Published:Updated:

செய்திச் சுருக்கம்: ஜூலை 19,2011

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது தமிழக அரசு. ##~~##

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழுள்ள பாடத்திட்டங்கள் தரமற்றவை என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, பழைய பாடத்திட்டமே இந்த ஆண்டு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*
தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கல்வியாளர்கள் மனோன்மணியம் உள்பட 5 பேர் கேவியட் மனு தாக்கல் செய்தனர்.

சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது தங்களைக் கேட்காமல் உத்தரவிடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

*
தற்போதைய சூழலில் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தி, உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

*
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் தமிழக அரசின் முடிவை வன்மையாகக் கண்டித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, தவறுக்குமேல் தவறு செய்யாமல்
சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

*
இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில், இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணைபுரியும் என்று அவர் உறுதியளித்தார்.

*
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

*
ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து மாற்றப்பட்டதில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

*
தன்னை பதவி நீக்கம் செய்யும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தனது பிரதிநிதித்துவம் குறித்து தீர்மானிக்க குடியரசுத் தலைவருக்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை, ஊழல் கண்காணிப்புத்துறை முன்னாள் ஆணையர் பி.ஜே.தாமஸ் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

*
ஆந்திரா மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்த வேண்டும் என்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில மந்திரிகள், எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்து கட்சியினரும் போராடி வருகிறார்கள்.

*
தெலுங்கானா பகுதியைச் சேராத ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக்கூடாது என்றும், ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

*
வி.ஏ.ஓ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


*
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,190 ரூபாயாக இருந்தது.

*
மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 146  புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தது. நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்திருந்தது.


*
இந்திய கேப்டன் தோனி தோன்றும் விளம்பரம் ஒன்று, தன்னை இழிவுபடுத்தும் உள்ளதால், அந்த விளம்பரத்தை உடனடியாக நிறுத்துவதோடு, அதனை தயாரித்த விஜய் மல்லையாவின் யு.பி. குழுமம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவை விஜய் மல்லையா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.