Published:Updated:

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்!

Vikatan Correspondent
ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்!
ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்!
ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்!

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.   

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.

59 ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில், மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், ஹெலிகாப்டர் மூலம் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து பஞ்தர்னியை சென்றடைய 22 ஆயிரத்து 104 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.

மலைப்பாதை வழியாக பயணித்து, நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார்  3 லட்சத்து 33 ஆயிரத்து 507 யாத்ரீகர்கள், அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தைத்  தரிசித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு பெய்துவரும் பெருமழையினால் சுமார் 300 கிலோ மீட்டர் நீளமுள்ள ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேற்கொண்டு முன்னேறி செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்தப் பாதையை சீரமைக்கும் முயற்சியில் சாலைப் பணியாளர்களுடன் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சாலை சீரடையும்வரை ஜம்மு மலையடிவார முகாமில் இருந்து புறப்பட்டுச் செல்லும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.