Published:Updated:

சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கொதித்த சதானந்த கவுடா!

Vikatan Correspondent
சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கொதித்த சதானந்த கவுடா!
சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கொதித்த சதானந்த கவுடா!
சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கொதித்த சதானந்த கவுடா!

பெங்களூரு: பா.ஜ.க. பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதற்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறி உள்ளார்.

தாவணகெரே மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தில் அடுத்து நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், பா.ஜ.க. இல்லாத மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும் என்றும் பேசினார்.

முதல்வர் சித்தராமையாவின் பேச்சுக்கு கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெங்களூருவில் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காங்கிரஸ் அரசின் சாதனை விழாவில் முதல்வர் சித்தராமையா, அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பேசி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கர்நாடகத்தை பா.ஜ.க. இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று கூறி இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஹாவேரி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. முதல்வர் சித்தராமையா மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதை விட்டு விட்டு, தேவையில்லாமல் பா.ஜ.க.வை அழிக்க போவதாக பேசியுள்ளார். சித்தராமையாவின் கனவு ஒருபோதும் பலிக்காது" என்றார்.