வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (27/11/2015)

கடைசி தொடர்பு:16:10 (27/11/2015)

'மாற்றத்தை எங்களிடமிருந்து துவங்க விரும்பினோம்'

சில மாதங்களுக்கு முன் சென்னை “லஸ் கார்னர்” பேருந்து நிறுத்தத்தை சுவரொட்டிக்குள் தான் தேட வேண்டும். அந்த அளவுக்கு சுவரொட்டிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது பேருந்து நிறுத்தம். ஆனால் இன்று அதே பேருந்து நிறுத்தம் வண்ணம் பூசப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த அசாத்திய மாற்றத்துக்கு காரணம் ‘துவக்கம்’ எனும் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வ அமைப்பு. அந்த அமைப்பின் நிறுவனர் கிருஷ்ண குமாரிடம் பேசினோம்.


“கல்லூரி காலத்திலிருந்தே எனக்கும் என் சக நண்பர்களுக்கும் நாம் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் விதத்தில் பயன்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. எல்லா குறைகளுக்கும் மாற்றத்தை எதிர்பார்க்கும் நாம், அதை நம்மிடமிருந்து ஆரம்பிக்க ஏனோ தயாராக இல்லை. நாங்கள் எங்களிடமிருந்து மாற்றத்தை துவங்கினோம். ஆரம்பத்தில் கிண்டல்களும், கேலிகளும் தான் பரிசாக கிடைத்தன. பின் நாளடைவில் உண்மையிலே பலரின் பாராட்டு பரிசாக கிடைத்தன. 7 நபர்களுடன் துவங்கப்பட்ட எங்கள் அமைப்பு இன்று 80 நபர்களுடன் செயல்படுகிறது. ஆரம்பத்தில் குறைகளை தேடிச் சென்ற எங்களுக்கு இன்று பல பகுதிகளிலிருந்து மக்கள் அவர்கள் குறைகளை தீர்க்க அழைக்கிறார்கள்” என்றார்.

இதுவரை என்னன்ன பொது சேவைகளை செய்து உள்ளீர்கள்?

மயிலாப்பூர் மேக் ஓவர்” என ஒரு திட்டத்தை தீட்டி மயிலாப்பூர் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு செடிகளை நட்டோம். இன்றும் மாதத்துக்கு இருமுறை நட்ட செடிகளை பராமரித்து வருகிறோம். அதன் பின்  "கிளீன் அஃப் அப்டர் டார்க்” எனும் திட்டத்தை செயல்படுத்தினோம். அதன் படி  மாதம் இருமுறை இரவு நேரத்தில் ஏதேனும் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை தேர்ந்தெடுத்து அதை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி, சுவரொட்டிகளை கிழித்து, வண்ணம் பூசி புதுப்பொலிவு அடைய செய்வோம். இதுவரை மயிலாப்பூர் லஸ் கார்னர் பேருந்து நிறுத்தம், ஆழ்வார்பேட்டை பேருந்து நிறுத்தம், மந்தவெளி பேருந்து நிறுத்தம் ஆகியவைக்கு புதுப்பொலிவு தந்து உள்ளோம். எங்கள் அமைப்பு நிறுவப்பட்டு ஒரு வருடம் நிறைவேறியதை அடுத்து எங்கள் அமைப்பினர் உடல் உறுப்பு தானம் செய்தோம். இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த 108 பேர்  தானம் செய்தார்கள். இது தவிர எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பிறந்தநாள் என்றால் நிச்சயம் ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று ஒரு நாள் உணவு செலவை ஏற்போம்.

பகுதிவாசிகள் மத்தியில் உங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது?

உண்மையில் நல்ல சப்போர்ட் கிடைத்தது. எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள். நாங்கள் என்னதான் கஷ்டப்பட்டு சுவரொட்டிகளை அகற்றினாலும் மீண்டும் அடுத்த நாளே ஏதாச்சும் அரசியல் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருக்கும். இதை அந்த பொது மக்களே அகற்றுவார்கள். நாங்கள் திருத்தி கொடுத்ததை பகுதிவாசிகள் பராமரிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு பெரிய வெற்றி தான்.

வருங்காலத்தில் அரசியல் வரும் நோக்கம் உள்ளதா?

இதுவரை அப்படி எதுவும் இல்லை. இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது சாத்தியமும் இல்லை. ஆனால் அதுவும் பொது சேவை தானே. வருங்காலத்தில் அரசியல் சூழல் மாறினால் பார்க்கலாம்.

-பி.நிர்மல் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்