வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (24/11/2015)

கடைசி தொடர்பு:18:17 (24/11/2015)

வெளிநாட்டில் ஏன் மருத்துவம் பயிலக்கூடாது?

"வறுமை பின்னணியைக் கொண்ட  மாணவர்களுக்கும் வெளிநாட்டில் படிக்க, பணம் தடையில்லை. வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இலவசமாகப் படிக்கலாம். மேலும் படிக்கும் காலத்தில் அவர்களுக்கு உதவித்தொகையும் (ஸ்டைஃபண்ட்) வழங்கப்படும். ஆனால் மருத்துவப் படிப்பு இதற்கு விதிவிலக்கு. வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது பயனில்லை’’ என எச்சரிக்கிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.

இதுதொடர்பாக அவரை சந்தித்து பேசினோம்.

‘‘சீனா, இந்தியாவில் மட்டும்தான் இளம் மாணவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளம் மாணவர்களுக்கான சேர்க்கை இடங்கள் நிரம்பாமலேயே இருக்கின்றன. அந்த இடங்களை நுழைவுத்தேர்வு மூலம் நம் மாணவர்கள் வசப்படுத்திக்கொள்ளலாம். இலவசமாகப் படிக்கலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வித் தகுதியைப் பொறுத்து, (Scholastic Aptitude Test ) SAT - 1 மற்றும் SAT - 2  நுழைவுத் தேர்வுகளை எழுதலாம்.

இதில் SAT - 1 தேர்வை எழுதுவதற்கான தகுதி, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி போதும். கணிதம், கிரிடிக்கல் ரீடிங், ஆங்கிலக் கட்டுரை போன்றவை இந்த நுழைவுத் தேர்வின் வினாக்களாக இருக்கும். இதில் தேர்வானவர்கள்  SAT - 2 நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

காத்திருக்கும் வாய்ப்புகள்

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள் SAT - 2 நுழைவுத்தேர்வை எழுதலாம். தேர்வு செய்யும் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். அதாவது கணிதம், வேதியியல் என்று எந்த கோர்ஸில் சேர விரும்புகிறோமோ, அந்தத் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும்.  இதில் தேர்வானவர்கள் வெளிநாட்டில் ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணிதம், இசை, சட்டம் போன்ற  நாம் தேர்வு செய்யும் பட்டப்படிப்புகள் படிக்கலாம். இந்த இரண்டு தகுதி தேர்விலும் தேர்வாகும் மாணவர்கள்தான் வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடியும்.

SAT  தேர்வு வருடத்துக்கு சுமார் 7 முறை, அனைத்து மெட்ரோ நகரங்களிலும் நடைபெறும். இ.டி.எஸ் (Educational Testing Service) என்ற அமைப்பினர் இந்தத் தேர்வை நடத்துகிறார்கள்.  இந்த தேர்வு எழுத சுமார் 100 டாலர்கள் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள், இந்த இரண்டு நுழைவு தேர்வு எழுத கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, தேர்வை இலவசமாக எழுதலாம். இந்த தேர்வு எழுத, விண்ணப்ப விவரங்கள் மற்றும் மேலதிக தகவல்ககளை  ets.org என்ற தளத்தில் சென்று பார்க்கலாம்.

எங்கெல்லாம் படிக்கலாம்?

SAT  தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள், அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் பட்டு, வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நல்ல மெரிட் இருந்தால் முன்னணி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும்; அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், ஸ்காலர்ஷிப் கிடைக்காது. மேலும் அடுத்தடுத்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். தரமான பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கவில்லையென்றால் அங்கு சென்று கட்டணம் செலுத்தி படிக்கத் தேவையில்லை.

முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு...

* ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், டெல்லி AIIMS ( All India Institute of Medical Sciences) மற்றும் ஐ.ஐ.டி-கள்  என மூன்று நிறுவனங்களும் சேர்ந்து பயோ டிசைன் (bio-design) என்ற ஒரு புரோகிராம் வழங்குகிறார்கள். இந்த புரோகிராம் மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், மேனேஜ்மென்ட் படிப்பவர்கள், இலவசமாக மேற்படிப்பு படிப்பதுடன், மாதத்துக்கு 25,000 ரூபாய் உதவி தொகையும் பெறலாம்.

