Published:Updated:

இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?

Vikatan Correspondent
இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?
இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?
இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?

'பார்க், பீச், ரயில், பஸ், திரையரங்கு... எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை, அதிக அளவில் புகை இல்லை. சிகரெட் பிடித்து முடித்ததும் சட்டைப் பையில் போட்டு எடுத்தும் செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதகம் ஏற்படுத்தாத சிகரெட்!’

 - இ-சிகரெட் நிறுவனங்களின் ஈர்ப்பு அழைப்பு இது.

அது என்ன இ-சிகரெட்? 'புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை  பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்’ என்கிறார்கள்.

உண்மையிலேயே புகை பிடிக்கும் பழக்கத்துக்கு நல்லதொரு மாற்றுதானா இ-சிகரெட்? இதனால் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியுமா? இவர்கள் சொல்வதுபோல இதனால் உடல் நலத்துக்கு எந்தத் தீங்கும் இல்லையா?

இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?

''பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இதன் உள்ளே நிகோடின் மற்றும் புரோபைலீன் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட கார்டேஜ், அதைச் சூடுபடுத்தும் சிறிய கருவி மற்றும் பேட்டரி ஆகியவை இருக்கும்.

சிகரெட் பிடிக்க நினைக்கும்போது இதை வாயில் வைத்து உறிந்தால், அதில் இருந்து வெளிப்படும் விசையால் பேட்டரி இயங்கத் தொடங்கும். அப்போது நிகோடின் சூடேற்றப்படும். உடனே நிகோடின் புகையாக மாறும். உண்மையான சிகரெட் பிடிக்கும்போது நிகோடின் உடன் தார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நச்சுப் பொருட்களும் உடலுக்குள் செல்லும். ஆனால், இ-சிகரெட் பிடிக்கும்போது நிகோடின் மட்டுமே உடலினுள் செல்கிறது. இ-சிகரெட் பாட்டரியை நாம் அவ்வப்போது ரீ சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

உண்மையான சிகரெட்போல இதைப் பற்றவைக்கவும் தேவை இல்லை. இ-சிகரெட்டின் முன்பக்கத்தில் உள்ள சிறிய சிவப்பு விளக்கு, சிகரெட்டின் நெருப்புத் தணல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்''  என்று இ-சிகரெட்டை புகைத்துக் காட்டினார்கள் சிலர்.

சென்னையில் இ-சிகரெட் விற்பனை செய்யும் மெடிவேர்ல்ட் நிறுவனத்தின் மேலாளர் சம்பத்குமாரிடம் பேசினோம். ''இங்கே விற்பனை செய்யப்படும் இ-சிகரெட்டுகள் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. புகையிலையினால் தயாரான சிகரெட்டைப் புகைப்பதன் மூலம் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் ஒரே சமயத்தில் உடலுக்குள் செல்கின்றன. அதில் நிகோடினும் ஒன்று. இந்த இ-சிகரெட்டில் புகை பிடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளது. இ-சிகரெட்டைப் பிடிக்கும்போது அதில் இருந்து நிகோடின் புகை கிளம்பும். புகைப்பவர் அதை உள் இழுப்பார். இதனால், புகை பிடித்தது போன்ற திருப்தி ஏற்படும். இந்த நிகோடின் புகை மிக வேகமாகக் கரைந்துவிடும். இதனால், அருகில் இருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?

ஆனால், இதைப் புகைப்பவர்களுக்கு முற்றிலும் பாதிப்பு இல்லை என்று கூற முடியாது. சாதாரண சிகரெட் புகைப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளைவிடவும் இ-சிகரெட்டில் பாதிப்புக் குறைவு என்று கூறலாம். புகையிலையால் தயாரான சிகரெட்டைப் புகைப்பதை வழக்கமாக வைத்திருந்த பலரும் இ-சிகரெட் புகைக்க ஆரம்பித்த பிறகு, புகையிலை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டனர்.' என்கிறார்.

புகையிலையால் ஆன சிகரெட்டைவிடப் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இதில் குறைவாக உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் இ-சிகரெட் தீங்கற்றது என்று கூறிவிட முடியாது.

சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புகையிலைத் தடுப்புப் பிரிவுத் தலைவர் டாக்டர் விதுபாலா இதுகுறித்து விளக்கமாகப் பேசினார்.

''இ-சிகரெட் புகைப்பவர்களுக்கும் அவர்கள் அருகில் இருப்பவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதைப்போல விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், இது முற்றிலும் தவறான தகவல். இ-சிகரெட்குறித்து வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதைப் பயன்படுத்துபவர்கள் தொண்டை வறண்டு, முச்சுவிடுவதற்கே சிரமப்படுவதை உறுதிசெய்து இருக்கிறார்கள். இ-சிகரெட்டில் இருந்து வெளிவரும் புரோபைலீன் கிளைக்கால் புகையால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஸ்வீடன்

இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஒரே நேரத்தில் 30 மி.கி. முதல் 60 மி.கி. அளவிலான நிகோடினை ஒருவர் எடுத்துக்கொண்டால், உடனடியாக மரணம் ஏற்படும். இ-சிகரெட்டில் 16 மில்லி கிராம் வரை நிகோடின் உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரெட்டை ஒருவர் ஒரே சமயத்தில் புகைத்தால் உடனடியாக அது உயிருக்கே உலை வைத்துவிடக்கூடும்.'' என்று எச்சரித்தவர், ''எந்த வகையிலும் இ-சிகரெட் புற்றுநோய் வருவதைத் தடுக்காது'' என்கிறார் உறுதியாக.

புகை பிடிப்பதற்கு எதிராக நுகர்வோர் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவரும் சமூக ஆர்வலர் நாராயணன் இதுகுறித்துப் பேசும்போது, ''இ-சிகரெட் குடித்து ஒருவர் சிகரெட் குடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டார் என்பதற்கான எந்தவித அறிவியல் ஆதாரமோ, மருத்துவப் புள்ளிவிவரங்களோ இல்லை. இருக்கிற ஒரு போதைப்பொருளுக்கு மாற்றாக இன்னொரு போதைப்பொருள்; அவ்வளவுதான். ஒரு புதிய சந்தையைத்தான் இ-சிகரெட் உருவாக்குகிறதே தவிர, சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு எந்தத் தீர்வையும் கொடுக்காது. இதை விற்பனை செய்யவும் எந்தவித அங்கீகாரமும் இதுவரை யாருக்கும் அளிக்கப்படவில்லை. இதன் தரத்தைப் பற்றியோ, இதில் அடங்கி உள்ள பொருட்களைப் பற்றியோ அமெரிக்காவின் 'எப்.டி.ஏ.’, உலகச் சுகாதார நிறுவனம் போன்ற எந்த ஒரு மருத்துவ அமைப்பும் எந்தச் சான்றிதழும் வழங்கவில்லை. அதனால், புகைப் பழக்கத்தை விடுவதற்கு இ-சிகரெட் என்பது தேவை இல்லாத ஒன்று. மனக் கட்டுப்பாடும் மருத்துவரின் ஆலோசனையும்தான் நிரந்தரத் தீர்வு'' என்கிறார் ஆணித்தரமாக.

கத்தி போய் வாள் வந்த கதையாக இ-சிகரெட் ஆகுமா தெரியாது. ஆனால், நிச்சயமாக, இ-சிகரெட் என்பது நமது உடல் நலத்துக்கு மேலும் ஒரு கத்தியாக மாறிவிடக் கூடாது.

இ-சிகரெட் மாற்றா...ஏமாற்றா?