ஐ. எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய சென்று, லிபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சென்னை வாலிபர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த முகமது நஷீர் பக்கீர் முகமது என்ற வாலிபர் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார். கடந்த மே மாதம் இவர் துபாய் சென்றுள்ளார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் 'மேட் முல்லா' என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் வழியாக முகமது பஷீர், ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதற்காக சூடான் வழியாக லபியா செல்ல முயற்சித்துள்ளார்.
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் கூறுகையில், '' நஷீரின் தந்தை துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு நஷீர் துபாய் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்த சமயத்தில் ஐ. எஸ். இயக்கத்துடன் அவருக்கு இணையம் வழியாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. லிபியாவுக்கு செல்வதற்கு முன்பு அவருக்கு சூடானில் பயிற்சி அளிக்கப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு பிடிபட்ட முகமது நஷீர் இந்தியாவுக்கு அனுப்பபட்டுள்ளார். அவரை டெல்லி விமான நிலையத்தில் நாங்கள் கைது செய்துள்ளோம்" என்றார்.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, இதுவரை ஐ.எஸ் இயக்கத்தில் 23 இந்தியர்கள் இணைந்துள்ளனர். அதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 60 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
