Published:Updated:

ஆண்மை பரிசோதனை: நீதிபதியின் கேள்வியும்... மருத்துவரின் பதிலும்!

Vikatan Correspondent
ஆண்மை பரிசோதனை: நீதிபதியின் கேள்வியும்... மருத்துவரின் பதிலும்!
ஆண்மை பரிசோதனை: நீதிபதியின் கேள்வியும்... மருத்துவரின் பதிலும்!

-சா.வடிவரசு

''ஆண்மைக் குறைவு, இல்லற உறவில் விருப்பம் இல்லாமை போன்ற காரணங்களுக்காகக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க, திருமணத்துக்கு முன்பாகவே மணமகனுக்கு ஆண்மை பரிசோதனையைக் கட்டாயமாக்கும் சட்டத்தை ஏன் கொண்டுவரக் கூடாது? ஆண்மைக் குறைவு இருப்பதை மறைத்து திருமணம் செய்தவரை தண்டிக்க, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஏன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது?’

- மதுரை, உயர் நீதிமன்றத்தின் நீதிபதி இருக்கையில் அமர்ந்தபடி, மத்திய - மாநில அரசுகளை நோக்கி நீதிபதி கிருபாகரன் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள், பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கும், திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் உருண்ட நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், பெண்ணின் தரப்பில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யும்படி அந்த இளைஞரின் குடும்பத்தினர் மதுரை, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்தபோது, அந்த இளைஞனுக்கு ஆண்மைக் குறைவு இருந்ததுதான் பிரச்னை என்பதும், வேறு காரணத்தைச் சொல்லி கீழ் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் தெரியவரவேதான், அந்த அதிரடி கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நீதிபதி கிருபாகரன்.

ஆண்மை பரிசோதனை: நீதிபதியின் கேள்வியும்... மருத்துவரின் பதிலும்!

வரவேற்கத்தக்க சிந்தனைகள்தான் என்று தோன்றினாலும், நடைமுறைக்கு சாத்தியமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பிரபல 'செக்ஸாலஜிஸ்ட்' நாராயண ரெட்டியிடம் கேட்டபோது, மிகவிரிவாகவே நம்மிடம் பேசினார்.

''ஆண்மை சோதனை என்பது, ஆய்வகத்தில் மருத்துவ முறைப்படி செய்யப்படும் ஒரு பரிசோதனை. ஆனால், தாம்பத்ய வாழ்க்கை என்பது வெறுமனே ஆண்மை சார்ந்தது மட்டுமல்ல, மனதும் சமபங்காற்றும் ஓர் அற்புதம் அது. எனவே, மனதின் பங்களிப்பின்றி, உடலின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் இந்தச் சோதனையின் முடிவை நூறு சதவிகிதம் சரி என்று சொல்ல முடியாது. அதோடு போலி சான்றிதழ்கள் நடமாடும் இந்த உலகில் இதையெல்லாம் எந்த அளவுக்கு நம்ப முடியும்? ஆக, இதை வைத்து மட்டுமே ஆண்மைக்கான சான்றிதழ் தருவது, சாத்தியமில்லாதது.

ஆண்மை பரிசோதனை: நீதிபதியின் கேள்வியும்... மருத்துவரின் பதிலும்!

ஓர் ஆண் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அது அவர் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கும். அப்படிப்பட்டவரை ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தினால், 100 சதவிகிதம் தகுதியானவர் என்றே முடிவு வரலாம். ஆனால், அவர்களுக்கு பெண்களுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது விருப்பமான ஒன்றாக இருக்காது. அதேபோல, விந்தணுக் குறைபாடு உள்ளவர்களும், ஆண்மைப் பரிசோதனையில் தேறிவிடுவார்கள். ஆனால், அவர்களுக்கு குழந்தைப்பேறில் சிக்கல் இருக்கக்கூடும். சிலருக்கு பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்று சொல்லக்கூடிய மனம் சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம். வேலை, வெளிவட்டம் என்று எப்போதும் பரபரவென இருக்கும் இவர்களுக்குக் குடும்பத்தைப் பற்றியோ, மனைவியைப் பற்றியோ, குறிப்பாக தாம்பத்யத்தைப் பற்றியோ யோசிக்கத் தோன்றாது. அப்படியே யோசித்தாலும் அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாக ஈடுபட முடியாது. இவர்களை ஆண்மைப் பரிசோதனை செய்தால், எந்தக் குறையும் இல்லை என்றுதான் முடிவு வரும். ஆனால், இதன் அடிப்படையில் ஒரு பெண்ணை அவருக்கு மணம் முடித்தால், அந்தத் திருமணம் தோல்வியில்தான் முடியும்'' என்று சொன்ன டாக்டர், இந்தப் பிரச்னையின் இன்னொரு கோணத்தையும் பேசினார்.

