Published:Updated:

யாகூப் மேமனை தூக்கில் போடாதீர்கள்: நடிகர் சல்மான்கான் டுவிட்!

Vikatan Correspondent
யாகூப் மேமனை தூக்கில் போடாதீர்கள்: நடிகர் சல்மான்கான் டுவிட்!
யாகூப் மேமனை தூக்கில் போடாதீர்கள்: நடிகர் சல்மான்கான் டுவிட்!

மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனை பிடித்து தூக்கில் போடுங்கள். அவரது சகோதரர் யாகூப் மேமனை தூக்கில் போடாதீர்கள் என பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 257 பேர் கொல்லப்பட்டதுடன், 713 பேர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூர தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியும், டைகர் மேமனின் சகோதரருமான யாகூப் மேமன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு சதி செய்தல், பண உதவி மற்றும் பல்வேறு வழிகளில் உதவியதாக யாகூப் மேமன் மீது கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை தடா நீதிமன்றம், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பின்னர் அது மும்பை உயர்நீதிமன்றத்தால் உறுதியும் செய்யப்பட்டது.  தண்டனையை எதிர்த்து யாகூப் மேமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

யாகூப் மேமனை தூக்கில் போடாதீர்கள்: நடிகர் சல்மான்கான் டுவிட்!

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும், மரண தண்டனையை மறு ஆய்வு செய்யுமாறும் கடந்த ஆண்டு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் யாகூப் மேமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், அவரது மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, யாகூப் மேமனின் மரண தண்டனை, 30–ந் தேதி அதிகாலையில் நிறைவேற்றப்படும் என மராட்டிய அரசு அறிவித்தது. அதன் பேரில் நாக்பூர் சிறையில் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக ரூ.22 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, யாகூப் மேமன், மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கருணை மனு தாக்கல் செய்தார். அத்துடன், தனக்கான சட்டப்பூர்வ நிவாரணங்கள் முடிந்து விட வில்லை என்பதால் தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கடந்த 23–ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதன்மீது நாளை (27–ந் தேதி) விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், யாகூப் மேமனை தூக்கிலிட வேண்டாம் என பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ''மும்பை வழக்கின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனை பிடித்து தூக்கில் போடுங்கள். அவருடைய சகோதரர் யாகூப் மேமனை தூக்கில் போடாதீர்கள்'' எனக் கூறியுள்ளார்.