Published:Updated:

சவாரிக்குப்பின் அனாதையாக்கப்படும் குதிரைகள்!

சவாரிக்குப்பின் அனாதையாக்கப்படும் குதிரைகள்!
சவாரிக்குப்பின் அனாதையாக்கப்படும் குதிரைகள்!

சவாரிக்குப்பின் அனாதையாக்கப்படும் குதிரைகள்!

சென்னை மக்களின் பிரதான பொழுது போக்கு இடமாக விளங்குவது மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகள். இங்கு குடும்பத்துடன் வருபவர்கள், காதலை பரிமாறிக் கொள்ள வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் வருவதுண்டு. சுட்டெரிக்கும் வெயிலில் கூட அன்பை பரிமாறுபவர்களும் இருக்கிறார்கள்.
 

சவாரிக்குப்பின் அனாதையாக்கப்படும் குதிரைகள்!

தினமும் ஆயிரக்கணக்கிலும், வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கிலும் மக்கள் வருவதாக புள்ளி விவரம் கூறுகிறது. மக்களை நம்பி வியாபாரிகள் உள்ளனர். இதே போன்று குதிரைகளை வைத்து வருமானம் பார்க்கும் ஒரு கும்பலும் உள்ளது.

கடற்கரை மணல்பரப்பில் இதமான குளிர்ந்த காற்றுக்கு இடையில் குதிரையில் சவாரி செல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவதுண்டு. இதனால் மெரீனா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரையில் பொது மக்கள் மத்தியில் குதிரை சவாரிக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக 'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்புக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா மெரீனா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் உதவியுடன் மெரீனாவில் கொடுமைப்படுத்தப்பட்ட 2 குதிரைகளை மீட்கப்பட்டது. வேனில் ஏற்றப்பட்டு ப்ளூ கிராஸ் அமைப்பினரிடம் அவைகள் ஒப்படைக்கப்பட்டன. 

சவாரிக்குப்பின் அனாதையாக்கப்படும் குதிரைகள்!

இதுகுறித்து ப்ளூ கிராஸ் அமைப்பினர் கூறுகையில், "சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு குதிரைகளின் உடலில் ஆங்காங்கே காயங்கள் உள்ளன. அதோடு காய்ச்சலிலும் அவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று குதிரைகளை கொடுமைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலான சாலைகளில் கால்நடைகள் நடமாடுவது குறித்து எங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் புகார்கள் வருகின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளிடம் உள்ளது. அவற்றை மீட்டு பாதுகாப்பதே எங்களின் கடமை" என்றார்.

'பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா' அமைப்பினர் கூறுகையில், "எங்கள் அமைப்பு சார்பில் கடந்த மார்ச் 4ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் ஒரு குட்டி குதிரை, நவம்பர் 28ல் பெசன்ட் நகரில் ஒரு குதிரை, டிசம்பர் 11ல் எழும்பூரில் ஒரு குதிரை என 3 குதிரைகள் மீட்கப்பட்டன. இதில் எழும்பூரிலும், பெசன்ட் நகரிலும் மீட்கப்பட்ட குதிரைகள் இறந்து விட்டன. குதிரைகள் இப்படி இறப்பதற்கு அவற்றை அதிகமாக கொடுமைப்படுத்தியதும், போதிய பராமபரிப்பும் இல்லாதே காரணம்.

சுட்டெரிக்கும் வெயிலில் குதிரைகளை சவாரிக்குப் பயன்படுத்தக்கூடாது. அவற்றுக்கு போதிய உணவு, தண்ணீர், மருத்துவ சிகிச்சை எல்லாம் அளிக்கப்பட வேண்டும். ஆனால் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகள் மூலம் வருமானத்தை மட்டுமே இவர்கள் பார்க்கின்றனர்.

சவாரிக்கு பயன்படுத்த முடியாத குதிரைகளை அதன் உரிமையாளர்கள் அனாதையாக விட்டுவிடுகின்றனர். இந்த குதிரைகள் வேறுவழியின்றி இறந்து விடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மெரீனாவில் கொடுமைப்படுத்தப்பட்ட இரண்டு குதிரைகளை மீட்டுள்ளோம். இருப்பினும் குதிரைகளை கொடுமைப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அவ்வாறு எடுக்கப்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்" என்றனர்.

-எஸ்.மகேஷ்

அடுத்த கட்டுரைக்கு