Published:Updated:

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

Vikatan Correspondent
விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4
விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

(ஆனந்த விகடன்: 26.1.2011) 

ஆர்.சுஜாதா, சென்னை.

  ''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''

எம்.பாஸ்கரன், மயிலாடுதுறை.

 ''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''

''நான் அப்படிச் சொல்லவில்லை. என் வாரிசுகளே என் கண்ணுக்குத் தெரியும் அவர்களையும் விஞ்சும் திறமையை உணர நேர்ந்தால் உடனே சொல்லிவிடுவேன்!''

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 ''உண்மையைச் சொல்லுங்க கமல் சார், நீங்க நல்லவரா... கெட்டவரா?''

('தெரியலப்பா’னு சொல்லக் கூடாது!)

''எல்லோரையும் மாதிரி ரெண்டும்தான்!''

ஆர்,ஜேஸ்மின் ரமேஷ், மதுரை.

''முதல் துரோகம் ஞாபகத்தில் உள்ளதா... என்ன என்று பகிர்ந்துகொள்ள முடியுமா?''

''பகிர்ந்துகொள்ள முடியாத பல துரோகங்கள் உள்ளன. பகிர்வதாக இல்லை!''

எம்.மோகன், வேலூர்-2.

''உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார்?''

''திருமதி ராஜலட்சுமி, திரு சீனிவாசன். இருவரும் தம்பதியினர். என் தாய், தந்தையரும்கூட!''

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

 ''அந்த மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை சுஜாதா உங்களிடமாவது சொன்னாரா?''

''சொன்னாரே... ஆனா, யார்கிட்டேயும் சொல்லாதேனு சத்தியம் வாங்கிட்டுப் போயிட்டார்!''

ஆர்.ராமகிருஷ்ணன், போடிநாயக்கனூர்.

''சுஜாதா இருந்திருந்தால்...''

''இன்னும் நிறையக் கதைகளும் கதைப்பதும் தொடர்ந்திருக்கும்!''

ந.சின்னசாமி, அன்னதானபட்டி.

''சப்பாணிக்கும் ராஜ மன்னாருக்கும் உள்ள உறவு?''

''இரண்டு பேருமே என் தூரத்து உறவுகள்!''

எஸ்.பி.சுப்பராகவன், திருப்பூர்.

 '' 'என்னைப்போல் ஒருவன்’ என்று யாரையாவது நினைத்திருக்கிறீர்களா?''

 ''எஸ்.பி.சுப்பு உள்பட எல்லோரையும்!''

 ''நீங்கள் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களைச் சிறந்த நடிகராக நீங்கள் உணர்ந்த தருணம் எது?''

 ''இன்னும் உணரவில்லை. நான் வெறும் வதந்திகளை நம்புவது இல்லை!''

ஜி.சிவக்குமார், பழனி.

 ''சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா?''

''இல்லை. பிறர் சரிதைதான் சந்தோஷம்!''

சா.பிரேமா, செங்கல்பட்டு.

 ''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?''

 ''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''

எம்.சங்கர், செய்யாறு.

 ''அடுத்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை தரும் நபர்களைக் குறிப்பிடவும்?''

 ''என் பெயர் உட்பட, யாருக்கும் அடித்து ஆரூடம் சொல்ல முடியாத தொழில் இது. எங்களில் யாரெல்லாம் விபத்து, வியாதி இல்லாமல் உயிர்த்து இருக்கிறார்களோ, 'அனைவரும் முயல்வோம்... சிலர் வெல்வோம்’. survival of the fittest!

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

சு.அருளாளன், ஆரணி.

''உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவத்தை நினைத்தால், அடக்க முடியாத சிரிப்பு வரும்?''

''பத்துப் பதினைந்து நிகழ்வுகள் இருக்கின்றன. நான் நடிகனானது உட்பட!''

கே.பாபு, சென்னை-75.

 ''தமிழ் சினிமா அடுத்த பரிணாமத்துக்குச் சென்றுவிட்டதாகக் கருதுகிறீர்களா? ஏனென்றால், இன்னும் ஐந்து பாட்டு, குத்துப் பாட்டு, ஹீரோ - ஹீரோயின் டூயட் டிரெண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலப் படத்தைப் பார்த்தால் 90 நிமிடங்கள்தான். ஏன் இன்னும் நாம் அந்த அளவுக்கு முயற்சிக்கவில்லை. 'உலக நாயகன்’ படங்களிலும் குத்துப் பாட்டு, தேவையற்ற சண்டைக் காட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன?''

''இல்லை. விரிவான பதில் உங்கள் கேள்விக்குள் அடக்கம்!''

க.ராஜன், தஞ்சாவூர்.

''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி?''

''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்!''

ஆ.சசிக்குமார்,  உடுமலைப்பேட்டை.

