
ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகம்மது கில்மி (48), சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் என்ற இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரக்கத்நிஷா, மகன் வாசிம் அக்ரம், மகள் அம்ஷத்நிஷா ஆகியோர் ஏர்வாடியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் பகுதியில் ஏமன் நாட்டை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முகம்மது கில்மி பலியாகியுள்ளார். இந்த தகவலை, சவுதியில் வசித்து வரும் கில்மியின் மைத்துனர் அப்பாஸ் அலி, ஏர்வாடியில் உள்ள முகம்மது கில்மியின் குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கிறார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் முகம்மதுகில்மி ஏர்வாடிக்கு வந்து சென்றிருக்கிறார். இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் கில்மி உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரை துக்கமடைய செய்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கில்மியின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது உறவினர்கள் ‘‘முகம்மது கில்மியின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். இதனால்தான் தனது குடும்பத்தை பிரிந்து நாடு கடந்து சென்று கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த வருவாயில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முகம்மது கில்மியின் உடலை இங்கு கொண்டு வர கூட அவரது குடும்பத்தினரிடம் வசதி கிடையாது. எனவே, சவுதியிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான முகம்மது கில்மியின் குடும்ப நிலை கருதி அவரது மகனுக்கு அரசு பணி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சவுதி அரசிடம் இருந்து நிவாரண நிதியினையும் தாமதம் இன்றி பெற்று தரவேண்டும்’’ என்றனர்.
தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி என்பவரும் பலியாகியுள்ளார்.
இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி