Published:Updated:

என்றும் நம் விகடன் இன்று என் விகடன்

கொங்கு மண்ணில் கலகல துவக்கம்!

##~##
தோ அகவை 85-ல் அடுத்த கட்டப் பாய்ச்சல்!  'என்றும் நம் விகடன்... இன்று என் விகடன்’ எனப் புதிய சகாப்தத்தின் முதல் அத்தியாயத்தை கொங்கு மண்டலத்தில் ஆரம்பித்தது விகடன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிப்ரவரி 16-ம் தேதி, கோவை ரெசிடன்ஸி ஹோட்டலில் 'என் விகடன்’ அறிமுக விழா. வாசலில் வாழை மரம், நாகஸ்வரக் கச்சேரி என கல்யாண வீட்டுக் களை. ''விகடன்னா விசேஷம் தானுங்க... இப்போ விகடனே ஒரு விசேஷத்தை ஏற்பாடு பண்ணி இருக்கு. நம்ம வீட்டு விசேஷத்துக்கு உங்களை வரவேற்கிறதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்!'' என்று வந்தனம் சொல்லி, விழாநிகழ்வு களைத் தொகுத்து அளித்தார் சிவகார்த்திகேயன்.  கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத் ஐ.ஏ.எஸ், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் வந்திருந்தார்கள். இவர்களுடன் இணைந்து குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார் விகடன் குழும நிர்வாக இயக்குநர்  பா.சீனிவாசன்.

என்றும் நம் விகடன் இன்று என் விகடன்

தொடர்ந்து கோவை கணேஷின் மண் மணக்கும் கரகாட்டம். பரபரப்பான, விறுவிறுப்பான சாகசங்கள். ஒரு டஜன் தீபங்கள் எரியும் கரகம், டேபிள் மீது சிறு சொம்பைக் கவிழ்த்து அதன் மேலேறி நின்று ஒற்றைக் கால் கரகம் என கணேஷ் நாட்டியம் ஆட... அரங்கம் அதிரும் கைத்தட்டல்கள். ஏரோநாட்டிக்ஸ் இன்ஜினீயரிங் மாணவரான கணேஷ் புதுப் புது ஐடியாக்களுடன் கரகாட்டத்தில் புதுமை பூச்சு பூசி வருபவர்.

''நம்ம எல்லோர் மனசிலும் விகடனுக்குன்னு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். மதிப்புக்குரிய மனிதர்களின் மனதில்  விகடனுக்கு என்ன இடம்னு இப்போ தெரிஞ்சுக்கலாமா?'' என்று சிவகார்த்திகேயன் அறிவிக்க... அரங்கத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஆங்காங்கே இருந்த வீடியோ திரைகள் ஒளிர்ந்தன.

என்றும் நம் விகடன் இன்று என் விகடன்

சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி, சேரன், லிங்குசாமி, மிஷ்கின்  எனத் திரைப் பிரபலங்கள், விஜயகாந்த், திருமாவளவன், சுப்ரமணியன் சாமி என அரசியல் பிரபலங் கள்... வாலி, வைரமுத்து என கவிப் பிரபலங் கள், வானவராயர், 'ராம்ராஜ் காட்டன்’ காமராஜ் போன்ற கொங்கு மண்டலப் பிரபலங்கள் என விதவிதமான மனிதர்கள் விகடனுடனான தங்கள் நெருக்கத்தைப் பெருமிதமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.

என்றும் நம் விகடன் இன்று என் விகடன்

அதில் ஏவி.எம். சரவணன், '''அன்பே வா’ படத்துக்கு விகடனில் விமர்சனம் வந்து இருந்தது. அதில், 'படத்தின் நீளம் அதிகம்தான். ஆனால், மயிலுக்குத் தோகை நீளம் என்பதற் காக,  அதை வெட்டிவிட முடியுமா?’ என்று கவிதை நயத்துடன் விமர்சனம் செய்து இருந்தார்கள்!’ என்று நெகிழ்ந்த காட்சிக்கு பார்வையாளர்களிடையே ஆரவார அப்ளாஸ்!  