 ''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்?''

'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்  உண்டோ?’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்!''

ராஜலக்ஷ்மி பாலாஜி, சென்னை-33.

''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்?''

''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே!''

ச.சிவா, வந்தவாசி.

''புது வருடத்தில் இருந்து ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால், எந்தப் பழக்கத்தை விட்டுக்கொடுப்பீர்கள்?''

 ''கேள்விக்குப் பதில் அளிப்பதை. கேட்பது நானாக இருக்கும்பட்சத்தில், என் அறிவும் வளரும் அல்லவா?''

சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.

''தொண்டன், பக்தன், ரசிகன் யார் முதல் ஏமாளி?''

''ரசிகன் ஏமாறத் தேவை இல்லை... ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வரை!''

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

என்.ரகு, காஞ்சிபுரம்.

 ''தமிழ்ப் பட உலகத்தைப் பிடித்து ஆட்டுகிற நோய் என்ன... அதைப் போக்குவது எப்படி?''

 ''ரசனைக் குறைவுதான். அதைப் போக்குகிறேன் பேர்வழி என்று ரசிகர்களையே தொலைத்துவிடக் கூடாதே என்ற பயமும் உண்டு. பயம்கூட ஒரு வகை நோய்தான்!''

சி.ரவி, அரக்கோணம்.

''கமல் - ஸ்ரீதேவி, கமல் - ஸ்ரீபிரியா, கமல் - த்ரிஷா... ஜோடிப் பொருத்தம் ஒப்பிடுக?''

 ''காலம் தந்த கோலம் இது. ஒப்பிடல் சரியாகாது. எனக்கு மூவரும் வேண்டியவர்கள்!''

பி.கமல் செல்லப்பா, திருநெல்வேலி.

 ''உங்களுடைய இயக்கத்தில் வேறு ஒருவர் நடிக்கும் படத்தை எப்போது இயக்குவீர்கள்? யாரை இயக்க விருப்பம்?''

''வேறு நடிகர்கள் பலரும் நடிக்க... இயக்கி உள்ளேன். இன்னும் பலரை இயக்கவும் விருப்பம். கதைக்குத்தான் நடிகர் என்ற நிலை வர விருப்பம்!''

கே.ஆதி, சென்னை-74.

''சினிமாவால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''

 ''பெற்றது உம்மை. இழந்தது (கொஞ்சம்) என்னை.''

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

 '' 'மன்மதன் அம்பு’ படத்தில் நீங்கள் எழுதிய, 'கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்’ பாடலுக்கு 'தெய்வ நிந்தனைப் பாடல்’ என எதிர்ப்புக் கிளம்பி உள்ளதே?''

''அவர்களுக்கு நிந்தனை புரியாததால் ஏற்பட்ட குழப்பமே. இதைவிட நிந்தனைகள் நிறைந்த வரிகள் வந்துள்ளன. இனியும் வரும். அது நான் எழுதிய வரிகளாக இருக்காது, பாருங்களேன்!''

சி.சரஸ்வதி, திண்டிவனம்.

'' 'சர்ச்சை’க்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்?''

 ''சர்ச்சைதான்!''

கே.ராமஜெயம், சென்னை24

 '' 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமல்ஹாசா!’ என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா?''

''அப்படி நினைப்பதற்குள் அடுத்த ஆசை வந்துவிடுவதால்...''

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள் - பகுதி 4

என்.ராகவன், கோயம்புத்தூர்.

''கற்பு பற்றி உங்கள் கருத்து என்ன?''

''கடவுள் பற்றிய கருத்து போலதான்!''

ஸ்ரீதர்ஸ்ரீனிவாசன்,  கோயம்புத்தூர்.

'' 'சத்தியாகிரகம் என்ற ஆயுதம் மூலம், காந்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து...''

 ''அவர் நாட்டிய நிலையை அகற்றும் உரிமை உள்ளபோது... சர்வம் ஏது? அதிகாரம் ஏது? அவர் செத்துட்டாரு. விடுங்க, சுட்டுக்கிட்டே இருக்காதீங்க!''

வே.கல்பனா, அரவக்குறிச்சி.

 '' 'மய்யம்’ என்ற பெயரில் நீங்கள் நடத்தி வந்த இதழ் பாதியில் நின்று, பிறகு மீண்டும் ஆன்லைனில் வருவதாகச் செய்தி வந்தது. 'மய்யம்’ மீண்டும் வருமா?''

 ''கண்டிப்பாக - விரைவில்!''

'சின்ன சேலம்’ ரா.ரவி,  நாமக்கல்.

''நேற்றைய நண்பர்களைத் திடீரெனச் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?''

''நட்பைப் பாராட்டுவோம். இந்த ஒரு விஷயத்தைத் தனியாகச் செய்ய முடியாது!''

(முற்றும்)