வெளியே அனுப்பப்பட்டாரா ஃபோக்ஸ்வாகன் சேர்மன்? | Volkswagen chairman Ferdinand Piech resigns?

வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (29/04/2015)

கடைசி தொடர்பு:15:51 (29/04/2015)

வெளியே அனுப்பப்பட்டாரா ஃபோக்ஸ்வாகன் சேர்மன்?

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் சேர்மன்-ஆக இருந்த Ferdinand Piech கடந்த 25-ம் தேதி அன்று அதிரடியாக பதவி விலகினார்.

எல்லாவற்றையுமே 'நீட் & ஸ்மார்ட்'டாக கார்ப்பரேட் ஸ்டைலில் அணுகும் ஃபோக்ஸ் வாகன் குழுமத்தில் சேர்மனாக இருப்பவர், அதுவும்  அதிரடியாக பதவி விலகியது ஆட்டோமொபைல் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் தலைமை செயல் இயக்குனரான மார்ட்டின் வின்ட்டர்கார்ன் பற்றி, ஜெர்மானிய பத்திரிகையில்  Piech கருத்து தெரிவித்ததுதான் காரணம் என்கிறார்கள். டொயோட்டாவை வீழ்த்தும் முனைப்பில் ஃபோக்ஸ்வாகன் இருக்கும் இந்த நேரத்தில், Piech தெரிவித்த கருத்துகள் ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் போர்டு உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டதாம். 'மார்ட்டின்தான் எங்க தல' என்ற ரீதியில் அவர்கள் சேர்மன் Piech-ஐ டீல் செய்ய, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டார் Piech.

ஃபோக்ஸ்வாகன் பீட்டில் காரை உருவாக்கிய ஃபெர்டிணண்டு போர்ஷே-ன் பேரனான Piech-க்கு, அவருடைய தாய்மாமன் மகனும், போர்ஷே 911 காரை உருவாக்கிய Buttzi Porsche-வின் சகோதரருமான Wolfgang Porsche வின் ஆதரவும் கிடைக்கவில்லை. 2009-ம் ஆண்டு ஃபோக்ஸ் வாகனை போர்ஷே வாங்கத் திட்டமிட்டது. அது நடக்கவில்லை என்ற வருத்தம் Wolfgang Porsche-வுக்கு எப்போதும் உண்டு. அதனால், தனிப்பட்ட முறையில் Wolfgang Porsche-வுக்கு இது வெற்றிதான் என்று சொல்கிறார்கள்.

ஒரு ஆட்டொமொபைல் நிறுவனத்தின் தலைவராக, ஒரு பொறியாளராக Ferdinand Piech செய்த சாதனை கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. ஆடி நிறுவனம் இன்று உலகின் பெரிய கார் நிறுவனங்களுள்  ஒன்றாக இருப்பதற்கு காரணம் Piech-தான். ஆடி குவாட்ரோ காரை உருவாக்க திட்டமிட்டதும் இவர்தான். ஃபோக்ஸ்வாகன் குழுமத்தில் பல பிராண்டுகளும் ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் பிஸினஸ் ட்ரிக்கை அறிமுகப்படுத்தியதும் இவரே. இதனால், கார்களை உருவாக்கும் செலவு பெருமளவு குறைந்தது.

Piech தலைமையில் ஃபோக்ஸ்வாகன் குழுமம் வெற்றிப்பாதையில் பயணித்தாலும், பென்ட்லி, புகாட்டி, ஸ்கானியா, லம்போகினி, MAN போன்று பல நிறுவனங்களை வாங்கிக் குவித்தார். ஆல்ஃபா ரொமியோ நிறுவனத்தின்மீதும் இவருக்கு ஒரு கண் இருந்தது.

உலகிலேயே அதிக மைலேஜ் தரும் காரான ஃபோக்ஸ்வாகன் XL1 காரையும் உருவாக்கியது இவர்தான். உலகமே கொண்டாடும் புகாட்டி வேய்ரான் சூப்பர்காரை உருவாக்க சொன்னதும் இவர்தான். காரின் ப்ரோட் டோடைப் டெஸ்டிங் செல்வதற்கு முன்பே இவ்வளவு பவர், இவ்வளவு வெயிட் இருக்கவேண்டும் என்று டார்கெட்.. வேய்ரான் காரின் டெவலப்மென்ட்டில் சொதப்பிய இன்ஜினியர்களை உடனடியாக வேலையை விட்டு நிறுத்திவிடுவாராம்.

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் தோல்வியடைந்த கார்களுள் ஒன்று Phaeton. ஆனால், அந்தக் கார் உருவான தால்தான் இன்று பென்ட்லி கான்டினென்ட்டல் கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆம், Phaeton காரின் பிளாட்ஃபார்மில்தான் பென்ட்லி கான்டினென்ட்டல் வகை கார்கள் உருவாக்கப்படுகின்றன. தலைமை செயல் இயக்குனர் மார்ட்டின் வின்ட்டர்கார்ன்-க்கு இருக்கும் ஆதரவைப் பார்த்ததும், Piech-க்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அவராகவே விலகிவிட்டாலும்கூட, 'வெளியே அனுப்பிவிட்டார்கள்' என்றுதான் ஜெர்மனியில் பேசிக் கொள்கிறார்கள்.

டொயோட்டா குழுமத்தை ஃபோக்ஸ்வாகன் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. காரணம் டொயொட்டா வைவிட குறைந்த லாபத்தில், அதிக செலவில்தான் ஒரு காரை விற்பனை செய்கிறது ஃபோக்ஸ்வாகன். ஒரு காரை 540 யூரோக்கள் லாபத்துக்கு விற்பனை செய்கிறது ஃபோக்ஸ்வாகன், டொயோட்டாவோ 1,647 யூரோக்கள் ஒரு காரில் லாபம் பார்க்கிறது. கடந்த வருடம் 10.14 மில்லியன் கார்களை உலகம் முழுக்க விற்பனை செய்தது ஃபோக்ஸ்வாகன், டொயோட்டா 10.23 மில்லியன் கார்களை விற்பனை செய்தது.

இங்குதான் ஒரு ட்விஸ்ட்.. 10.13 மில்லியன் கார்களை உருவாக்கி, தயாரித்து, விற்பனை செய்ய ஃபோக்ஸ் வாகன் குழுமத்தில் 5,93,000 பேர் வேலை செய்கிறார்கள். டொயோட்டா 3,44,000 பேருடனே அதிக கார்களை விற்பனை செய்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் மார்ட்டின் வின்ட்டர்கார்ன்-ம் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகி, சூப்பர்வைசரி போர்டுக்கு சென்றுவிடுவார். எனவே, ஃபோக்ஸ் வாகன் குழுமத்தின் எதிர்காலம் கவனிக்கப்படவேண்டியது.

ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் போல், மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் போல் ஒரு நிறுவனத்தின் அனைத்து அம்சங்களிலும் தன்னுடையை முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார் Piech. ஆட்டோமொபைல் உலகை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்சென்ற மனிதர்களில் ஒருவர் Ferdinand Piech.

இன்ஜினியராக, ஒரு கார் ஆர்வலராக Ferdinand Piech-ன் சாதனை அளப்பரியது.

குட்பை Hon.-Prof. Dr. techn. h. c. Dipl.-Ing. ETH Ferdinand K. Piëch

- ர.ராஜா ராமமூர்த்தி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்