வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (22/07/2015)

கடைசி தொடர்பு:12:36 (23/07/2015)

அழகு குறையாத பாரம்பரியம் மாறாத செட்டிநாடு வீடுகள்

கரமயமாக்கல் அதிகபட்சமாக என்னசெய்யும், பழைமையை வேரறுக்கும். இளைய சமுதாயத்தினர் மூளையில் பாராம்பரியத்தை மழுங்கடிக்கும். பழையவர்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல், பணத்திற்காக ஊர் சுற்றித்திரியவைத்திருக்கும். அப்படித்தான் புராதனத்தை பறைசாற்றும் பல செட்டிநாட்டு வீடுகள் இன்று அழிக்கப்பட்டு, நவீன வீடுகளாகவோ, கல்யாண மஹால்களாகவோ, தியேட்டர்களாகவோ மாற்றப்பட்டு வருகின்றன அல்லது பூட்டிய நிலையில்கண்டுகொள்ளப்படாமா லேயே, புதர்மண்டிக்கிடக்கும் அவலநிலைக்குத்தள்ளப்படுகின்றன.

காரைக்குடியில் இருந்து 18 கி.மீ தொலைவில் சற்று உள்வாங்கினாற்போல் இருக்கிறது தேவகோட்டை. பெயரைப் போல பல, செட்டிநாட்டு கோட்டை வீடுகளை தன்னகத்தே கொண்ட அற்புத ஊர் இது.

"வயசானலும் உன் ஸ்டைலும் ,அழகும் அப்படியே இருக்கு" என்று ரம்யா கிருஷ்ணன், ரஜினியைப் பார்த்து கூறுவது படையப்பா  படத்திற்கு மட்டுமல்ல, இந்த செட்டிநாட்டு வீடுகளுக்கும் பொருந்தும். அத்தனை கலைநயம், பாரம்பரிய அமைப்புடன் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கின்றன.

செட்டி நாட்டு வீடுகளின் அத்தகைய  பராம்பரியத்தை இன்னும் விட்டுக்கொடுக்காது, தங்கள் முன்னோர்கள் கட்டிய வீட்டினை, பேணிப் பாதுகாத்து வரும் வெகுசிலரைச் சந்தித்தோம்.

தேவகோட்டையில் செட்டிநாட்டு வீட்டில் வசித்துவரும் மீனாட்சி ஆச்சி, "எனக்கு வயசு 80 ஆகுது. நான் பிறந்து வளர்ந்தது, படிச்சது எல்லாம் தேவகோட்டையில்தான். என்னை கட்டிக்கொடுத்ததும் தேவகோட்டையில் தான். அப்போதெல்லாம் தேவகோட்டையில் 3000-த்துக்கும் மேற்பட்ட நகரத்தார் மக்கள் வாழ்ந்து வந்தாங்க. அப்ப, ஊர்ல விசேஷம்னா ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

கல்யாணம் நடந்ததுனா, பூர்விக வீட்டில்தான் நடக்கும். அதுவும் 10 நாள் நடக்கும். எப்படியும் ஒரு வீட்டுல குறைவில்லாம பேரன், பேத்தி மற்ற உறவினருங்கன்னு 200 பேர் இருப்பாங்க. அதுக்காகவே, எங்க செட்டி நாட்டு வீடுகள்ல கல்யாணம் வைக்க ஒரு முற்றம், பந்தி பரிமாற ஒரு பெரியஹால், சமையல் கட்டுனு எல்லாமே விசாலமா இருக்கும். இங்க பெண்ணுக்கு குறைஞ்சபட்சம் 11 பவுன்ல தாலி செயின் செய்வாங்க.

மேலும் படங்களுங்கு

பெண்களுக்கு வைர நகைகள் அதிகமாகப்போடுவாங்க. மாப்பிள்ளை அழைப்பு குதிரையில் நடக்கும் .மாப்பிள்ளை தலைக்குட்டை எனும் டர்பன் போட்டிருப்பாரு. அதுமட்டுமில்ல கல்யாணம் நடக்கிற பத்துநாளும் விருந்தாளிகளுக்கு வெள்ளைப்பனியாரம், கும்மாயம், கவினி அரிசி பனியாரம், உட்காரை, பச்சை தேன் குழல்னு வித்தியாசமான செட்டிநாட்டு பலகாரங்கள் பரிமாறப்படும்.

விழாவுக்கு உறவினர்கள் மத்தியில் இன்னும் மகிழ்ச்சியை வலுசேர்க்கும். சொந்தக்காரங்க வீட்டுல ஒரு வீடு முடிஞ்சு, மற்றொரு வீட்டுல ஏதாவது விசேசம் நடந்துட்டே இருக்கும். எனக்கு ஒரு அண்ணா, 2 தம்பி, ஒரு தங்கையும் இருந்தாங்க. அது மட்டுமில்லாம எங்க வீட்டுல கூட்டுக்குடும்பம் வேற. என்னைக்கட்டிக்கொடுத்த குடும்பமும் பெரிய குடும்பம். இப்படி நாங்க கலகலப்பா, வாழ்ந்த வீட்டுல இருக்கிறதுல இருக்கிற மகிழ்ச்சியே தனி." என்றார் குரலில் பெருமிதம் வழிய.

ஜெயம்கொண்டவிலாஸைச் சேர்ந்த உ.ராம.உ.மு.அ.லெ.சிங்காரம் என்பவர், " நாங்க வசிக்கிற இந்த வீட்டைக்கட்டினது எங்களோட ஆச்சி அலமேலு. எங்க தாத்தா அண்ணாமலை இறந்ததுக்கப்பின்ன, ஒத்த பொம்பளையா நின்னு ஜெயம்கொண்ட விலாஸைக் கட்டிமுடிச்சாங்க. எனக்கு இப்போ, 72 வயசாகுது, அப்போ, இது எவ்வளவு பாரம்பரியமான வீடுன்னுப்பாருங்க. என் கூடப்பிறந்தது 6 பேரு. கூட எங்க பெரியப்பா, சித்தப்பா வீட்டு பிள்ளைகள் வேற இருப்பாங்க. எங்களைப்பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போய்விடறதுக்கு என்றே, ஒரு குதிரை வண்டி இருந்தது எங்க வீட்டில். அந்த அனுபவம் சுகமானது.

மேலும் படங்களுங்கு

அப்போதெல்லாம் கார்ப்பரேசன் தண்ணீர் எல்லாம் அப்போ, இல்ல, வீட்டுல "கிடாரம்னு" பெரிய அண்டா இருக்கும். அத எடுத்துக்கிட்டுப் போய், பக்கத்து ஊரான வாழ்றமாணிக்கத்துல இருக்கிற  கிணத்தில இருந்து தண்ணீர் பிடிச்சுக்கிட்டு வந்து வைப்பாங்க. மழைக்காலத்தில் அந்த "கிடாரத்துல"மழைத்தண்ணியப்பிடிச்சு வைச்சுக்கிருவோம். ஒரு வாரத்துக்கு அந்த தண்ணீர், தித்திப்பா நெஞ்சில நிற்கும்.

அந்தக் காலத்திலேயே மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை இங்குள்ள வீடுகள்ல பின்பற்றியிருக்கிறோம். வீடு
முற்றத்துல விழும் தண்ணியெல்லாம் எங்க வீட்டுக்கிணத்துக்குப்போயிடுற மாதிரி அமைப்பு அப்பயே எங்கவீட்டுல இருந்துச்சு. எங்கவம்சாவழியினர் எல்லாருக்கும் கல்யாணம்,பேருகாலம், நல்லது கெட்டதுனு எல்லாம் இங்கதான் நடக்கும். வருஷத்துக்கு ஒரு நாள் முன்னோர்களுக்கு "படைப்பு" நடக்கும். அப்ப, எங்க வம்சாவழியினர் எந்த நாட்டுல இருந்தாலும் தவறாம இங்க ஆஜாராகிடுவாங்க. அன்னைக்கு ஒரு
நாள் வீடே ஜெகஜோதியா இருக்கும்" என்றவர், அந்த ஆறு இன்ஷியலை மறக்காம போட்டுடுங்க, (போட்டாச்சுங்க!) எங்க முன்னோர்கள் எங்களுக்கு ரொம்ப முக்கியமானவங்க " என முடித்தார்.

