Published:Updated:

மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!

மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!
மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!

மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!

ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டு தோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடந்து வந்தது. இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குன்ற தொடங்கியது.

இதன் விளைவாக கடல் வாழ் உயிரினங்களின் உருவாக்கம் குறைந்து போனது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்வளம் அறவே அழிந்து போகும் நிலை உருவாகும் என ஆராய்சியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதனை தடுக்க மீன் உற்பத்தி காலங்களில் கரையில் இருந்து மூன்று கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க செல்லுவதற்கு தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!

இதையடுத்து தமிழக அரசு கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தது. இதன்படி பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான 1,076 மைல் தூர கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என அறிவித்தது. இந்த காலங்களில் கரையிலிருந்து 3 கடல்மைல் தூரத்திற்கு அப்பால் மீன்பிடிப்பில் ஈடுபடும் இழுவை படகுகள், மற்றும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல கூடாது.

இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6,700 விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளில் மட்டும் 1,850 விசைப்படகுகள் மீன்பிடி தடை துவங்கியதால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காலங்களில் மீனவர்களுக்கு உதவி தொகையாக ரூ.4 ஆயிரம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடை காலம் முடிவு: கடலுக்கு சென்றனர் தமிழக மீனவர்கள்!

இந்நிலையில், மீன்பிடி தடை காலத்தை 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. மத்திய அரசின் இந்த முடிவினை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கவில்லை. இதனால், கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவுடன் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் தவிர மற்ற மாவட்ட மீனவர்கள் அன்று இரவே மீன்பிடிக்க சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 4 நாட்களும், விசைப்படகு மீனவர்களுக்கு 3 தினங்களும் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தடை காலம் முடிவுக்கு வந்த 29 ஆம் தேதி மீன்பிடிக்க ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களால் செல்ல முடியவில்லை. தடைகாலத்தில் தங்களது படகுகள், வலைகளை பழுது நீக்கி தயாராக இருந்த மீனவர்கள் இன்று காலை உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்றனர்.

பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், சிறைபிடித்து செல்லப்படுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்னைக்கு இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 45 நாட்கள் தடை முடிந்து மகிழ்சியாக மீன்பிடிக்க செல்லும் மீன்வர்கள் மத்தியில், இலங்கை கடற்படையினரால் பிரச்னைகள் ஏற்படுமோ என்ற அச்சமும் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறது.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

அடுத்த கட்டுரைக்கு