விவசாயிகள் கொண்டாடும் கோடை உழவு! | The remaining half of the Spiritual Science: Queer festival celebrates the farmers plowing ponner

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/04/2015)

கடைசி தொடர்பு:18:32 (22/04/2015)

விவசாயிகள் கொண்டாடும் கோடை உழவு!

மிழ் ஆண்டு பிறப்பின் முதல் மாதமான சித்திரையில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சலும், அறுவடையும் இருக்க வேண்டுமென்று சூரிய பகவானிடம் வேண்டுவதே இதன் நோக்கமாகும்.

இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள். இந்த நாளில் மட்டும் கோவில் பூசாரி கள் வந்து, பூஜைகள் செய்து உழவு ஓட்டுவதை தொடங்கி வைப்பார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொன்னேர் உழவு கட்டுவதை இன்றும் ஒரு வழக்கமாக செய்து வருகின்றனர்.

தென் தமிழகத்தின் எல்லையில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் சித்திரை முதல் வெள்ளிக்கிழமையன்று பொன் ஏர் உழவு விழா சிறப் பாக நடைபெற்றது. "எல்லா வீட்டுக்காரவுகளும் அவகவுகளோட காளைகள கூட்டிக்கிட்டு, ஏர் கலப்பைகள தூக்கிக்கிட்டு ஊர்க் காளியம்மன் கோவில்கிட்ட வர வேணும். நல்ல நேரம் போறதுக்குள்ள ஏர் உழ ஆரம்பிக் கணும். நேரமாச்சு விரசலா வாங்க’’ என்று கோவில் பூசாரியின் குரல் ஒலிபெருக்கியில் ஊர் முழுவதும் பரவ, அடுத்த அரை மணி நேரத்தில் ஊர்க்காளியம்மன் கோவில் முன்பு காளைகள், ஏர் கலப்பைகளுடன் ஆஜரானார்கள் விவசாயிகள்.

பூஜை முடிந்ததும் ஓலைப்பெட்டியில் இருந்த கம்பு விதையை எடுத்துக்கொண்டு, பூசாரி முன்னே நடந்து செல்ல, அனைவரும் ஏர் கலப்பைகளையும், மண் வெட்டிகளையும் தூக்கிக்கொண்டு கோவிலுக்குச் சொந்த மான நிலத்தை நோக்கி நடந்து சென்றனர். பிறகு, அவரவர்கள் மாடுகளில் ஏர் கலப்பையை பூட்டி மூன்று முறை உழுதனர்.

பொன் ஏர் உழவு பற்றி பேசிய விவசாயி பால்ராஜ், “தமிழ் வருஷத்துல தலைமாதம் சித்திரை. 'சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்'னு சொல்வாங்க. சித்திரை பிறக்கிற நாளிலோ, அல்லது அந்த மாசத்துல  முக்கிய நாட்களிலும் முதல் உழவை உழுவார்கள். ஆனா, எங்க கிராமத்துல எப்பவுமே சித்திரை முதல் வெள்ளிக்கிழமைதான் பொன் ஏர் கட்டுவோம். வசதி படைச்ச பண்ணைக்காரங்க வீட்டுல தங்கத்துல கலப்பை செஞ்சு சித்திரை முதல் நாள் உழுவார்களாம். அதனாலயும் பொன் ஏர் உழவுன்னு சொல்வாங்க.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு கைப்பிடி அளவு கம்பு விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு கொண்டு வருவோம். அதுக்கு பூஜை செஞ்சு பொன் ஏர் கட்டுற நாள்ல விதைப்போம். வீட்டுல சாணி மொழுகி, விளக் கேத்தி, மஞ் சள்ல பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் செருகி வைப்போம். நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காப் பழம் உடைச்சு ஏர் மாடுகளுக்கு சாம்பிராணி காட்டி, காளைகளை காளியம்மன் கோவிலுக்கு முன்னால கொண்டு வந்து நிப்பாட்டுவோம். மாட்டு கழுத்துல மாலை போட்டு, கோவிலுக்குப் பாத்தியப் பட்ட நிலத்துல கிழக்கு, மேற்கா மூணு தடவை உழுவோம்.

