Published:Updated:

பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம்!

Vikatan Correspondent
பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம்!
பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம்!
பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம்!

புதுடெல்லி: பொய் வழக்கு போடுவதை தடுக்க, வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரதட்சணை கொடுமைக்காக பெண்ணின் புகாரின் பேரில் கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட கணவர் குடும்பத்தினர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498-ஏ யின்படி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த சட்டப்பிரிவு, வழக்கு பதிவு செய்தவுடன் புகாருக்கு ஆளான நபரை கைது செய்ய வழி வகுத்துள்ளது. மேலும், இது உடனடியாக ஜாமீனில் விட முடியாத குற்றம். அது மட்டுமின்றி, இந்த வழக்குகளில் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொள்ள முடியாது. 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

ஆனால், குடும்பப் பிரச்னைகள், தகராறுகள் காரணமாக இந்த சட்டம் பெண்களால் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேசிய குற்ற ஆவண அமைப்பு புள்ளிவிவரப்படி, இந்த சட்டப்பிரிவின்படி 2011 ஆம் ஆண்டு 99 ஆயிரத்து 135 வழக்குகளும், 2012 ஆம் ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரத்து 527 வழக்குகளும், 2013 ஆம் ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரத்து 866 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

போலீசார் நடத்திய விசாரணைக்கு பின் இவற்றில், 2011 ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 193 வழக்குகளும், 2012 ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 235 வழக்குகளும், 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 864 வழக்குகளும் பொய் வழக்குகள் என தெரிய வந்திருக்கிறது. அதனால், இப்படி பொய் வழக்குகள் போடுவதை தடுக்கும் வகையில், இந்த சட்ட பிரிவில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

அதாவது, சட்ட கமிஷன், நீதிபதி மாலிமத் கமிட்டி பரிந்துரைகளின்படி, இந்த சட்டப்பிரிவின் கீழான வழக்குகள், நீதிமன்ற அனுமதியுடன் சமரசம் செய்து கொள்ளத்தக்க வழக்குகளாக மாற்றப்படும். தற்போதைய சட்டவிதிகளின்படி, வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் போட்ட வழக்கு, பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டால் வழக்கு போட்டவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும். இந்த அபராத தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படுகிறபோது, அபராதம் செலுத்தினால் சிறைத்தண்டனையில் இருந்து தப்பும் வகையிலும் இந்த சட்டத்தில் ஒரு பிரிவை சேர்க்க பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.