Published:Updated:

ஜெயேந்திரரால் உயிருக்கு ஆபத்து: முதல்வருக்கு அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு!

ஜெயேந்திரரால் உயிருக்கு ஆபத்து: முதல்வருக்கு அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு!
ஜெயேந்திரரால் உயிருக்கு ஆபத்து: முதல்வருக்கு அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு!

ஜெயேந்திரரால் உயிருக்கு ஆபத்து: முதல்வருக்கு அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு!

ஜெயேந்திரரால் உயிருக்கு ஆபத்து: முதல்வருக்கு அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு!

சென்னை: உண்மையை சொல்ல முயற்சித்தால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைச்சிப்புடுவேன். சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் ஏற்படும் என்று ஜெயேந்திரர்  மிரட்டுகிறார் என முதலமைச்சருக்கு அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு அனுப்பி உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலம் ஆகிய இடங்களுக்கு ரவிசுப்பிரமணியம் கொடுத்துள்ள மனுவில், ''காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் 26.12.04 அன்று நான் கைது செய்யப்பட்டேன். இரு வழக்கிலும் நான் அப்ரூவராக (குற்றத்தை ஒப்புக் கொண்டு அரசுத் தரப்புக்கு சாதகமாக சாட்சி அளிக்கும் நபர்) மாறினேன்.

நான் அப்ரூவராக வாக்குமூலம் அளித்ததால் அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் அந்த வழக்குகளில் தொடர்புடைய அனைவருக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் அனைவரும் தண்டனைக்கு உள்ளாகும் நிலையும் எழுந்தது. எனவே, எனது மற்றும் எனது குடும்பத்தாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு உணர்ந்து, என்னை உரிய பாதுகாப்புடன் ஜெயிலில் வைத்திருந்தது.

ஆனால், சிறைத்துறையின் அப்போதைய அதிகாரி ராமச்சந்திரனின் (சிறைத்துறையின் முன்னாள் டி.ஐ.ஜி.) மூலமாக அப்பு, கதிரவன் (இரண்டு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்) ஆகியோர் என்னை மிரட்டினர். அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டு வந்தனர். அவர்களின் மிரட்டலால் நான் பிறழ் சாட்சியாக மாறிவிட்டேன். மேலும், பல்வேறு உத்திகளைக் கையாண்டு பணபலம் மற்றும் ரவுடி அரசியல் துணையோடு சாட்சியங்களையும், நீதியையும் விலைக்கு வாங்கியதன் மூலம், சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை ஆனார்கள்.

இந்த உண்மையை சி.பி.சி.ஐ.டி. (ஆடிட்டர் வழக்கின் விசாரணை முகமை) மூலமாக நான் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த எனக்கு ராதாகிருஷ்ணன் வழக்கில் 18.12.13 அன்று உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்தது. நான் வெளியே வந்த பிறகும் ஜெயேந்திரரின் உத்தரவின் பேரில் அப்பு என்னை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது அப்புவும், கதிரவனும் இறந்துவிட்டனர். எனவே நான் சற்று சுதந்திரமாக இருக்கிறேன்.

ஆனாலும், பிறழ் சாட்சி சொல்லி உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விட்ட எனது செயலை, எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இரவும் பகலும் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஆதலால் நான் வெகுவாக மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் 8.6.15 அன்று நீதிமன்றத்தில் சந்தித்து, நடந்த உண்மைகளையெல்லாம் கூறுவதற்கான ஆலோசனையைக் கேட்டேன். அதற்கான மனுவையும் அவரிடம் சமர்ப்பித்தேன்.

இதை ஜெயேந்திரரின் வழக்கறிஞர்களும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சிமடத்தைச் சேர்ந்த சுந்தரேசய்யரும் பார்த்தனர். சிறிது நேரத்தில் சுந்தரேசய்யர் என்னை தனியாக அழைத்தார். ‘‘பெரியவா இன்றைக்கு வரச்சொன்னார். சாயங்காலம் வந்துவிட்டுப் போ’’ என்றார். மாலையில் ஜெயேந்திரரை சந்தித்தேன். அப்போது, ஜெயேந்திரர் என்னிடம், “என்ன மறுபடியும் எனக்கெதிராக சாட்சி சொல்லப்போகிறாயா? உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைச்சிப்புடுவேன். சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்’’ என்று மிரட்டினார்.

அங்கிருந்த சுந்தரேசய்யர் என்னைப் பார்த்து, “நீ பெரியவாவை பகைச்சிண்டேன்னா இந்தியாவின் எந்த மூலையிலும் உயிரோடு வாழ முடியாது. மத்திய அரசுக்கே ஆலோசகராக அவர் இருப்பது உனக்குத் தெரியாதா?’’ என எச்சரித்தார். காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றும் கண்ணன் என்ற மடத்துக் கண்ணன் சிறிது நேரத்தில் வந்தார். ‘‘பெரியவாளுக்கு எதிராக ஏதாவது செய்தால் நீ காணாமல் போயிடுவாய். சிறையில் டி.ஐ.ஜி.யாக இருந்ததால் ராமச்சந்திரனுக்கு மாநிலத்தில் உள்ள அத்தனை ரவுடிகளும் தெரியும். பக்குவமா நடந்துகொள்’’ என்று எச்சரித்தார்.

இந்த வழக்குக்காக பெரியவாவுக்கு வேலூர் சிறையில் ராமச்சந்திரன் செய்த உதவிகளை கண்ணன் மேற்கோள் காட்டினார். ராமச்சந்திரன் தற்போது காஞ்சி மடத்தின் பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர முடிகிறது. என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்றுகூட இவர்களால் தள்ளப்படுகிறேன். எனவே, ஜெயேந்திரர் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயேந்திரர், ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் முக்கிய காரணம் என்பதையும் அதற்கு சுந்தரேசய்யர் தொடர்புடையவர் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

முக்கிய சாட்சியான என்னை கலைத்ததோடு இல்லாமல் பல சாட்சிகளை இவர்கள் கலைத்துள்ளனர். ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் மீதமுள்ள சாட்சிகளையும் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு சம்பந்தமான பல சாட்சிகள், தடயங்களை அழித்து, மீதியை அழிக்க முயற்சித்து வருகிற ஜெயேந்திரர், சுந்தரேசய்யர் ஆகியோருக்கு வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்கு தொடர்புடைய சிலர் என்னை பின்தொடர்ந்து கண்காணிக்கின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு