
கணிப்பொறியில் தமிழில் ஓரிடத்தில் அடிப்பதை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது ஒருங்கு குறி (யூனிகோடு). இதனைப் பயன்படுத்திக் கிரந்தத்தைப் புகுத்தச் சிலர் முயன்றனர். தமிழ்க் காப் புக்கழகமும் பிற தமிழமைப்புகளும் தமிழறிஞர்களும் கடுமையாக எதிர்த்த தால் இது கைவிடப்பட்டது.
உண்மையிலேயே கைவிடப்பட்டதா, அல்லது சமயம் பார்த்து நுழைய காத்து இருக்கிறதா என்ற ஐயம் தமிழறிஞர்களிடையே இன்னமும் இருக்கிறது.. இது தொடர்பாக தமிழ்க் காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம்.
கணிப்பொறி மூலம் ஒருங்குகுறி என்னும் சீருருவைப் பயன்படுத்தித் தமிழைச் சிதைக்கும் முயற்சிகள் ஓய்ந்து விட்டனவா?
"சரியான நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். தமிழன்பர்களைவிடத் தமிழ்ப்பகைவர்களே வலிமையானவர்களாகவும் தமிழைச் சிதைப்பதில் ஒற்றுமை மிக்கவர்களாகவும் தமிழுக்குக் கேடு செய் வது குறித்து ஓயாமல் சிந்திப்பவர்களாகவும் உள்ளனர். கால் 1/4, அரை 1/2 என்பனபோல் பிற பின்னங்க ளுக்கு முந்திரி மா, காணி என்றெல்லாம் பெயர். இவற்றை எண்களால் குறிப்பிடாமல் குறியீடுகளால் குறிப்பர்.
இவற்றைப்போல் ஆழாக்கு முதலான அளவைகளுக்கும் தமிழில் குறியீடுகள் உண்டு. இவற்றை ஒருங்கு குறியில் சேர்க்க வேண்டும் என்று ரமண சர்மா என்பவர் ஒருங்குகுறி அவையத்துக்கு எழுதியுள்ளார்; ஆங் கிலத்தில் ஒலி பெயர்ப்பது குறித்தும் பரிந்துரைத்துள்ளார்.
அவர் ஒன்றும் தமிழறிஞர் அல்லர். சமஸ்கிருதப் பண்டிதர். தமிழுக்குத் தொண்டாற்றுவதுபோல் தமிழைச் சிதைக்க வழி வகுக்கிறார். எப்படி என்றால், தமிழைப் பிற மொழிகளில் ஒலிக்கும் பொழுது தமிழுக்கேற்ப ஒலித்தால்தான் - உச்சரித்தால்தான் - பொருள் விளங்கும் வகையில் தெளிவாகப் புரியும். சான்றாக ழகரம் என்பது தமிழுக்கே உரியது.

