Published:Updated:

ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!

Vikatan Correspondent
ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!
ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!

ராமநாதபுரம்: கூண்டு மூலம் வளர்க்கப்பட்ட மீன்கள் அறுவடையை மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!

பாக் ஜலசந்தி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2300 சிறு படகுகளும், 900 நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சமீப காலங்களாக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்வளம் குறைந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சர்வதேச எல்லை தாண்டுதல் பிரச்னைகளை மீனவர்கள் எதிர்கொள்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மீனவர்களுக்கான மாற்று தொழிலாக கடல் விவசாயம் (கடலில் மீன் வளர்ப்பு) உலக அளவில் மாறி வருகிறது.

ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் கடல் இறால் மற்றும் சேங்குனி பாறை மீன் குஞ்சு உற்பத்தி செய்யும் உத்திகளையும், கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழில் நுட்ப முறைகளையும் அறிமுகப்படுத்தினர். இதன் பயனாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு குழுவாக இணைந்து ‘கோபியா அக்வா கல்சர் மீனவர் நல சங்கம்’ என்ற அமைப்பின் மூலம் கூண்டு மீன் வளர்ப்பினை தொடங்கினர்.

அதன்படி, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடன் மண்டபம் கடல் பகுதியில் சுமார் 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவை கூண்டினை கடலில் அமைத்து, அதில் 600 மீன் குஞ்சுகளை விட்டனர். 15 கிராம் எடை கொண்ட ஒவ்வொரு மீன் குஞ்சும் 6 மாத காலத்தில் 2 முதல் 3 கிலோ வரை எடை கொண்டதாக வளர்ந்தது.

ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!

வளர்ச்சி அடைந்த மீன்களை அறுவடை செய்வதற்கான விழா மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று (8ஆம் தேதி) நடந்தது. கடலில் வைக்கப்பட்டிருந்த 10 கூண்டுகளில் வளர்ந்திருந்த மீன்களை அறுவடை செய்யும் பணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சுமார் 5 டன் கடல் இறால் மீன்கள் அறுவடை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சி தலைவர் நந்தகுமார், தமிழக அரசின் உதவியுடன் கடலில் கூண்டு மூலம் மீன் வளர்க்கும் தொழிலை விரிவுப்படுத்த இருப்பதாகவும், இதற்கு தேவையான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணை அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி கோபகுமார், மீனவர்களூக்கான மாற்று தொழில் முறை குறித்து விளக்கவுரையாற்றினார்.

ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை!

இவ்விழாவில் மீன்துறை துணை இயக்குனர் கார்த்திகேயன், உதவி இயக்குனர்கள் மோகன், கோபிநாத், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தேவதாஸ், ராஜேந்திரன், லியோபர்ட், மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், சேசு, எமரிட், எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும், மீன்வள ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூண்டு மீன் வளர்ப்பு முறையில் ஒவ்வொரு மீன்களும் சுமார் 2 கிலோ எடை அளவுக்கு வளர்ந்த பின்புதான் அறுவடை செய்யப்படும். ஏற்கனவே, கடலில் வளர்க்க விடப்பட்ட சேங்குனி பாறை மீன் குஞ்சுகள் வளர அதிக நாட்கள் எடுக்கும் என்பதால் அந்த மீன் தற்போது அறுவடை செய்யப்படவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் அந்த மீன்கள் 2 கிலோ எடையை எட்டும் எனவும், அப்போது அவைகள் அறுவடை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரா.மோகன்


படங்கள்: உ.பாண்டி