'திருமணங்கள் போட்டோஷாப்பில் நிச்சயிக்கப்படுகின்றன!' | vikatan book won award!

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (22/09/2015)

கடைசி தொடர்பு:11:06 (23/09/2015)

'திருமணங்கள் போட்டோஷாப்பில் நிச்சயிக்கப்படுகின்றன!'

'காம்கேர்' கே.புவனேஸ்வரி எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட, போட்டோ ஷாப் என்ற புத்தகத்துக்கு 'பவித்ரம்' அமைப்பினரின் 2015 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த தொழில்நுட்பப் புத்தகம் என்ற விருது கிடைத்துள்ளது.

விருதை வழங்கிப் பேசிய தமிழக அரசு வேளாண் துறை இயக்குனர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்,  “ இந்தப் புத்தகம் இல்லை என்றால் இன்று ஒருவருக்கும் திருமணமே ஆகாது" என்றார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று  ஒரு நிமிடம் சபையில் கனத்த மவுனம். பின்னர் மவுனத்தை அவரே உடைத்தார்.

“ஆமாம். கருப்பா இருப்பவர்களை சிவப்பாகவும், பருக்கள் நிரம்பிய முகத்தை பளபளவென்றும் மாற்றும் மேஜிக் வேலைகளை எல்லாம் இந்த சாஃப்ட்வேரில்தான் செய்யமுடியும். என் நண்பர் ஒருவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது புகைப்படம் தேவைப்பட்டது. ஸ்டுடியோவுக்குச்  சென்றோம். சார், முகத்தில் இருக்கும் பருவை எல்லாம் எடுத்துடலாமா? என்றார். சரி எடுங்க என்றோம். கலரை கொஞ்சம் கூட்டிடலாமா என்றார். சரி செய்யுங்கள் என்றோம்.

இறுதியில் கிடைத்த புகைப்படத்தையும், நண்பரையும் மாறி மாறி பார்த்தேன். புகைப்படத்தில் ஆளே அசத்தலாய் இருந்தார். இதுபோல புகைப்படத்தில் மேஜிக் செய்துதான் இன்று பலருக்கு கல்யாணம் நடக்கிறது என்று தெரிந்து கொண்டேன். உண்மைதான். திருமணம் போட்டோஷாப்பால் நிச்சயிக்கப்படுகிறது. எனவே இந்தப் புத்தகத்தை அனைவரும் படியுங்கள்…" என்று பேசியபோது சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.

கேமிரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை, தூரிகையால் வரைந்த ஓவியங்களைப்போல மாற்ற, கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை, கலர் புகைப்படங்களாக மாற்ற, தழும்பு உள்ள முகத்தை பளபள முகமாக உருமாற்ற, கரையான் அரித்த புகைப்படங்களை சரிசெய்ய என அசத்தலான பல ஆச்சர்யங்களை இந்த சாப்ட்வேர் மூலம் அரங்கேற்றமுடியும்.

குரூப் புகைப்படத்தில் இருந்து ஒரு நபரின் இமேஜை மட்டும் தனியாக கட்செய்து எடுக்க, வெப்சைட்டுகளை வடிவமைக்க, அனிமேஷன்களை தயாரிக்க, 2-D  மற்றும் 3-D தொழில்நுட்பத்தில் ஆப்ஜெக்ட்டுகளை வெளிப்படுத்த, அழைப்பிதழ்களைத் தயாரிக்க, புத்தக அட்டைகள் மற்றும் சி.டி கவர்களை வடிவமைக்க, விளம்பரங்களை வடிவமைக்க திருமண ரிசப்ஷனில் எடுத்த மணமக்களின் புகைப்படப் பின்னணியை மாற்றி, அவர்கள் திருப்பதி கோயில் வாசலில் நின்று புகைப்படம் எடுத்ததைப் போல மாற்றி அமைக்கலாம்.

அதாவது, ஒரு பேக்கிரவுண்டில் எடுத்தப் புகைப்படங்களை வேறொரு பேக்கிரவுண்டில் வெளிப்படுத்த என்று ஏராளமான சுவாரஸ்யமான தொழில்நுட்பங்களை Step by Step ஆக பயன்படுத்தும் முறைகளை விளக்கப்படங்களுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மல்டிமீடியா படைப்பை விஷுவலாகப் பார்க்கும்போது கிடைக்கும் தெளிவு, இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிடைக்கும்.

காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட் என்ற ஐ.டி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ள இந்நூல் ஆசிரியர், கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக ஏராளமான சாஃப்ட்வேர் தயாரிப்புகள், புத்தகங்கள், அனிமேஷன் சிடிக்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். தொழில்நுட்பங்கள் தொடர்பான புத்தகங்களை எழுதிவரும் இவர் விகடன் வாயிலாக 11 புத்தகங்களை எழுதியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்