Published:Updated:

வழக்கறிஞர்களை தண்டிக்கும்போது மாற்றி யோசிக்க வேண்டும்: நீதிபதி

Vikatan Correspondent
வழக்கறிஞர்களை தண்டிக்கும்போது மாற்றி யோசிக்க வேண்டும்: நீதிபதி
வழக்கறிஞர்களை தண்டிக்கும்போது மாற்றி யோசிக்க வேண்டும்: நீதிபதி
வழக்கறிஞர்களை தண்டிக்கும்போது மாற்றி யோசிக்க வேண்டும்: நீதிபதி

சென்னை: தொழில் மாண்பை மீறும் வழக்கறிஞர்களுக்கு புதுவிதமான தண்டனை வழங்க, பார் கவுன்சில் யோசிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகில இந்திய அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மக்கள் இலவச சட்ட ஆலோசனை மையத்தின் துவக்க விழா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கட்டிடத்தில் நேற்று நடந்தது.

இந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசும்போது, ''வழக்கறிஞர்கள் நல்லது செய்யும்போது ஆதரிப்பதிலும், கெட்டது செய்யும்போது எதிர்ப்பதிலும் முதல் நபராக நான்தான் இருப்பேன். இலவச சட்ட உதவி மையம் என்ற முறை முதல் முதலில் தோண்றியதே தமிழகத்தில்தான். அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வர சிந்திப்பதற்கு முன்பே, இந்த முறை இங்கு வந்து விட்டது.

தற்போது, சட்டப்பணி ஆணைக்குழு என்ற அமைப்பின் சேவை மூலம், சட்டம் மற்றும் நீதியின் பலன்கள் பொதுமக்கள் வீட்டு வாசலுக்கு சென்று அடையும் அளவுக்கு வந்துவிட்டது. மக்கள் மத்தியில் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் நீதிமன்றத்துக்கு அதிக அளவில் வருகின்றனர்.

தற்போது மகளிர் நீதிமன்றம், குழந்தைகள் நீதிமன்றம் என்று அதிகரித்துவிட்டது. அதேநேரம், பொதுமக்களுக்கு நீதியின் மீதும், நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். அதற்கு வழக்கறிஞர்களின் உழைப்பும் முக்கியமானது.

அமெரிக்காவில், வழக்கறிஞர்கள் இலவச சட்ட உதவிகளை வழங்கினால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்குகிறார்கள். இதுபோல் திட்டத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க ஆர்வத்தை வழக்கறிஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

தொழில் மாண்பை மீறும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து தண்டிக்கும்போது, மாற்றி யோசிக்க வேண்டும். அந்த வழக்கறிஞரை தொழில் செய்யவிடாமல் தடுப்பதற்கு பதில், 6 மாதத்துக்கு நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் கண்டிப்பாக பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் என்ற தண்டனை வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும்" என்றார்.