Published:Updated:

ஐந்திணை, ஐம்பூதம், முந்நீர் விழுவு வரிசையில் ‘பொழுதுகள் ஆறு!’

Vikatan Correspondent
ஐந்திணை, ஐம்பூதம், முந்நீர் விழுவு வரிசையில் ‘பொழுதுகள் ஆறு!’
ஐந்திணை, ஐம்பூதம், முந்நீர் விழுவு வரிசையில் ‘பொழுதுகள் ஆறு!’
ஐந்திணை, ஐம்பூதம், முந்நீர் விழுவு வரிசையில் ‘பொழுதுகள் ஆறு!’

சென்னை: பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தமிழ்ச் சூழலியல் பண்பாட்டில் நடைபெறும் சிதைவுகளைக் குறித்து எச்சரிக்கும் நிகழ்வு 'பொழுதுகள் ஆறு' என்ற தலைப்பில் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் முன்னணி சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள், ஐந்திணை, முந்நீர் விழவு, ஐம்பூதம் என தமிழ்ச் சூழலியல் பண்பாட்டில் நடைபெறும் சிதைவுகளைக் குறித்து எச்சரிக்கும் நிகழ்வுகளை, துறைசார் ஆய்வாளர்களைக் கொண்டு கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 'பொழுதுகள் ஆறு'  என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி வளாகத்தில் அரங்கேற உள்ளது.

இந்தாண்டு ஆய்வரங்கம் முடிந்து பின் விதைத் திருவிழாவும் நடக்கிறது. பன்னாட்டு உர நிறுவனங்களின் விவசாய அழிவுக் கொள்கைகளை எதிர்த்து, நமது மரபு விதைகளைப் பாதுகாக்கும் வகையில் விதை சேகரிப்பு, மரபு விதைகளைப் பரவலாக்கும் விதைத் திருவிழா, இவ்விழாவின் முக்கிய அம்சம்.

நம்மாழ்வாரின் இயற்கை வேளாண் இயக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்த பெர்னாட் டி கிளார்க் கருத்தரங்கை தொடங்கி வைக்க, பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பாமயன், நக்கீரன், அரச்சலூர் செல்வம், 'நெல்' ஜெயராமன், மருத்துவர் ஸ்ரீராம், ஒரிசா பாலு ஆகிய சூழலியல் அறிஞர்கள் பேசுகின்றனர். பூவுலகின் நண்பர்களுடைய கருத்தரங்குகளில் முத்தாய்ப்பாக இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட சிறுதானிய சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த உணவுத் திருவிழாவில், பீர்க்கன்காய் சாமைச் சோறு, குதிரைவாலி கேசரி, கேழ்வரகு பாயசம், காராமணி தயிர் பக்கோடா, வெண்பூசணி பச்சடி, சீரகச்சம்பா காரப் புட்டு, மாப்பிள்ளை சம்பா கத்தரிச் சோறு, கதம்பக்காய் கூட்டு, கறுப்புக் கவுணி இனிப்பு அவல் பிரட்டல், சோள தோசை, சாமையரிசி பிரியாணி, காட்டுயவுணி அவல் பிரட்டல், பனிவரகு தயிர்ச்சோறு, நிலக்கடலை துவையல், மீன் அல்லது நாட்டுக்கோழி வறுவல் என சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

இந்த உணவுத் திருவிழாவுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இலை ஒன்றுக்கு 300 ரூபாய் எனவும், தொடர்புக்கு: 98416 24006 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நா.இள.அறவாழி