Published:Updated:

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கு கி.வீரமணி கண்டனம்!

Vikatan Correspondent
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்புக்கு கி.வீரமணி கண்டனம்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று (1ஆம் தேதி) காலை பெங்களூர் - கவுகாத்தி ரயில் பெட்டியில் இரண்டு குண்டுகள் வெடித்து, அதில் ஒரு பெண் பலியாகியுள்ளார். மேலும் 14 பேர் காயம் என்கிற செய்தி அதிர்ச்சிக்குரியது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் வீசியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில், அதுவும் தலைநகரத்தில் இப்படியொரு நிகழ்வு கண்டிக்கத்தக்கது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மிகவும் விழிப்புடன் மத்திய, மாநிலக் காவல்துறை, புலனாய்வுத் துறை இருந்திருக்க வேண்டாமா?

சாலைப் பயணத்தைவிட பாதுகாப்பானது, செலவு குறைவானது என்று பொதுமக்கள் ரயிலைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் நடந்திருப்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும். வன்முறைக்கு மதமோ, நிறமோ கிடையாது. வன்முறை எங்கு, எவரால், கிளம்பினாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

சென்னையில் நடந்த இந்தக் குண்டு வெடிப்பே இறுதியானதாக இருக்கட்டும். காவல்துறை, பொதுமக்கள் இரு தரப்பு ஒத்துழைப்பும் இருந்தால் கண்டிப்பாக இந்த வெறுக்கத்தக்க அநாகரிகச் செயலைத் தடுத்து நிறுத்தி விடலாம்'' எனக் கூறியுள்ளார்.