Published:Updated:

கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!

Vikatan Correspondent
கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!
கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!

ம் நாட்டில் சிக்கல்களுக்கோ, ஒழுங்கின்மைக்கோ பஞ்சமேயில்லை. வீட்டிலிருந்து கிளம்பி, கடைக்குச் சென்று, ஒரு லிட்டர் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்குள் குறைந்தது பத்துத் தவறுகளையாவது நம்மால் சுட்டிக் காட்ட இயலும். அவற்றையெல்லாம் எண்ணி புலம்பிவிட்டு, ஆத்திரத்திற்குத் துணியைத் துவைப்பவர்களும், அந்நியன்.காம் தேடுபவர்களும்தான் நம்மில் அதிகம்.

தனி ஒருவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நிழலில் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நம் கண் முன்னால், சமூக அநீதிகளை சிறிது சிறிதாகக் குறிவைத்துச்

கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!

சுளுக்கெடுக்கும் நிஜமான ‘தனி ஒருவனாகக்’ காட்சியளிக்கிறார் மும்பையைச் சேர்ந்த கௌரங் தாமனி.

யார் இவர்?

1993-ம் ஆண்டு, மும்பைத் தொழில்நுட்பப்பல்கலைக்கழகத்தில் மின்னணுப் பொறியியல் பட்டம் பெற்ற, மும்பைவாசிதான் கௌரங். படிப்பில் படுசுட்டியான இவர், பட்டம் பெற்றவுடன் அமெரிக்காவிற்கு தன் பட்டத்தை பறக்கவிட்டார். 1994-ம் ஆண்டு தொடங்கி ஏழாண்டுகளுக்கு அமெரிக்காவில் வேலைபார்த்த கௌரங், தனக்கான களம் வேறு என்பதை புரிந்துகொண்டு, 2002 ல் தாய்நாட்டிற்கே வந்துசேர்ந்தார்.

விதை போட்ட வலைத்தளம்

இந்தியா வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக, diehardindian.com என்ற வலைத்தளத்தைத் தொடங்கினார் கௌரங். இந்த வலைத்தளத்தின் மூலம் சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரையும் ஒருங்கிணைத்து அவர்களின் குறைகளையும், அவர்கள் பகுதியில் அரசு கவனிக்காமல் விட்டுவைத்திருக்கின்ற சிக்கல்களையும் பற்றி தகவல் திரட்டத் தொடங்கினார். மேலும் இந்த குறைகளையெல்லாம் மனுக்களாக மாற்றி சட்டத்தின் முன்னால் சமர்ப்பித்து பல்வேறு தீர்வுகளைக் கண்டிருக்கிறார் கௌரங்.

சட்டத்தின் முன்...

*இந்தியக் காப்பீட்டு முறைசார் வாரியத்திற்கு எதிராக பொதுநல வழக்கொன்று தொடுத்து வெற்றி பெற்றுள்ளார் கௌரங். இதன்மூலம் ஏழு கோடி இந்தியர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டின் அடிப்படையில், ஆண்டொன்றுக்கு சுமார் 15,000 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை கிடைக்குமாறு செய்துள்ளார் இவர்.

கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!*2006 ல், மும்பைப் போக்குவரத்துக் காவல்துறைக்கெதிராக தொடுத்த பொதுநல வழக்கொன்றின் மூலம், மும்பை போக்குவரத்தில் வீண் நெரிசல் ஏற்படுத்திக்கொண்டிருந்த இழுரக வாகனங்களின் எண்ணிக்கையை 130 ல் இருந்து 65 ஆகக் குறைக்கச் செய்துள்ளார். அதற்கான இழப்பீட்டையும் கட்ட வைத்துள்ளார்.

*ஏறத்தாழ, 34 ஆண்டுகளாக, மும்பையின் சாந்தினி சௌக் பகுதியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்த, மாநகராட்சிக் குப்பைக் கொட்டடிகள் ஐம்பத்தைந்தினை, தன் பொதுநல வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அப்புறப்படுத்தியுள்ளார்.

*2008-ம் காவல்துறைத் தலைமை ஆணையருக்கெதிராகவே வழக்கொன்று தொடுத்து, முறைகேடாக, தன் பணிக் கால அளவை நீட்டித்த ஆணையரையும், அரசாங்கத்தையுமே அதிர வைத்துள்ளார்.

சமூகப் பணி

அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் கலந்துகொண்டதில் தொடங்கி, பல்வேறு களப்பணிகளைச் செய்து வருகிறார் கௌரங்.

கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!அண்மையில், மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் ரயில் நிலையத்தில் இவர் நிகழ்த்திக் காட்டிய, சாதனையின் மகத்துவம் அளப்பரியது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, முறைசாரா இலாபநோக்கற்ற ஓரமைப்பு, பொதுச் சொத்தொன்றைத் தத்தெடுத்துச் சுத்தம் செய்து கொடுத்தச் சாதனையை கௌரங் நிகழ்த்தியுள்ளார்.

யாருடைய உதவியையும் நாடாமல், தன்னார்வத்தோடு இணைந்த சில மாணவர்களின் துணையை மட்டும் கொண்டு, ஒரு வருடம் முழுவதும் உழைத்து, ஒரு  ரயில் நிலையத்தையே சுத்தமாக்கியுள்ளார் கௌரங்.

ரயில் நிலையச் சுவற்றிலெல்லாம் அழகான ஓவியங்கள் வரைந்தும், ஆங்காங்கு, குப்பைத்தொட்டிகள் வைத்தும், சிறுஞ்செடிகள் நட்டும் சேவை செய்திருக்கிறார் இவர்.

”சுத்தப்படுத்துவதைப் பார்த்தபின்பும் கூட மக்கள் அப்படியே குப்பைகளைப் போட்டு சென்றதுதான் மனதிற்கு வேதனையளைக்கிறது” என்கிறார் கௌரங்.

கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!

இதைத் தொடர்ந்து மும்பை மத்திய ரயில் நிலையத்தைக் குறி வைத்திருக்கும் கௌரங், சில சேரிகளையும் கூட மறுபுணரமைப்புச் செய்து கொடுத்திருக்கிறார் என்பது நம் வியப்பின் உச்சம்.

தற்போது இவரது வலைத்தளம், கிட்டத்தட்ட அந்நியன்.காம் போலவே ஆகிவிட்டது. சுமார் 3 லட்சம் இடுநர்களைக் கொண்ட இத்தளத்தில் இடப்படும் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுக்கொண்டே வருகின்றன.

“நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு” என்ற மகாத்மாவின் வரிகள் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கு கௌரங் தாமனி போன்றவர்கள் வாழும் சாட்சி.       

கௌரங் தாமனி - மாற்றம் தரும் மாமனிதர்!

-ச.அருண்