அதைக் குறிப்பிட ஆங்கிலத்தில் உலக அளவில் ZHA என்றுதான் பயன்படுத்தி வருகிறோம். அதுபோல் தமிழில் உள்ள நெடில் எழுத்துகளைக் குறிக்க இரண்டு உயிரெழுத்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். அதாவது அ-வுக்கு A என்றால், ஆ-வுக்கு AA. உ-வுக்கு U என்றால், ஊ-வுக்கு UU என்பன போன்று குறிப்பர். அல்லது எழுத்துக்கு மேல் கோடு போடுபவர்களும் உண்டு. எனினும் அவ்வாறு தட்டச்சிடுவது கடினம் என்பதால் இரண்டு உயிர் எழுத்துகளையே பயன்படுத்துவர்.
சர்மா என்ன சொல்கிறார்?
"எடுத்துக்காட்டாக அவர் பரிந்துரைக்கும் எழுத்துப் பெயர்ப்பைப் பாருங்கள்.
கீழ் என்பதற்கு KIIZH என நடைமுறையில் உள்ளதை kil என மாற்ற வேண்டும். இதேபோல் ஆழாக்கு / aazhakku என்பதை alakku எனவும் மூவுழக்கு / muuvuzhakku என்பதை muvulakku எனவும் வராகன் / varaagan என்பதை varakan எனவும் குறிக்க வேண்டும் என்கிறார். வழக்கத்தில் இல்லாத கஜம், சிரஞ்சீவி போன்ற குறியீடுகளை யெல்லாம் கணிணியில் சேர்க்க வலியுறுத்துகிறார். தமிழில் உள்ள ல, ள, ழ - ண, ந, ன - ற, ர, முதலிய பொருளை வேறுபடுத்தும் வேறுபாட்டு ஒலிகளையும் ஒரே வகையாகக் குறிப்பிட்டுத் தமிழைச் சிதைப்பதே அவரது நோக்கம். இவரது கருத்துகளை அப்படியே இணையக்கல்விக்கழகம் ஏற்றுப் பரிந்துரைபோல் அரசின் மூலம் ஒருங்குகுறி அவையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவது தமிழுக்குக் கேடு தரும்.''
இதற்குத் தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்தது?
இது தொடர்பில் தமிழ் இணையக்கல்விக்கழகம் கடந்த வருடம் மார்ச் மாதம் கருத்தரங்கம் என்ற பெயரில் தன் ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தியது. இதை நான் கடுமையாக எதிர்த்தேன். இதற்குத் தமிழறிஞர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்துக் கருத்து கேட்க வேண்டும் என்றும் தமிழ் உலக மொழியாக உள்ளதால் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் தமிழ் ஆட்சிமொழியாக உள்ள பிற நாடுகளிலும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். பலரும் எதிர்த்தனர். எதிர்ப்பு வலுத்ததால் குழு போடுவதாக சம்மதித்து அங்கேயே குழு உறுப்பினர்களை அறிவித்தனர்.
அரசு என்ன செய்கிறது?
மார்ச்சில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவை ஏற்கக்கூடாது எனவும் அரசு தமிழறிஞர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம். தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலர் தா.கி. இராமச்சந்திரனிடமும் நேரில் தெரிவித்தேன். அதற்கிணங்க அவர்கள் அக்கூட்ட முடிவை ஏற்கவில்லை. இதற்கு முன்னரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்குத் தமிழறிஞர் ஒருவரைத்தான் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற தமிழ்க்காப்புக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பொறியாளராக இருந்து தலைவர் பொறுப்பில் இயங்கியவரை விடுவித்தனர்.

முன்னாள் தலைவர் தன் விருப்பத்துக்கிணங்க அரசின் கொள்கைக்கு மாறாக வரி வடிவச்சிதைவு பற்றிய காணொளியை இணையக் கல்விக்கழகத் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதையும் வேண்டுகோளுக்கேற்ப நீக்கினர். இவ்வமைப்பில் தமிழ்வளர்ச்சித்துறையின் அரசு செயலரையும் தமிழ்வளர்ச்சி இயக்குநரையும் சேர்க்குமாறு வேண்டியதை ஏற்றுச் சேர்த்தனர்.
அப்படி என்றால் அரசுதான் குழுவை நியமித்ததா?
இணையக்கல்விக்கழக இயக்குநர் பரிந்துரைக்கேற்ப அரசாணை நிலை எண் 16 ன்படி அறிவுரை நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட குழுவில் சேர்க்கப்பட்ட தமிழறிஞர்கள் பெயர்களை நீக்கிவிட்டனர்; அவர்களிடம் நீக்கப்பட்ட விவரத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, தவறான தகவல் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவே இது.''
குழு உறுப்பினர்கள் தகுதியானவர்கள்தானே?

கணினியில் கிரந்தத்தைப் புகுத்த முயன்றவர்தான் இந்த ரமண சர்மா என்பவர். அவர்தான் இப்பொழுது தமிழ் ஒலிப்பைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குற்றவாளியை, குற்றவாளியைக் கண்டுபிடிக் கும் குழுவில் போடுவதுபோல், அவரையே இக்குழுவில் இணையக்கல்விக்கழக இயக்குநர் சேர்த்துள்ளார். இது மிகப்பெரிய மோசடியாகும்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறீர்கள்?
ஒருங்குகுறியாக இருந்தாலும் ஒலி பெயர்ப்பாக இருந்தாலும் உலகத் தமிழறிஞர்களைக் கலந்து பேசி அரசு நிலையில் முடிவெடுக்க வேண்டும். அதுவரை இவை தொடர்பாக எந்த முடிவும் ஒருங்குகுறி அவையம் எடுக்கக்கூடாது. தனியார் தீர்மானங்களை ஒருங்குகுறி அவையம் ஏற்கக்கூடாது. தமிழ்ப்பற்று மிக்க தமிழ றிஞர்களை இயக்குநராக நியமிக்க வேண்டும். குறியீடுகளின் பயன்பாட்டில் கருத்து செலுத்து வதை விட ஒரே மாதிரியான ஒலிபெயர்ப்பு முறையைப் பயன்படுத்துவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழைச் சிதைக்கும் முயற்சியை முறியடிக்க அரசு களத்தில் இறங்கவேண்டிய தருணம் இது.
- பி.ரியாஸ் அஹமது