* மும்பை, கோரக்பூர், டெல்லி, சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி நிறுவனங்கள் மற்றும் பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எஸ்.சி (Indian Institute of Science) போன்ற நிறுவனங்கள் உலக அளவில் பல முன்னணி பல்கலைக்கழகங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். எம்.எஸ்ஸி படித்த மாணவர்களும், மேலே சொன்ன ஐ.ஐ.டி-களில் நடத்தப்படும் GATE நுழைவுத் தேர்வை எழுதலாம். மாதம் குறைந்தது 25,000 ரூபாய் உதவி தொகையுடன் படிக்கலாம். 

* பி.இ, பி.டெக் முடித்த பின்பு, அதே துறையில் மேற்படிப்பு படிக்க  நினைக்கும் மாணவர்கள்,  ஜி.ஆர்.இ (The Graduate Record Examination) எழுதி, சென்டம் வாங்கி தேர்வாக வேண்டும். தாய்மொழி ஆங்கிலம் இல்லையென்றால் TOEFL தேர்வு எழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்க வேண்டும். இதுபோக ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸில் மாணவர்களின் செயல்திறன் அவுட்ஸ்டாண்டிங்காக இருக்க வேண்டும்.

மேலும், யூ.ஜி-யிலும் அதிக மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். இவர்கள் வெளிநாட்டின் பல முன்னணி பல்கலைகழகங்களில்  இலவசமாகப் படிக்க முடியும். இதை பற்றிய மேலதிக தகவல்களுக்கு ets.org  என்ற தளத்தை அணுகலாம்.

* மேனேஜ்மென்ட் படிப்பதாக இருந்தால் `ஜி மேட்’ (graduate management aptitude examination) எழுதி,  அதிக மதிபெண் எடுத்து,  TOEFL தேர்வும் எழுதி, அதிலும் அதிக மதிப்பெண் பெற வேண்டும். தேர்வாகும் மாணவர்கள்,  அமெரிக்காவில் இருக்கும் சிறந்த நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் படிக்கலாம்.

எந்த வயதில் வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பலாம் ?


17 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு சென்று படிக்க நான் பரிந்துரைப்பது இல்லை. காரணம், இந்த வயதில் சரியான பக்குவம் இருக்காது. இங்கு நாம் `தவறு’ என்று சொல்வது எல்லாம், வெளிநாட்டில் `சரி’ என்று இருக்கும். மாணவர்களை வழிநடத்த ஆட்கள் இருக்கமாட்டோம். ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். எனவே, பொதுவாக பி.ஜி., அதற்கு மேற்பட்ட படிப்புகளுக்கு வெளிநாடு செல்வதுதான் நல்லது.

வெளிநாட்டில் மருத்துவம் பயில்வது நல்லதா?


வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பதில் பெரிய பயன் ஏதும் இல்லை. அங்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் சரியான பயிற்சி வசதி கிடையாது. மேலும் இங்கு படித்து வரும் மாணவர்கள் பலர், இந்திய மருத்துவ கவுன்சில் (medical council of india) நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுவது இல்லை. இன்று அந்த தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் விகிதம் ரொம்ப குறைவாகத்தான் இருக்கிறது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு, நாடு திரும்பும் மாணவர்கள் பலருக்கு, நோயாளிகளைச் சரியாக கையாளத் தெரிவதில்லை. அதனால், அவர்களை இங்கு குறைந்த சம்பளத்திலேயே பணியில் அமர்த்துவார்கள். மேலும், வெளிநாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் பலவும்  சமீபத்தில் ஆரம்பித்தாக இருக்கும். அதனால், பன்னிரண்டாவதுக்கு பிறகு வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கும் மோகம் வேண்டாம்!
(இது எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மட்டும்தான் பொருந்தும்.)

`GATE’ தேர்வு

ஐ.ஐ.டி-கள் வாயிலாக நடத்தப்படும் GATE தேர்வு எழுதி, அதிகபட்ச மதிப்பெண் எடுத்தால்...வெளிநாட்டில் இருக்கும் சிறந்த பல்கலைகழகத்தில் பணம் செலுத்தாமல் படிக்க முடியும். குறிப்பாக மும்பை, கோரக்பூர், டெல்லி, சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டி-கள் மற்றும் பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எஸ்.சி (Indian Institute of Science) போன்ற நிறுவனங்கள் உலக அளவில் பல முன்னணி பல்கலைகழகத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். கல்வியே ஒரு தலைமுறையின் எதிர்காலம் என்பதால் கல்வி, கல்லுாரி இவற்றை கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- கே.அபிநயா
படம்: 
எம். உசேன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்