''மாப்பிள்ளையை ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் அதேநேரத்தில், மணப்பெண்ணும் பெண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் எழலாம். ஆண்மைப் பரிசோதனை போல, பெண்மைக்கான பரிசோதனை சுலபமாகக் கண்டறியக்கூடியதல்ல. எனவே, இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் தங்களின் மனசாட்சிக்கு உண்மையாக இருந்து, ஏதேனும் பிரச்னை இருந்தால் திருமணத்துக்கு முன்பாகவே மருத்துவ ஆலோசனை பெற்று, தாம்பத்யத்துக்குத் தகுதி இருக்கிறதா, குழந்தைப்பேறுக்கு தகுதி இருக்கிறதா, இவற்றில் ஏதேனும் சிக்கல்கள் எனில் அதை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்து, அதன் பின் திருமணத்துக்குத் தயாராக வேண்டும். இந்த உணர்வுபூர்வமான விஷயத்துக்கு, சட்டம் மூலமாக தீர்வு ஏற்படுத்துவது என்பது, இயலாத காரியம்.

பெற்றோர் கட்டாயப்படுத்திய திருமணம், சூழல், விருப்பங்கள் வேறுபடுவது, உடலும் மனமும் நேர்கோட்டில் இல்லாமல் இருப்பது என ஒரு புதுமண ஜோடி முழுமையான தாம்பத்ய வாழ்க்கையை எட்டவே சில மாதங்கள் ஆகலாம். மேலும், ஆண்மை, பெண்மை பரிசோதனை முடிவுகள் நூறு சதவிகிதம் சரியாக இருந்தாலும், இருவரின் உடற்கூறு சார்ந்த விஷயங்களால் சிலருக்குக் கருத்தரிக்கத் தாமதமாகலாம். கருத்தரிக்காமல்கூட போகலாம். எனவே, திருமணமாகி சில வருடங்கள் வரை முழுமையான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே, மருத்துவரை நாடவேண்டும். மேலும் ஒரு திருமணம் முறிவதற்கு, தாம்பத்யம் மற்றும் குழந்தைப்பேறின்மை காரணமாக அமைவது, வெகு சில தம்பதிகளுக்கே. பெரும்பாலான பிரச்னை மனநலம் சார்ந்ததே. தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்னைகள் என்றாலும் சரி, குழந்தைப்பேறில் ஏற்படும் பிரச்னைகள் என்றாலும் சரி... 95 சதவிகிதம் சரிசெய்யக் கூடிய பிரச்னைகளே!'' என்ற டாக்டர் நாராயண ரெட்டி,

''பள்ளிக்கூட அளவிலிருந்தே மாணவர்களுக்கு எல்லாவித பரிசோதனைகளையும் தொடர்ந்து செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக, பலவிதமான பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் மூலமாக தீர்வு காணமுடியும். இதை நிறைவேற்ற அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டும்'' என்று வேண்டுகோளும் வைத்தார்!

ஆண்மை பரிசோதனை: நீதிபதியின் கேள்வியும்... மருத்துவரின் பதிலும்!

''பெண்மை பரிசோதனை அவசியமில்லை!''

சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா பேசியபோது, ''ஒரு பெண், 'ஆண்மைப் பரிசோதனை சான்றிதழ் வேண்டும்’ என்று கோரினால், அவளை இந்த சமூகம் திமிர்பிடித்தவள் என்ற முத்திரை குத்தி, கல்யாணச் சந்தையில் இருந்தே தூக்கி வீசிவிடும். ஆனால், இதுவே சட்டமாக்கப்படும்போது, அதை மீற வழியிருக்காது என்பதால் நீதிபதியின் இந்தப் பரிந்துரை வரவேற்புக்குரியது. ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் தப்பிக்கவும் இது வழி ஏற்படுத்தும். இதற்காக, பெண்களுக்கும் பெண்மை சோதனையைக் கட்டாயமாக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தாம்பத்யம்தான் முக்கியமே தவிர, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை'' என்றார்.  

சமூக சேவகி நந்தினிஸ்ரீ இதுபற்றிப் பேசும்போது, ''மற்ற குடும்பப் பிரச்னைகளைப் போல சட்டென இந்தப் பிரச்னை வெளிப்படுத்தப்படுவதில்லை. திருச்சி பெண்ணின் வழக்கில்கூட, மேல் கோர்ட்டில்தான் உண்மை வெளிவந்திருக்கிறது. எனவே, நம் சமூக அமைப்பின் காரணமாக வெளிக்கொண்டு வர இயலாத பிரச்னையாக பல குடும்பங்களிலும் இருக்கும் இப்பிரச்னையை முளையிலேயே கிள்ளும்விதமாக, ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் நீதிபதியின் பரிந்துரை, அவசியம் சட்டமாக்கப்பட வேண்டியதுதான்!'' என்றார்.