திருப்பூரில் புத்தகநிலையம் நடத்திவருபவரும் தேவகோட்டையில் வசிப்பவருமான வைரவன் கூறும்போது, "அந்தக்காலத்தில் செட்டிநாட்டு வீடுகள்ல பிறந்த மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளை "புதுமை"  விழா நடத்தி, வெளி உலகத்துக்கு தெரியப்படுத்துவோம். அதாவது ஒரு மரத்தாலான பெரிய தாம்பூலம் ஒன்றில் குழந்தைகள் உட்கார வச்சு, அதை தாய்மாமன் சுத்துவாங்க. இதன்மூலம் இங்கு பிறந்த 'புது வாரிசு"களை ஊர் தெரிஞ்சுக்கிடும்.

அதே மாதிரி 8 வயசு ஆன ஆண் வாரிசுகளை திருக்கார்த்திகை அன்று, தலைக்குட்டை எல்லாம் வச்சு குதிரையில் நகர்வலம் அழைச்சுட்டுப் போவாங்க. அதோபோல் மார்கழி-திருவாதிரையன்று, 10 வயசுக்குள் இருக்கிற பெண் வாரிசுகளை மணப்பெண் போல அலங்கரிச்சு, காரில் ஊர்வலம் கூட்டிட்டு வருவாங்க. அந்த நடைமுறையெல்லாம் இப்போ, அறவே இல்லை. என்றார்.

இறுதியாக பேசிய விசாலாட்சி ஆச்சி," ஒரு வீட்டுக்கு எத்தனைப்பேரு உரிமை கொண்டாடுவாங்க. இங்க... 200-க்கும் மேற்பட்ட வாரிசுகள் உரிமை கொண்டாடுவாங்க. இது என் கொள்ளுத்தாத்தா கட்டின வீடு, இந்த தேவகோட்டையில் மேல இருக்கிற விட்டத்துல (சீலிங்), இவ்வளவு வேலைப்பாடாயிருக்கிற ஒரு சில வீடுகள்ல இதுவும் ஒன்று. பர்மா தேக்கு, இத்தாலி டைல்ஸ், ஜெர்மனி மார்பிள்ஸ்னு இங்கயிருக்கிற ஒவ்வொன்றும் வெளிநாட்டுலயிருந்து இறக்குமதியானது.

இதன் வேலைப்பாடுகளைப் பார்க்கும் போது, எவ்வளவு திறமையாக வேலைசெய்யக்கூடிய ஆட்கள் இருந்திருக்காங்கன்னு ஒரே வியப்பா இருக்கும். எங்க வழக்கப்படி கல்யாணத்தின் போது மஞ்சள் கயிறுல தாலி கட்டமாட்டோம். "கழுத்துரு" வச்ச, 32 வகையான உருப்படிகள் ஒண்ணுசேர்ந்த "தாலி செயின்" போட்டுக்குவோம். இந்த வீட்டோட வாரிசுகள் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், பேங்காங், ரஷ்யா, கனடானு எல்லா நாடுகள்லயும் இருக்காங்க.

ஆனா, "படைப்புனு" சொல்ற ,எங்க கொள்ளுத் தாத்தாவுக்கு வணங்குற நாள்ல, எல்லாரும் மொத்தமா இங்க வந்து ஐக்கியமாயிடுவாங்க” என்றார் பழமையின் உணர்விலிருந்து மீளாதவராக.

மேலும் படங்களுங்கு

நாம் சென்ற ஊரிலிருந்த பெரும்பான்மையான பங்களாக்களில் வயதானவர்களை மட்டும் தான் பார்க்கமுடிந்தது. பழைமையைப்போற்றி பாதுகாப்பது நல்லதே. ஆனால், பழைமையை பழையவர்கள் தான் போற்றி பாதுகாக்கின்றனர் என்பதே நாம் பல இடங்களில் கண்ட உண்மை .

இனிவரும் காலங்களில் பழைமையை காக்க புதியவர்களும் முன்வந்தால் மட்டுமே, "பல பாரம்பரிய பண்பாட்டு அசைவுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்

- ம.மாரிமுத்து

படங்கள்: சே.சின்னத்துரை

(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்