Published:Updated:

நகைகளை ஆற்றில் வீசி போக்கு காட்டிய குரங்கு!

Vikatan Correspondent
நகைகளை ஆற்றில் வீசி போக்கு காட்டிய குரங்கு!
நகைகளை ஆற்றில் வீசி போக்கு காட்டிய குரங்கு!

ஒகேனக்கல்: அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நகைகளை ஆற்றில் வீசி போக்கு காட்டிய குரங்கு!

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளனர். அப்போது, அந்தப் பகுதிக்கு திடீரென ஒரு குரங்கு வந்தது. அது, தொழில் அதிபர்கள் வைத்திருந்த நகைப்பையை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறிக் கொண்டது. இதை கவனித்த நடராஜன், ஆனந்தன் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அருவியில் இருந்து வெளியே வந்த தொழிலதிபர்கள் குரங்கிடம் இருந்து தங்களது நகைப்பையை வாங்க முயற்சித்தனர். அப்போது அந்த குரங்கு, பையை திறந்து அதில் உண்பதற்கு ஏதாவது இருக்கிறதா? என்று பார்த்துள்ளது. ஆனால் அந்த பையில் உண்பதற்கு எதுவும் இல்லை என்று தெரிந்ததும், பையில் இருந்த விலை உயர்ந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து காவிரி ஆற்றில் வீசியது.

இதில் மேலும் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர்களும், சுற்றுலா பயணிகளும் உடனே காவிரி ஆற்றில் இறங்கி, குரங்கு போடும் நகைகளை ஒவ்வொன்றாக மீட்டனர். எல்லா நகைகளையும் வீசிய குரங்கு காலி பையை கடுப்பில் ஆற்றில் வீசிவிட்டு கடுப்பில் அங்கிருந்து தாவி ஓடி இருக்கிறது. நகைகளை ஆற்றில் இருந்து மீட்டு தொழிலதிபர்கள் சரி பார்த்தபோது, 12 பவுன் தங்க கைக்கடிகாரத்தை மட்டும் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர்கள், ஒகேனக்கல் போலீசில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் காணாமல் போன தங்க கைக்கடிகாரம் அங்கிருந்த மரக்கிளைகளில் சிக்கி இருக்கிறதா? அல்லது காவிரி ஆற்றில் அது அடித்து செல்லப்பட்டதா? அல்லது ஏதாவது சுற்றுலா பயணி நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதுபோல் தங்க கைக்கடிகாரத்தை எடுத்து சென்றுவிட்டார்களா? போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர்களின் பையில் தின்பண்டங்கள் ஏதும் இல்லாத கடுப்பில் குரங்கு நகைகளை ஆற்றில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.