Published:Updated:

கிறிஸ்துமஸ் பண்டிகை: வைகோ, ராமதாஸ் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் பண்டிகை: வைகோ, ராமதாஸ் வாழ்த்து!
கிறிஸ்துமஸ் பண்டிகை: வைகோ, ராமதாஸ் வாழ்த்து!
கிறிஸ்துமஸ் பண்டிகை: வைகோ, ராமதாஸ் வாழ்த்து!

சென்னை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு வைகோ, ராமதாஸ் கிறிஸ்துவ பண்டிகை வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அல்லல்களும் இன்னல்களும் முற்றுகையிடும் மனித வாழ்க்கையில் மனிதநேயத்தாலும், அன்பினாலும் மனக்காயங்களுக்கு மருந்துபோடும் ரட்சகராக இயேசு பெருமான் எல்லாக் காலத்துக்கும் மனிதனுக்குத் தேவையான அமுதமொழிகளை உபதேசித்தார்.

“உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப்  பார்க்கிறதென்ன; உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப்  பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” என்று அறிவுரை தந்த இயேசு பெருமான் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார்.

சிரசிலே முள்முடி சூட்டப்பட்டு கடுமையாக நிந்திக்கப்பட்டு கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டு, ரத்தம் சிந்தினார். மீட்பரும் ரசட்கருமான இயேசு பெருமான் பிறந்த நாளை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்கும், ஏழை எளியோருக்கும் ஆற்றிய சேவை ஈடற்றது, உன்னதமானது. இந்தியாவில் மதவெறியை ஊக்குவித்து மனிதாபிமானத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் சிதைக்கும் இந்துத்துவா சக்திகளின் அராஜகப்போக்கினை எதிர்கொண்டு முறியடிக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸ்...

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அன்பு, கருணை மற்றும் சகிப்புத் தன்மையின் அடையாளமான இயேசு கிறித்துவின் பிறந்த நாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர்.

ஆனால், அதை உணராத சில சக்திகள் நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களை சில நாட்களாக அரங்கேற்றி வருகின்றன, ‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’ என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.