
தமிழ்மகன் என்கிற பா.வெங்கடேசன் சென்னையில் 1964ல் பிறந்தவர். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது ‘வெள்ளை நிறத்தில் ஒரு காதல்’ நாவல் முதல் பரிசு பெற்றது.
1996ல் ‘மானுடப் பண்ணை’ என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது. ‘சொல்லித் தந்த பூமி’ (1997), ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’ (2007) ஆகிய நாவல்களும் ‘எட்டாயிரம் தலைமுறை’ (2008), ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’ (2006), `மீன்மலர்' (2008) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் திரைப் பிரமுகர்களின் அரிய செய்திகளைச் சொல்லும் `செல்லுலாய்ட் சித்திரங்கள்' (2009) வெளிவந்துள்ளன. 2014-ல் மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் சிறுகதை தொகுதியும், ஆபரேஷன் நோவா அறிவியல் புனைகதை நாவலும் வெளியாகின.
எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுதி தமிழக அரசு விருது (2010) பெற்றது. வெட்டுப்புலி நாவல், ஜெயந்தன் அறக்கட்டளை விருது (2009), கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது (2010), ஆண்பால் பெண்பால் (ஜி.எஸ்.மணி அறக்கட்டளை விருது, ஆனந்த விகடன் விருது (2012) பெற்றது. வனசாட்சி நாவல், மலைச்சொல் விருது, சுஜாதா அறக்கட்டளை விருது (2013) பெற்றது.
சிறந்த எழுத்தாளருக்கான பெரியார் விருது (2014), நீயா நானா விஜய் டி.வி விருது (2014) ஆகியவை பெற்றவர்.1990-களில் கடவுள் 2, ஆல்பா என்ற விஞ்ஞான தொடர்கதைகளை உண்மை வார இதழில் எழுதினார். ஆனந்த விகடன் வார இதழில் ஆபரேஷன் நோவா என்ற விஞ்ஞான தொடர்கதை எழுதியவர்.