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 மணி நேரமாக ஒருவர் பதுங்கி இருந்ததாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதாகவும், இதனைத் தொடர்ந்து அநத நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டிஜிபி ராமானுஜம் விசாரணை

இந்நிலையில் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமானுஜம், குண்டுவெடிப்பு தொடர்பாக உளவுப் பிரிவு போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், வெடித்த குண்டு எத்தகைய பொருள் என்பதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் தாமதமாக வந்த ரயில்

மேலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என ராமானுஜம் மேலும் தெரிவித்தார்.