Published:Updated:

உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பதற்றம்!

Vikatan Correspondent
உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பதற்றம்!
உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பதற்றம்!

புதுச்சேரி: துணைவேந்தரை மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்த மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்பது பேர் மயக்கமடைந்ததால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புதுவை மத்திய பல்கலையின் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை மாற்றவும், விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும் அங்கு படிக்கும் மாணவர்கள் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் பல்கலை வாயிலில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்காததாக மாணவர்கள் மீது 27 மற்றும் 31-ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் நடத்திய தடியடி தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதற்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி, 'யு.ஜி.சி.யில் இருந்து இருவர் கொண்ட குழு நாளை டெல்லியில் இருந்து வருகிறார்கள்' தகவலை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக உயர்கல்வித் துறை இயக்குநர் அமீத் சுக்லா, பல்கலைக்கழக மானியக் குழு இயக்குநர் கே.பி.சிங் ஆகியோர் வந்து பல்கலையில் விசாரணையைத் துவக்கினர். முதலில் பேராசியர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மயக்கம்: புதுச்சேரியில் பதற்றம்!

அப்போது துணைவேந்தரை உடனடியாக மாற்ற வேண்டும், விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என்றும் கேட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், துணைவேந்தரை எங்களால் நீக்க முடியாது என்றும், ஆனால், உங்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் தெரிவித்தனர். ஆனால், மாணவர்கள் அதை ஏற்க மறுத்ததோடு, அன்றைய தினமே பதினைந்து மாணவர்கள் சாகும் வரை உண்ணவிரதப் போராட்டத்தில் அமர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளும் பல்கலைக்கழகத்திற்கு விசாரணைக்கு வந்த மத்திய அரசின் விசாரணை அதிகாரிகள் குழுவினரிடம் பேராசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு புகார்களை அளித்தனர். பின்னர் இவை அனைத்தையும் மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதாக சொல்லி டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் தொடர் போரட்டம் இன்றோடு 11-வது நாட்களாக தொடர்கிறது. அதேபோல உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் போராட்டமும் மூன்று நாட்களாக தொடர்ந்தது. இந்நிலையில், இன்று உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் ஒன்பது பேர் மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் புதுச்சேரியில் மேலும் பதற்றம் அதிகமாகியுள்ளது.

ஜெ.முருகன்

படங்கள்: அ.குரூஸ்தனம்