Published:Updated:

ராமேஸ்வரத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி!

விகடன் விமர்சனக்குழு
ராமேஸ்வரத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி!
ராமேஸ்வரத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி!

ராமேஸ்வரம்: தமிழக கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி ராமேஸ்வரத்தில் அமைய இருப்பதாக ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி!

தீவிரவாதிகள், சமூக விரோதிகள் தமிழக கடற்கரை பகுதிகள் வழியாக ஊடுருவல் செய்வதை தடுப்பதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் அமைக்கப்பட்டது. நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட தமிழகத்தில் தற்போது ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதற்கென மரைன் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுமத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை மேற்கொண்ட காவலர்கள் தற்போது கடலோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று (13ஆம் தேதி) ராமேஸ்வரம் வந்திருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘‘நீண்ட கடற்கரையை கொண்ட தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 34 கிலோ தங்கத்தை கைபற்றினோம். மேலும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

ராமேஸ்வரத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி!

தமிழகத்தின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல் தொலைவு வரை கடலில் சென்று ரோந்து பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பை அதிகப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மேலும் 30 இடங்களில் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும். கடற்பகுதியில் ரோந்து செல்லவும், ஆபத்துக்களில் சிக்கி கொள்ளும் மீனவர்களை காப்பதற்காகவும் 20 படகுகள் வர உள்ளன. ஏற்கனவே உள்ள படகுகளை விட இவை அதிக திறன் கொண்டவையாக இருக்கும். இதன் மூலம் கடலில் சிக்கி கொள்ளும் மீனவர்களது படகுகளையும் மீட்டு கரைக்கு கொண்டுவர முடியும்.

மேலும். கடலோர பாதுகாப்பு குழுமத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு உரிய சிறப்பு பயிற்சிகள் அளிக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் மரைன் காவலர் பயிற்சி கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரை பகுதியில் 247 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த நிலத்திற்கான முறையான அனுமதி பெற்றவுடன் இங்கு பயிற்சி கல்லூரி அமைக்கப்படும். இந்த கல்லூரியின் மூலம் சுமார் 250 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் கடற்கரை பகுதிகள் அமைந்துள்ள 9 மாநிலங்களில் தமிழகத்தில்தான் முதன் முதலாக மரைன் காவலர் பயிற்சி கல்லூரி அமைய உள்ளது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தமிழக கடற்கரை பகுதியின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்க கூடும்’’ என்றார்.

ராமேஸ்வரத்தில் கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கான பயிற்சி கல்லூரி!

முன்னதாக மரைன் காவலர் பயிற்சி கல்லூரி அமைய உள்ள ஓலைக்குடா கடற்கரை பகுதியினை சைலேந்திரபாபு பார்வையிட்டார். அவருடன் ராமேஸ்வரம் டி.எஸ்.பி. விஜயகுமார், கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் உடனிருந்தனர்.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி