வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (22/11/2014)

கடைசி தொடர்பு:15:41 (22/11/2014)

'சாமுல் நோரி': கொரிய - இந்திய ஒற்றுமைக்காக ஓர் இசைப்பயணம்!

துரை காந்தி மியூசியத்தின் திறந்த அரங்கிலிருந்து வந்த அந்த சத்தம் காதை பிளப்பதாக இருந்தது. அரங்கை நெருங்க நெருங்க ஆஆஆ.....ஏஏஏஏஏ...என்று கோரஸ் எழ,  ஏதோ நம் ஊர் கருப்பசாமிக்கு அருள் இறக்குறாங்க என்றுதான் நினைத்துக்கொண்டோம்.

அப்புறம்தான் தெரிந்தது அங்கு நடந்துகொண்டிருந்தது, கொரியா நாட்டைச் சேர்ந்த இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி. ஆம் நமது மதுரையில் முதல் முறையாக ''சாமுல் நோரி'' என்ற கொரிய நாட்டைச் சேர்ந்த இசைக்குழுவினர் தங்க்ள இசைநிகழ்ச்சியை அரங்கம் அதிர அதிர அமர்களப்படுத்துகின்றனர். சாமுல் நோரி என்றால் ''பறக்கும் இசைக்கருவிகள்'' என்று அர்த்தமாம்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இசைக்குழுவின் தலைவர் 'வணக்கம்' என தமிழில் சொன்ன போது எழுந்த கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து அவர் பேசுகையில், "சாமுல் நோரி என்பது பழமையான பாரம்பரியமான இசைக்குழு.  கொரியாவும், இந்தியாவும் பல பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றுக்கொன்று நட்பு கொண்ட சிறப்புடைய நாடுகள். அது இன்றும் தொடரவேண்டும், என்றும் கொரியர்களும், இந்தியர்களும் சகோதர்களாக வாழவேண்டியே இந்த இசைப்பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

முதல்முதலாக தென்னிந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையில் முதல் முறையாக எங்கள் இசையை அரங்கேற்றியிருக்கிறோம்" என்றார்.

நிகழ்ச்சியில் நமது மக்களுக்காக ஒன்பது வகையான ஜில்- சோரி,பினாரி, பான் கட், பிரி சோலா, பாசிங் ரெய்ன், டா ஜிங், தண்டர் ஜிங் என்று கொரியன் இசையின் பலவித வடிவங்களை நடனத்துடன் இசைத்து பாடி அசத்தினர். பொதுவாக வெளிநாட்டவர்களிடம் ஒரு விஷயத்தை சிறப்பாக குறிப்பிடுவார்கள். அது நேரமேலாண்மை. ஆம் இந்த நிகழ்ச்சியிலும் அதை வெளிப்படுத்தினர். விழாவினை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிந்தனர்.

விழாவின் முத்தாய்ப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் கொரிய பாரம்பரிய உணவான  ''பி பில் பாத்'' என்னும் அரிசியில் பலவிதமான காய்கறிகள் சேர்த்து சமைத்த உணவு வழங்கப்பட்டது.

குழுவைச்சேர்ந்த லீ சாங் சிங் என்ற கலைஞரிடம் “எப்படி இருக்கு மதுரை“ என்றதற்கு “ஃவெரி ஹாட்'' என்றார். நிகழ்ச்சி வெற்றியடைந்த மகிழ்ச்சியில் குழுவினர் கொடைக்கானலுக்கு  சுற்றுலா செல்வதாக கூறினார்.

கொரியா போகாமலேயே  ஃப்ரியா கொரியா இசைநிகழ்ச்சி பார்த்த திருப்தியுடன் கலைந்து சென்றனர் காந்தி பார்வையாளர்கள்.  

-சி.சந்திரசேகரன்

படங்கள்: நந்தகுமார், நிவேதன் ( மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்