Published:Updated:

'விஷ்ணுபிரியாவின் காதலனாக என்னை சித்தரிக்க போலீசார் திட்டம்!'- மதுரை வழக்கறிஞர் குற்றச்சாட்டு

விகடன் விமர்சனக்குழு
'விஷ்ணுபிரியாவின் காதலனாக என்னை சித்தரிக்க போலீசார் திட்டம்!'- மதுரை  வழக்கறிஞர் குற்றச்சாட்டு
'விஷ்ணுபிரியாவின் காதலனாக என்னை சித்தரிக்க போலீசார் திட்டம்!'- மதுரை வழக்கறிஞர் குற்றச்சாட்டு

டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததால், தன்னை அவரது காதலனாக சிக்க வைக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிடுவதாக மதுரை ஹைகோர்ட்  வழக்கறிஞர் மாளவியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

'விஷ்ணுபிரியாவின் காதலனாக என்னை சித்தரிக்க போலீசார் திட்டம்!'- மதுரை  வழக்கறிஞர் குற்றச்சாட்டு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். விஷ்ணுபிரியாவின் செல்போன் ஆய்வில்,  வழக்கறிஞர் மாளவியா அதிக நேரம் பேசியது கண்டறியப்பட்டது.
 

எனவே  இந்த வழக்கில் 17வது சாட்சியாக மாளவியா சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர் மாளவியா கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணமாகி விவகாரத்து பெற்றவர். நேற்று சேலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மாளவியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பின்  பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மாளவியா, '' சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விஷ்ணுபிரியாவுடன் தொடர்ந்து பேசியது குறித்து கேள்விகள் கேட்டனர். 200க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறினேன். நான் அரசு வக்கீலிடம் ஜுனியராக பணியாற்றுவதால் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் என்னிடம் சட்டஆலோசனைகள் கேட்பது வழக்கம்.

அதேபோல் விஷ்ணுபிரியாவுக்கும் நான் ஆலோசனை அளித்துள்ளேன். இதுவரை ஒரு முறைகூட இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. கோகுல்ராஜ் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் பற்றிய புத்தகம் வாங்கி அனுப்புமாறு என்னிடம் கேட்டார். நான் வாங்கி அனுப்பினேன். அந்த புத்தகத்தின் விலை ரூ. 210 ஆகும். அதற்காக அவர் எனது செல்போனுக்கு ரூ.300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தார். இந்த வழக்கில் அதிகாரிகாரிகள் தனக்கு நெருக்கடி அளிப்பதாகவும் அவர் என்னிடம் கூறியிருந்தார். இதனையும் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் தெரிவித்தேன்.

அப்போது, 'விஷ்ணுபிரியா உங்களிடம் பேசியது காதல் விவகாராத்தால்தான். அதை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்' என்று நிர்பந்தித்தனர். ஆனால் நான் மறுத்தாலும் அவர்கள் ஏற்கவில்லை. அவரது மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில்  என்னை அவரது காதலனாக சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்" என்றார்.

இது மட்டுமல்ல டி.எஸ்.பி விஷ்ணுபிரியா அர்ச்சகர் ஒருவருடன் 600 மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் பேசியதாகவும்  சில பத்திரிகைகளில் செய்தி வந்தது. இது குறித்து திருச்செங்கோட்டில் உள்ள பத்திரிகையாளர்களிடம் விசாரித்த போது போலீஸ் தரப்பில் இருந்துதான் இது போன்ற செய்திகளை கசிய விடுவதாக தெரிவித்துள்ளனர்.