Published:Updated:

சிறுபான்மையினர் குறித்த பேச்சு: ஏ.கே.அந்தோணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

விகடன் விமர்சனக்குழு
சிறுபான்மையினர் குறித்த பேச்சு: ஏ.கே.அந்தோணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
சிறுபான்மையினர் குறித்த பேச்சு: ஏ.கே.அந்தோணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
சிறுபான்மையினர் குறித்த பேச்சு: ஏ.கே.அந்தோணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

சென்னை: சிறுபான்மையினர் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ள கருத்துக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு அதன் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் போக்குதான் காரணம் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணி கூறியிருந்தார். ஏ.கே.அந்தோனியின் இந்த பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.ஷரீஃப் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பெரும்பான்மை சமூகத்தின் நன்மதிப்பை காங்கிரஸ் பெறுவதற்காக இதுபோன்ற கருத்துக்களை ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தோணியின் கருத்துக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அந்தோணியைக் கண்டித்தோ அல்லது அவரது அறிக்கையைத் திரும்பப் பெறக்கோரியோ காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் படிக்கவில்லை என்பதையும், தேர்தல் முடிவுகளை அவர்கள் ஆராயவில்லை என்பதையும்தான் இது காட்டுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீதான மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த தேர்தல் முடிவுகள். கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரசுக்கு வாக்களித்த சிறுபான்மையினர் கூட இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சிறுபான்மை விரோத கொள்கைகளால் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அறிவிக்கப்பட்ட சிறுபான்மை நல திட்டங்களை கூட காங்கிரஸ் அரசாங்கம் நடைமுறைபடுத்த தவறி விட்டது. சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு முந்தைய அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. தற்போது அதன் கிங் மேக்கர்களில் ஒருவர் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வாதம் என்ற முட்டாள்தனமாக ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். சிறுபான்மையினர் அந்தளவிற்கு முட்டாள்கள் அல்ல என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது என்பதையும் அதில் அந்தோணியின் கீழிருந்த பாதுகாப்பு துறையும் விதிவிலக்கல்ல என்பதையும் எந்த இந்தியனும் சந்தேகப்படமாட்டான். .மாறிவிட்ட அரசியல் சூழலில் தனது சுய செயல்திட்டத்தை அவர் நிறைவேற்ற முயற்சி செய்கிறார். இந்திய தேசமும் காங்கிரஸ் கட்சியும் கட்டமைக்கப்பட்டுள்ள சோசியலிச மதச்சார்பற்ற கொள்கைளில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் மாறிவிட வேண்டாம்’’ எனக் கூறியுள்ளார்.