Published:Updated:

குயில் தோப்பு – நூல்கள் அறிமுக விழா!

Vikatan Correspondent
குயில் தோப்பு – நூல்கள் அறிமுக விழா!
குயில் தோப்பு – நூல்கள் அறிமுக விழா!

மிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கம்பம் கிளையின் சார்பாக, குயில் தோப்பு இலக்கிய சந்திப்பு 66 வது நிகழ்வின் நூல்கள் அறிமுக விழா தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்றது. இதற்கு தமுஎகச கம்பம் கிளை தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஐ.தமிழ்மணியின்  'நிலாப்பானை' எனும் ஹைக்கூ நூலை அறிமுக செய்து வைத்து பாண்டித்துரை பேசினார்.

'' 'புல் அறுக்கும் பெண்
அறுத்துக் கொண்டாள் வயலில்
பண்ணருவாளாய் கணவன்'

என்பது தமிழ்மணியின் ஒரு கவிதை. எங்களுடைய ஊரிலிருந்த விவசாய தம்பதிக்கு நடந்த உண்மை சம்பவம் இது. மனைவிக்கு புல் அறுத்து, அதனை கால்நடைக்கு தருவது வேலை. கால்நடைகளிடம் பால் கறந்து அவர்களுடைய வாழ்க்கை நகருகிறது. அவருடைய கணவனின் நடத்தை சரியில்லாததால் ஒரு நாள் உயிர் விடுகிறார் மனைவி. இரண்டு கட்டு புல்லை மாடுகளுக்காக அறுத்து வைத்துவிட்டு, வயலில் அவர் இறந்தார். தமிழ்மணியின் கவிதைகளை வாசிப்பவர் ஒவ்வொருவரையும் தங்கள் வாழ்க்கையின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட செய்கிறது'' என்றார் .

குயில் தோப்பு – நூல்கள் அறிமுக விழா!

அ.உமர் பாரூகின் 'சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்' நாவலை அறிமுகம் செய்து வைத்து பேசிய தமுஎகச மாநில துணைப்பொதுச்செயலாளர் லட்சுமி காந்தன், “முன்பு அம்மா என்ற வார்த்தையை கேட்டால் உள்ளத்தில் பாசமும், அன்பும் ததும்பும் . இன்றோ அந்த அழகான வார்த்தையை, பூவின் இதழை பாறையில் வைத்து துவைப்பதுபோல் துவைத்து விட்டார்கள்.

பொதுவாக  நாவல்கள் எல்லாம் அதிக பக்கங்கள் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், உமர் பரூக்கின் நாவலோ 100 பக்கங்களுக்குள் இன்றைய அரசியலை போட்டுடைக்கிறது. தமிழத்தில் மறுமலர்ச்சியை வித்திட்டவரின் சிலைக்கு அருகில் 'சே'விற்கு சிலை வைக்கிறார்கள். அதற்கு 'டி'யும் பேசாமல் இருக்கிறார் என்றெல்லாம் தனது நாவலில் எழுதிருக்கிறார்.

மேலும், 'கோணைக்கழுத்தர்கள் தேசம்' என்பது செல்லிடைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தில் செல்பவர்களுக்கு சவுக்கடியாய் இருக்கிறது. நமது குழந்தைகளிடம் நாம் சரியாக பேசவில்லை என்பதையே காட்டுகிறது இன்றைய கார்ட்டூன் சேனல்கள். நாம் அவர்களுடன் பேசவில்லை. விலங்குகள் அவர்களுடன் பேசுகின்றன. ஆதலால் குழந்தைகளும், விலங்குகளை விரும்பி அதனுடன் பேசி , பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய பாசிச அரசுகளை எதிர்த்து ஒவ்வொருவரும் தன்னுடைய எழுத்து, பேச்சு, வாசிப்பு ஆகியவற்றின் மூலம் போராட வேண்டிய நிலை உள்ளது. இந்த போராட்டத்தில் தமுஎகச என்றும் உங்களோடு துணை நிற்கும்'' என்றார்.

குயில் தோப்பு – நூல்கள் அறிமுக விழா!

இ.எம்.எஸ். அபுதாகீரின் 'புதிய அயனம்' என்ற கவிதை நூலை அறிமுகம் செய்து வைத்த தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன், ''நாம் புழக்கப்படுத்த மறந்த நிலையில் இருக்கும் ஒரு அழகான தமிழ் சொல் அயனம். அயனத்திற்கு, சூரியனின் பாதையை தெரிவிப்பது என சிங்கார முதலியார் சொல்லுகிறார். இன்னும் சில இலக்கியங்களில் அயனம் என்ற சொல்லுக்கு, பயணம், வழி போன்ற பொருட்கள் தருகின்றன . இப்படி தமிழில் இறந்து கொண்டிருப்பதாக கருதப்படும் வார்த்தைக்கு உயிர்ப்பூட்டியிருக்கிறார் அபுதாகீர்.

தன்னை சுற்றியிருக்கும் சமூக பிரச்னைகளை கண்டு கோபப்படாத ஒருவன் எழுத்தாளனாக இருக்க முடியாது. இங்கே இருக்குற எழுத்தாளர்கள், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எழுதுங்கள். அதோடு, அப்பிரச்னைகளிலிருந்து வெளிவரும் தீர்வுகளையும் எழுதுங்கள். நிச்சயமாக இலக்கியங்களால் விவசாய பிரச்னைகளையும், தீர்வுகளையும் உரக்க சொல்ல முடியும்.

மரபு இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை கற்காமல் புதுக்கவிதைகளை எழுதினால் அதில் சத்து இருக்காது. கண்ணதாசனின் கவிதைகளில் மரபிலக்கியங்களில் தொனி நன்றாக தெரியும். சமூகப்பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் உரிமையோடு, உரக்க எழுதுங்கள். அதனை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அப்போது உங்கள் எழுத்து இந்நாட்டிற்கு பயன்பட்டதாய் நிலைத்து நிற்கும்'' என்றார்.

உ.சிவராமன்

ம.மாரிமுத்து
(மாணவப் பத்திரிகையாளர் )

படங்கள் : வீ.சக்தி அருணகிரி