Published:Updated:

69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Vikatan Correspondent
69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
69 ஆவது சுதந்திரதின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

சென்னை: இன்று 69 ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைக்கிறார். இதையொட்டி டெல்லியில்  7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடியேற்றுகிறார். 

டெல்லியில், ஒவ்வொரு 40 மீட்டருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பாதுகாப்பு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பாஜக  அலுவலகங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக,  நாடு முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீசார், துணை ராணுவ படையினர், உளவுத்துறையினர் என பல்வேறு பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து, 7 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கான கமாண்டோ படை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  சுதந்திர தின விழா நடைபெறும் இடத்தில் சுமார் 1400 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வழக்கம்போல் இந்தாண்டும் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால், அனைத்து மாநில போலீசாரும் உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.  அதன்படி கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக விமான நிலையங்கள் மற்றும் கடல் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிறநாடுகளிலிருந்து தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவலாம் என்பதால், கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து தமிழக போலீசாரும் கடலில் படகு மற்றும் கப்பல்கள் மூலம் 24 மணிநேரம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் உள்ள லாட்ஜ், மேன்சென்கள், முக்கிய திருமண மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதவிர வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து சென்னை வரும் பயணிகளின் உடமையையும் போலீசார் சோதனை செய்கின்றனர். ரயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் நடமாட்டம் கணக்காணிக்கப்படுகிறது. இதேபோல் சாதாரண பயணிகள் போல வலம் வந்தும் போலீசார் பாதுகாப்பு மேற்கொள்கின்றனர்.

இதேபோல் ரயில்நிலையங்கள் மற்றும் முக்கிய பஸ்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசாரும், சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.