பிறகு, அவரவர்கள் நிலத்துலயும் உழுதுட்டு வீட்டுக்கு திரும்புவோம். நாங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ளயே ஊர்ப் பெண்கள் மஞ்சத்தண்ணிய கரைச்சு வச்சுருப்பாக. உறவுக்கார ஆம்பளக மேல மஞ்சதண்ணிய ஊத் திட்டு களைப்பு தீர மோர், இளநீர்னு ஏதாவது குடிக்கக் கொடுப்பாக. சித்திரையில் உழவடிச்சா அந்த வருஷம் முழுசும் விவசாயம் செழிக்கும்னு நம்பிக்கை. இது இன்னைக்கு நேத்து இல்ல, ரொம்ப வருஷங்களாகவே நடக்குது” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விவசாயி வரதராஜன், "தமிழ்நாட்டுல மொத்த விளை நிலங்கள்ல 60% மானா வாரியாத்தான் இருக்குது. மானாவாரி விவசாயத்துக்கு பருவமழைதான் ஜீவாதாரமாக இருக்கு. கோடை யில பெய்யும் மழை நீரை  சேமிக்கலேன்னா அது வீணாகிடும். அதனால அந்த நீரை முறையாகப் பயன் படுத்தும் நோக்குல உழுவதுதான் கோடை உழவு. இந்த உழவுனால மண் பொலபொல என்றாகி மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாம தடுக்கப்படும்.

அதோடு மண்ணோட ஈரப்பதமும் அதிகரிக்கும். களைகளும், களை விதைகளும் மண்ணுக்கு மேல் வந்து கோடை வெயிலுக்கு காய்ந்துவிடும். கோடையில் இரண்டு முறை உழவடித்துவிட்டு, பின் மழை பெய் யும்போது விதைத்தால் சரியாக இருக்கும். கோடை உழவு செய்தா கோடி பயன் இருக்குது” என்கிறார் ஆச்சர்யமாக.

பொன்னேர் உழவு பற்றி வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியத் திடம் கேட்டோம். "தமிழக மரபில் பொன்னேர் உழவுக்கு ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஏர் கலப்பை, எருதுகள், நிலங்களை வைத்து செய்யப்படும் ஒரு புனிதமான சடங்கு இது. கோடையில் உழும் உழவுதான் செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இன்னொன்று இந்த சடங்கின் போது சிறிய தங்க கலப்பையை வைத்து வழிபடுவதும் வழக் கம். இது வட்டார வழக்குதான். வட்டாரத்துக்கு வட்டாரம் இந்த வழக்கம் மாறுபடும்.

இதோடு கலப்பைகளுக்கு மஞ்சள், சந்தனம் பூசியும் வழிபடுவார்கள். சித்திரை யில் உழவு செய்யப்படும் மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் களைகள் அழிந்து, அந்த நிலம் விதைப்புக்கு தயாராகிவிடும். அடுத்து வருகிற தென் மேற்கு பருவ மழைக்கு நிலங்களில் விதைப்பு தொடங்கிவிடும். எப்போது பொன்னேர் கட்டணும் என்பதற் கும் பஞ்சாங்கத்தில் நாட்கள் குறிக்கப்பட்டிருக்கு. அந்தந்த வட்டார பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாட்களில் பொன்னேர் கட்டலாம்.

பஞ்சாங்க கணிப்புகள் வானியல் அடிப்படையில் கணிக்கப்பட்டவைதான். இந்த வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை. ஆந்திரா மாநிலத்திலும் உண்டு. தமிழ் நூல்களிலும், சுவடிகளிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு" என்றார்.

-இ.கார்த்திகேயன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்