Published:Updated:

கொசுவை ஒழிக்க 1913 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!

கொசுவை ஒழிக்க 1913 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!
கொசுவை ஒழிக்க 1913 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!
கொசுவை ஒழிக்க 1913 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!

சென்னை: சென்னையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத் துறை துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏரிகள், குளம்-குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தங்கி இருக்கும் கொசுக்கள் மாலை முதல் இரவு முழுவதும் மக்களை கடிக்கிறது. என்னத்தான் கொசு விரட்டிகள், சுருள், லிக்யூட் போன்றவற்றை பயன்படுத்தினாலும், அதற்கெல்லாம் போக்குகாட்டிவிட்டு கடிக்கும் கொசுக்களால் மக்கள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

கொசுக்களில் பல வகைகள் இருந்தாலும், ‘ஏடிஸ்’ (பகலில் கடிக்கும் கொசுக்கள்) கொசுக்கள் கடிப்பதன் மூலம் ‘டெங்கு’ காய்ச்சலும், ‘அனாபிளஸ் கேம்பியா’ கொசுக்கள் மூலம் ‘மலேரியா’வும், ‘கியூலக்ஸ் டர்சாலிஸ்’ கொசுக்கள் மூலம் மூளை காய்ச்சலும், ‘கியூலக்ஸ் குயின்க்யூபேசியேட்டஸ்’ கொசுக்கள் மூலம் யானைக்கால் நோயும் மனிதர்களிடையே ஏற்படுகிறது.

இந்த கொசுக்களை கட்டுப்படுத்த சென்னை நகரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை கமிஷனர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சென்னையில் 17 லட்சம் வீடுகள் உள்ளன. சுகாதாரம், கொசு ஒழிப்பு போன்ற பணிகளுக்காக 500 வீடுகளுக்கு ஒரு ஊழியர் வீதம் 3,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொசுக்களை ஒழிக்க 563 மருந்து தெளிப்பான் கருவிகள், ‘பைரிதிரியன்’ எனப்படும் வேதிப்பொருளை கொண்டு புகை மூலம் கொசுக்களை விரட்ட கூடிய 384 புகை வெளியிடும் கருவிகள் கொண்டும் நகரில் கொசுக்கள் ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர 42 ஆட்டோக்கள் மூலமாகவும் சுழற்சி முறையில் கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 907 அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், 1,812 அங்கன்வாடி, சத்துணவு கூடங்கள், 1,117 பள்ளி-கல்லூரிகள், 427 பூங்காக்கள், 1,490 கட்டுமானம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் மட்டும் 73.62 டன் அளவில் தேவையற்ற கழிவுகளும், 64.05 டன் டயர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. குளம்-குட்டை, ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் கொசுக்களை ஒழிக்க மாதம் 20 ஆயிரம் லிட்டர் எம்.எல்.ஓ. (மஸ்கியூட்டோ லார்விசிடல்) ஆயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகை மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த கூடிய ‘பைரிதிரியம்’ எனும் வேதிப்பொருள் வாரத்துக்கு 1,400 லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தப்படுகிறது. நீர்நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு இதுவரை 6.9 லட்சம் இலவச கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி பூங்கா துறை சார்பில் கொசுக்களை இயற்கையிலே விரட்டக் கூடிய நொச்சி செடிகள் வழங்கும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை நகரில் கொசுக்களை ஒழிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.4.5 கோடி மாநகராட்சி ஒதுக்கி வருகிறது. இதன் காரணமாக சென்னை நகரில் கொசுக்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் 553 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 என்ற நிலையில் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் எந்த பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகம் இருக்கிறதோ அதை மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணான ‘1913’ ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கொசுக்கள் ஒழிக்கும் பணியில் மாநகராட்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தங்கள் வீடுகள், அலுவலகங்கள், சுற்றுப்புறங்களில் டயர், தேங்காய் ஓடு போன்ற தேவையற்ற பொருட்கள் தேங்காமலும், குறிப்பாக தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது பொதுமக்களின் முக்கிய கடமையாகும்" என்றார்.