அடுத்து... சிவகார்த்திகேயனின் மிமிக்ரி உற்சவம். விஜயகாந்த் துவங்கி விஜய் வரை தமிழகத்தின் 'செல் லங்கள்’ அத்தனை பேரின் குரல்களிலும் மிமிக்ரி செய்து 'நான் - ஸ்டாப்’ கிச்சுகிச்சு மூட்டினார். அடுத்து வீடியோ பதிவின் மூலம் பார்வையாளர் களுடன் உரையாடினார் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

''வாசகப் பெருமக்களுக்கு வணக்கம். 85-ம் வருஷத்தை வெற்றிகரமாகக் கடக்கும் இந்த சிலிர்ப்பான நேரத்தில் எங்கள் நெடுநாள் கனவு ஒன்று நிறைவேறுகிறது! கடைக்கோடி கிராமம் வரை காலடி எடுத்துவைக்க வருகிறோம்.

தமிழகத்தை ஐந்து மண் டலங்களாகப் பிரிச்சு, ஒவ்வொரு மண்டலத்திலும் எங்களோட நிருபர்கள் புகுந்து விளையாடப் போறாங்க. அக்கம்பக்கத் தைக்கூடத் தாண்டாத ஆச்சர்யங்கள், சாதனைகள், கொண்டாட்டங்கள், குறிப் பிடத்தக்க சம்பவங்கள் எல்லாம் இனி 'என் விகடன்’ல அட்டகாசமா வெளிவரப் போகுது. எழுதத் துடிக்கிற உங்களுக்கும் பக்கங்கள் கொடுத்து பக்காவான படைப்பாளியா மாத்தப்போகுது 'என் விகடன்’. 'விகடன்ல நம்மளைப் பத்திலாம் எழுத மாட்டாங்களா? நம்ம படம்லாம் அதுல வராதா?’ன்னு  இனி நீங்க ஏங்க வேண்டியதே இல்லை. உங்களோட அத்தனை கனவு களையும் நிறைவேற்றவே 'என் விகடன்’!'' என்றார் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக!

தொடர்ந்து ஒளி ஒலித்தது 'என் விகடன்’ தீம் ஸாங். 'டான்... டான்... டான்... ஆனந்த விகடன்... என்றும் நம் விகடன், இன்று என் விகடன்...’ என்று பாடல் பட்டையைக் கிளப்ப... முதல் கவனிப்பிலேயே தாளம் போட வைத்தது. கவிஞர்கள் தாமரை, நா.முத்துக்குமார் கூட்டணியில் உருவான பாடல் வரிகள் இவை.

ஒட்டுமொத்தத் தமிழகமும் பிரதி பலிக்கும் வகையில் அந்தப் பாடல் வரிகளை கலர்ஃபுல்லாகக் காட்சிப் படுத்தி இருந்தார்கள் மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தினர்.

தீம் பாடல் ஒளிபரப்புக்குப் பிறகு 'என் விகடன்’ வெளியீடு. அது வரை மேடையின் இடதுபுறம் பளிச்சிட்டுக் கொண்டு இருந்த 'விகடன் 85 ஸ்பெஷல்’ விகடனின் அட்டை அப்படியே திரும்ப, அதன் மறுபுறம் 'என் விகடன்’ கொங்கு மண்டல இணைப்பின் அட்டை பளீரிட் டது!

வண்ண விளக்குகள் ஒளிர... கலர்ஃபுல் வெடிகள் அரங்கை அதிரச் செய்ய... கம்பீரமாக அறிமுகமானது 'என் விகடன்’!

விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவா சன் 'என் விகடன்’ முதல் இதழை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கோவை ஷெரீஃப் குழுவினரின் டான்ஸ். ஒரு புள்ளியில் சந்திக்கும் மூன்று இளைஞர்கள்பற்றி கலாய்ச்சலாகக் கதை சொல்லும் டான்ஸ் அது. ஹ்யூமரும் கிளாம ருமாக கலகலக்கவைத்த நடனத்துக்கு அதிர்வேட்டு வரவேற்பு.  

உற்சாகமாகக் கைகளில் 'என் விகடன்’ இதழை இறுகப் பற்றிக்கொண்டு கலைந்த விருந்தினர்கள் முகங்களில், 'இனி இது என் விகடன்’ என்ற பூரிப்பு!

- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: கே.ராஜசேகரன்