வெளியிடப்பட்ட நேரம்: 07:16 (12/01/2015)

கடைசி தொடர்பு:07:19 (12/01/2015)

ஜனவரி 12... விவேகானந்தர் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

உனக்கு தேவையான எல்லாவித வலிமையும் உதவியும் உனக்குள்ளே இருக்கின்றன.

                            -விவேகானந்தர்


நரேந்திரநாத் தத்தர், இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக வளர்ந்து- பல இந்திய உள்ளங்களின் நம்பிக்கை ஊற்றாக, பல லட்சோப லட்ச மக்களால் ஒரு தலைவனாக, நம்பிக்கை நாயகனாக, ஆன்மிக அறிஞராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு  வீரத்துறவி- விவேகானந்தர்.

"உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய்" என்று  இந்தியத் துணைக்கண்டத்தின் பல இதயங்களைத் தட்டி எழுப்பிய மகான்.1893, செப்டம்பர் மாதம் சிகாகோ நகரில் நடைபெற்ற  உலக சர்வ சமயப் பேரவையில்
இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார் விவேகானந்தர்.
இந்து சமயப் பிரதிநிதியாக மட்டும் உலக சர்வ சமயப் பேரவையில் பங்கேற்கவில்லை விவேகானந்தர் . அவர் அங்கு ஆறு நாட்களில் நிகழ்த்திய உரைகளை வாசிக்கும் எவரும் அவரது தேசபக்தியால் புளகாங்கிதம் அடைவர்.

உலகில் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளித்த நாட்டிலிருந்து வந்தவன் என்றுதான் தன்னை முதல் நாள் பேச்சில் விவேகானந்தர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"எங்கெங்கோ தோன்றும் ஓடைகள் அனைத்தும் இறுதியில் கடலில் சங்கமிப்பதைப் போல அனைத்து மதங்களும் இறைவனிடம் சென்று சேர்கின்றன' என்ற பொருள் தரும்பாடலை, சபையில் விவேகானந்தர் பாடியபோது, அந்த சபையே ஸ்தம்பித்து விட்டது.


இதுதான் அந்த மாநாட்டில் பேசிய பிற மதத் தலைவர்களிடமிருந்து விவேகானந்தரை வேறுபடுத்திக் காட்டியது. உலகம் முழுவதும் மதவெறி தலைவிரித்தாடுகையில் மானுடம் என்ன ஆகுமோ என்ற கவலையில் கூடிய அம்மாநாட்டிற்குத் தெளிவான வழிகாட்டுதலை, ஓர் இந்துத் துறவி என்ற முறையில் விவேகானந்தரால் கச்சிதமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த முடிந்தது.

பேச்சு,துணிவு,செயல்- இதன் ஒட்டுமொத்த வடிவம் தான் விவேகானந்தர். இதை விட மற்றுமொரு விஷயம் அவர் மென்மையான மன படைத்தவர். தான் செய்யும் செயல் யாவும் பிறருக்கு பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தார்.‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று உணர்ந்து, 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார்.

விவேகானந்தர் தன்னுடைய ஒய்வு நேரத்தில் கவிதைகள் பல எழுதி இருக்கிறார்.கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.

"அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்.."
                                   -விவேகானந்தர்
'ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது' என்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதியை  தேசிய இளைஞர் தினமாக  கொண்டாடி வருகிறோம்.ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை உண்மையாக்கப்  பாடுபடுவோம் என அவர் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்போம்.

-இ.லோகேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்